ஆஸ்திரேலியாவில் என்றும் இல்லாத அளவிற்கு மிக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
உலகம் முழுவதுமே பல நாடுகளில் காலநிலை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்து வருகிறது. எப்போதும் கடுமையாக வெயில் அடிக்கும் பகுதிகளில் மழையும், மழை பெய்யும் பகுதிகளில் வெய்யிலும் என சீரற்ற காலநிலை இருந்து வருகிறது. பாலைவனத்தில்கூட மழை நீர் தேங்கியிருந்தது. இதற்கு காரணம் எல் நினோ நிகழ்வு என்று கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் இயற்கையின் கோரத் தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. சில மாதங்களாக தென்னிந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. வட மாநிலங்களில் பலத்த குளிர் அலை வீசி வருகிறது. அதேபோல் அமெரிக்காவில் காட்டுத்தீ கோடிக்கணக்கான மதிப்பில் சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து அதிகனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் என்றும் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக அங்குள்ள சிட்னி நகரில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியதில் அங்குள்ள பாரமாட்டா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.
மேலும் குடியிருப்புகள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. வெள்ளம், இடி, மின்னல் காரணமாக ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக அங்குள்ள சிட்னி நகர் மின்நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்து காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது. தொடர்ந்து இரவு முழுவதும் மின்சார விநியோகம் தடைபட்டதால் 1¼ லட்சம் வீடுகள், முக்கிய கட்டிடங்கள் இருளில் மூழ்கின. கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்தார். மாயமான 2 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், தற்போது ஆஸ்திரேலிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.