

கடவுள்களும், கோவில்களும் காலம் காலமாக இருந்து வந்தாலும் இன்றைய நவயுகத்தில் ஆன்மீக உணர்வு அதிகப்படியான மக்களை ஆக்கிரமித்து இருப்பது ஆச்சரியமிக்கது மட்டுமல்ல வரவேற்கத்தக்கதும்தான்.
பக்திப் பரவசமெல்லாம் சரிதான்…ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டில்லையா? இன்றைய ஆன்மீக விழாக்களில் பக்தியைத் தாண்டிய ஒரு ஆடம்பரம் கலந்துவிட்டதோ?
மைக், சீரியல் செட் , பாட்டு, கூத்து எல்லாம் கிராமிய விழாக்களில் இருந்து தழுவி வந்ததுதான். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் இவை ஒவ்வொன்றின் பயன்பாடும் பூதாகாரமாகப் பெருகியுள்ளன.
கிராமங்களில் ஊருக்கு ஒரு முக்கியக் கோயில். இன்று நகரங்களில் தெருவுக்கு ஒன்று, இரண்டு எனக் கோயில்கள் பெருகிக் கொண்டே போகின்றன.
பழம்பெரும் கோயில்களும் , அவற்றின் தூண்கள் தாங்கி நிற்கும் அற்புதமான சிற்பங்களும் கவனிப்பார் இன்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன. புதுக்கோயில்கள் கட்டுவதை விடுத்து இருப்பவற்றை புனரமைக்கலாமே ?
தமிழ் மாதங்களில் ஆடியும், புரட்டாசியும், பண்டிகைகளில் விநாயக சதுர்த்தியும் ..அப்பப்பா ..நம் மக்கள் கைகளில் சிக்கி படாதபாடுதான் படுகின்றன.
இந்தக் கொண்டாட்டங்களில் பகட்டும், ஆடம்பரமும் தாண்டி இருக்கும் யதார்த்தச் சிக்கல்களை விழா எடுக்க முனைவோர் அதிலும் முக்கியமாக போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் நகர மக்கள் உணராமல் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது.
போக்குவரத்து நிறைந்த சாலையில் கோவில் விழா எடுக்க… கண்களை கூசும் வகையில் ஒளிர்ந்து அணையும் விளக்குகள்…. இதயம் அதிர்ந்து ஸ்தம்பிக்கும் வகையிலான ஸ்பீக்கர் செட்டுகள் ….மெயின் ரோட்டில் பால் குடம் எடுத்தல்.. அம்மன் தீ மிதி …. போன்ற நிகழ்வுகள் …. மற்றவர்களுக்கு இடையூறு செய்கிறார்களே என்று வேதனைதான் பெருகுகிறது.
பல சமயங்களில் தேவையற்ற இந்த ஆடம்பரங்களும், ஆர்ப்பாட்டங்களும், விபத்துகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாகவும் அமைகின்றன.
சமீப காலமாக ஊர் கூடி கொண்டாடப்படும் பொது விழாக்களில் பக்தியைத் தாண்டி “நீ பெரிதா நான் பெரிதா” என்ற வகையிலான போட்டி மனப்பான்மை உலவி வருவது வருந்துதற்குரியது.
அடுத்ததாக….
பரிகாரம் என்ற பெயரில் நீர் நிலைகளை மாசுபடுத்தும் நிகழ்வு இன்றும் பல கோயில்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கோயில்களில் அர்ச்சனை செய்ய அர்ச்சனைப் பொருட்கள் வாங்கிச் செல்வதிலும் அசௌகரியங்கள் உண்டு.
இங்கே, என் சொந்த அனுபவம் ஒன்றைப் பகிரப் போகிறேன். சில வருடங்களுக்கு முன், பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் ஒன்றில் பெருமாளுக்குச் சாற்ற துளசி மாலை வாங்கிச் சென்றேன். என் கையிலிருந்து வாங்கி அருகிலிருந்த கூடையில் போட்டார்கள், மனம் வெதும்பினேன். அன்றே ஒரு முடிவு செய்தேன்... இம்மாதிரி பெரிய கோயில்களுக்கு அர்ச்சனைப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து உண்டியலில் இயன்ற காணிக்கையைச் செலுத்தி விடுவது என்று.
இது கூடப் பரவாயில்லை, சென்ற வாரம் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயிலுக்குச் சென்ற போது…. கண்ணால் பார்த்ததாக ஒருவர் சொன்ன சேதி…. அய்யோ இப்படியுமா?
காலையில் பெருமாளுக்கு சாற்றிய மாலை மதியமே, பூ விற்பவரிடம் போய் மறுபடியும் விற்பனையாகுமாம். கடவுளே… என் காதில் விழுந்த இந்தச் செய்தி பொய்யாகவே இருக்க நீதான் அருள் புரிய வேண்டும்.
அன்னதானம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கோயில் பிரசாதமாக சிறு தொன்னைகளில் கொடுக்கும்போது வீணாகாத உணவு, பெரிய பாக்கு மரத்தட்டுகளில் கொடுக்கப்படும்போது மிதமிஞ்சி வீணாகுவது அதிகரிக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சோ?
ஆனாலும் மாற்றி யோசித்தால் அளவுக்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ளலாமே!
மிதமிஞ்சிய ஆடம்பரங்கள் தவிர்த்து அமைதியுடன் எளிமையாக இறைவனை வழிபடுதலே சிறந்த பக்தி என்று உணரும் நாளும் வருமோ?