இந்த ஆண்டு மகா கும்பமேளா பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் ஏராளமான சாதுக்கள், நாக சாதுக்கள், சாமியார்கள், அகோரிகள் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதில் நாக சாதுக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கூனி நாகசாதுக்கள் என்ற பிரிவினர் உள்ளனர். இவர்களை கும்பமேளாவில் மட்டுமே பார்க்க முடியும்.
நாக சாதுக்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர். எப்போதும் மறைவான இடத்தில் வாழும் நாக சாதுக்கள் கும்பமேளா, மஹா கும்பமேளா போன்ற புனிதமான காலங்களில் மட்டுமே வெளியே வருகின்றனர். ஒருவர் நாக சாதுவாக மாற தினசரி மிகக் கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் தங்களின் புற அழகைப் பற்றி கவலைக் கொள்வது இல்லை. அவர்கள் வாழ்க்கையில் அனைத்தும் துறந்தவர்கள். நாக சாதுக்கள் மற்ற மனிதர்களிடம் காணப்படும் உள்ள உணர்ச்சிகளை தியாகம் செய்தவர்கள், பிறரின் மதிப்பையும், சமூகத்தை பற்றியும் எந்த எண்ணங்களும் இல்லாதவர்கள். இவர்கள் தங்களது உடை பற்றி யோசிப்பது இல்லை.
அழுக்கான உடல், சடைப் பிடித்த முடிகள், நீண்ட தாடிகள் என நாக சாதுக்களின் தோற்றம் இருந்தாலும், அவர்களின் எண்ணம் எப்போதும் இறைவனை அடைவது மட்டும் தான். அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. மற்றவர்களை சார்ந்து வாழாததால் இவர்களுக்கு எவரின் தயவும் தேவையில்லை. இவர்களுக்கு அபரிமிதமான தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. நாக சாதுவாக மாறிய பிறகு அதீத கடவுள் நம்பிக்கையையும், கடுமையாக விதிமுறைகளையும் பின்பற்றி வருபவர்கள் 'கூனி நாக சாதுக்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.
கூனி நாக சாதுக்கள்:
ஒருவர் நாக சாது ஆவதற்கு முன், சாதுக்களைப் போல வாழ வேண்டும். கடினமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவர் நாக சாதுக்களுடன் சேர்ந்து மூன்று ஆண்டுகள் சிவபெருமானுக்கு சேவை செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் அவரது பிரம்மச்சரியமும் சோதிக்கப்படுகிறது. ஒரு சாது பிரம்மச்சரியத்தை முழுமையாக கடைப்பிடித்து விட்டால் அவர் நாக சாதுவாக மாற தகுதி பெற்றவர் ஆகிறார். ஹரித்வார், உஜ்ஜைனி மற்றும் பிற முக்கியமான புண்ணிய தலங்களில் தீட்சை பெற்றவர்கள் நாக சாதுக்கள் ஆகின்றனர்.
கூனி நாக சாதுவாக மாறுபவர்கள் பல இரவுகள் 'ஓம் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, அகடாவின் தலைவர் மகாமண்டலேஸ்வர் அவருக்கு விஜய ஹவனம் செய்வார். அதன் பின் ஷிப்ரா நதியில் 108 முறை நீராட வேண்டும். பின்னர் உஜ்ஜயினியில் நடக்கும் கும்பமேளாவின் போது, நாக சாதுக்கள் முன் தனது பிரம்மச்சரிய விரதத்தை இறுதிவரை தொடர ஆசைகளை முற்றிலும் துறக்க வேண்டும். உஜ்ஜயினியில் தீட்சை பெற்ற ஒரு சாது கூனி நாகசாது என்று அழைக்கப்படுகிறார். ஹரித்வாரில் தீட்சை பெற்ற சாது, பர்பானி நாகசாது என்று அழைக்கப்படுகிறார்.
கூனி நாக சாதுக்கள் மற்ற எல்லா நாக சாதுக்களையும் விட அதிக தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளனர். இவர்களைப் பொறுத்த வரை இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை. தங்கள் பக்திக்கு ஒரு தொல்லை என்றால் தங்கள் உயிரை தியாகம் செய்யவும், யாரையும் பலி கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். கூனி நாகசாதுக்களை ராணுவம் என்று கூட அழைக்கின்றனர். இவர்கள் உடலில் திருநீறு, குங்குமத்தை பூசிக்கொண்டு ருத்ராட்சம் அணிகின்றனர். நாக சாதுக்கள் அனைவரும் கும்பமேளா நிறைவடைந்ததும் மனித நடமாட்டம் இல்லாத மலைகள் காடுகளுக்கு சென்று தங்கள் இறைப்பணியை தொடர்கிறார்கள்.