எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பது சளி, இருமல் போன்ற பல நோய்களைக் குணப்படுத்தவும், உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உடல் எடை குறையவும் உதவுகிறது. லெமன் ஜூஸுடன் தேன் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. எலுமிச்சையில் வைட்டமின் C அதிகம். தேன் ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இவை இரண்டும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கவும், சளித் தொல்லையிலிருந்து விடுபடவும் உதவும்.
2. எலுமிச்சையில் இருக்கும் அமிலத் தன்மை வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும். தேன் ஜீரண மண்டலப் பாதைக்கு இதமளிக்கவும் சீரான செரிமானத்துக்கு உதவக் கூடிய சூழலை உருவாக்கும். இதனால் வயிற்றிற்குள் வீக்கம், அஜீரணம் போன்ற கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பில்லாமல் போகும்.
3. லெமன் ஜூஸ் மற்றும் தேன் இரண்டும் உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவி புரியும். சருமத்தை ஆரோக்கியமாய் வைக்கவும், அனைத்து உடல் இயக்கங்களும் சிறப்பாக நடைபெறவும் உதவும்.
4. கல்லீரலிலிருந்து நச்சுக்கள் வெளியேற லெமன் உதவி புரியும். தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவி செய்கின்றன.
5. லெமனில் உள்ள வைட்டமின் C சுருக்கமில்லாத பளபள சருமம் பெற உதவும். தேன் இயற்கை முறையில் சருமம் ஈரத்தன்மையுடன் விளங்க உதவி புரியும். இரண்டும் சேர்ந்து அப்பழுக்கற்ற இளமைத் தோற்றத்துடன் சருமம் பொலிவுற உதவி செய்யும்.
6. அமிலத்தன்மை கொண்ட லெமன், உடலில் காரத்தன்மையுடன் செயல்படவும் கூடும். தேனுடன் இணைந்து உடலின் pH அளவை சமநிலையில் வைத்துப் பராமரித்து உடல் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கும்.
7. கல்லீரலின் சிறப்பான செயல்பாட்டிற்கு லெமன் உதவும். தேன் இயற்கையான இனிப்புச் சத்தை வழங்கி உடலுக்கு சக்தி கிடைக்க உதவும். லெமன் ஜூஸும் தேனும் இணைந்து உடலுக்கு ஒரு அற்புதமான பானம் அருந்திய திருப்தியைத் தரும்.
8. லெமன் பசி உணர்வைத் தடுக்கவும் மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும் உதவும். தேன் எடை குறைப்பிற்கு உறுதுணையாக செயல்படும்.
9. தேனின் ஆன்டி பாக்டீரியல் குணங்கள் சுவாசப் பாதை இதம் பெற உதவும். லெமன் ஜூஸ் சளியை வெளியேற்றி சுவாசப் பாதையில் கோளாறு ஏதுமின்றி சுகமாக இயங்கச் செய்யும்.