விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வரும் நிலையில், தற்போது மத்திய அரசு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது மிரட்டல் விடுபவர்களுக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல் என்பது தொடர்க்கதையாகி வந்தது. இதனையடுத்து சமீபக்காலமாக விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வருகிறது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. இதனால், விமானம் தாமதமாக புறப்படுவது போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே இத்தகைய மிரட்டல் விடுவோருக்கு எதிராக, விமானங்களில் பறக்கத்தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கு வசதியாக சட்டங்களில் திருத்தம் செய்யவும் பரிசீலித்து வருகிறது. ஆனாலும் இந்த மிரட்டல்கள் தொடர்க்கதையாகி வருகின்றன.
இப்படியான நிலையில், விமானத்தில் வரும் வெடிகுண்டு மிரட்டல்களை குறைக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் ஒரு புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
விமானம் (பாதுகாப்பு) விதிகள், 2023ல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்படி, விமானம் மற்றும் வானூர்தி அல்லது சிவில் விமான வசதிகளை பாதிக்கும் தவறான தகவல்களைத் தொடர்புக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் பணியாளர்கள் மற்றும் பயணிகள் ஆகியோருக்கு அச்சத்தை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது.
விமானப் பாதுகாப்பு விதிகளின் பிரிவு 29Aயில் ஒரு விதியும் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதாவது ஒழுங்கீன செயல்கள் மற்றும் பயணிகளை அச்சப்படுத்தும் விதமாக செயல்படும் தனி நபர் அல்லது குழுவை வெளியேற்றுவதற்கான உரிமை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரலுக்கு உண்டும் என்றும், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு 1 கோடி அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.