

ஏமி ருசிரா, ராமா! நீ நாமம் எந்த ருசிரா!
வேறு எந்த கடவுளரின் நாமத்தையாவது இவ்வளவு சிறப்பித்து சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளும், ஸ்ரீ பத்ராசல ராமதாசரும் பக்தியில் உருகி உருகிப் பாடி துதித்த ஸ்ரீ ராம நாமத்திற்கு தான் இப்பேர்ப்பட்ட மகிமை!
ஸ்ரீ ராமர் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை உங்களுக்குத் தெரியுமா?
“நவமி திதி அன்றும் அஷ்டமி திதி அன்றும் நல்ல காரியத்தை செய்ய மக்கள் முன் வர பயப்படுகிறார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இது எங்களுக்கு மிக்க வருத்தத்தை அளிக்கிறது” என்று மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள் அந்த இரண்டு திதிக்கான புருஷர்களும்.
“உங்கள் இருவரையும் காலம் முழுவதும் போற்றி கொண்டாடும் நாள் வரும். அதுவரை சற்றே பொறுத்திருங்கள்” என்றார் பகவான் ஸ்ரீ விஷ்ணு. இதன் படியே அஷ்டமி அன்று எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தையும், நவமி அன்று ஸ்ரீ ராம அவதாரத்தையும் எடுத்தார். இதன் அடிப்படையில் தான் நாம் கோகுலாஷ்டமியை ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நாளாகவும், ஸ்ரீ ராமநவமியை ஸ்ரீ ராமர் பிறந்த நாளாகவும் கொண்டாடி வருகிறோம்.
தசாவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் ஏழாவது அவதாரம். இந்த திருஅவதாரம் சித்திரை மாதம் நவமி திதியில் புணர்பூச நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. ஸ்ரீ ராமர் சரயு ஆற்றங்கரையில் உள்ள கோசல நாட்டில் தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாக பிறந்தார். இந்த ஸ்ரீ ராமஜென்ம புண்ய பூமி இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் அமைந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அங்கே குழந்தை ராமருக்கு ‘ஸ்ரீ ராம் லல்லா மந்திர்’ கட்டப்பட்டு கோலாகலமாக வழிபாடு செய்யப்படுகிறது.
ஸ்ரீ ராம அவதாரத்தின் விசேஷம் என்ன? ஒரு மனிதனாக இந்த பூமியில் அவதரித்து, மனிதர்கள் போல எல்லா இன்ப துன்பங்களையும் தானும் அனுபவித்து வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர். அவர் சுகம், துக்கம் இரண்டையும் ஒன்றாக பாவித்தார். ‘காட்டுக்கு போ!’ என்ற போதும், ‘அரசாட்சியை ஏற்றுக் கொள் !’ என்ற போதும் இரண்டையும் சமமாக பாவித்து பணிவோடு நடந்து கொண்டார்.
ஸ்ரீ ராம நாமத்தின் சிறப்பை கம்பர், கம்பராமாயணத்தில்,
‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமுமின்றி தீருமே
இம்மையே, இராம என்ற இரண்டெழுத்தினால்’
என்று அழகாக கூறுகிறார். இப்பேர்ப்பட்ட பெருமையுடைய ஸ்ரீ ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் ஸ்ரீ ஹனுமான் கூப்பிய கரங்களுடன், கசிந்த கண்களுடன் பக்திப் பரவசமாய் வீற்றிருப்பாராம். ஸ்ரீ ராமரால் சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட ஆஞ்சநேயருக்கு வீரம், மனோபலம், வாக்கு வன்மை எல்லாமே ராம நாமத்தின் மகிமையால் கிடைத்தது.
ஸ்ரீ பத்ராசல ராமதாசர் ராமநாமத்தை ‘ஒ ராம நீ நாமம் ஏமி ருசிரா! ஸ்ரீ ராம நீ நாமம் எந்த ருசிரா!’ என்று அனுபவித்து பாடியிருக்கிறார். இவ்வளவு சிறப்பான இந்த ராம நாமத்தை நம் மகான்கள் போற்றி மக்களை ‘நாம ஜெபம்’ மட்டுமில்லாமல் ‘லிகித ஜெபமும்’ செய்ய ஊக்குவித்தார்கள். ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்றும் ‘ராம ராம’ என்றும் எல்லோரும் பக்தியுடன் எழுதுகிறார்கள். ஸ்ரீ ராம நவமியன்றும் ராம நாமத்தை ஜெபிப்பதும் எழுதுவதும் நமக்கு மிகுந்த நன்மையளிக்கும்.
ராம நாமத்தின் மகிமை தான் எப்பேர்ப்பட்டது? காசியில் இறந்தால் முக்தியளிக்கும் தலம் என்பார்கள். காசியில் எந்த ஜீவன் இறந்தாலும் உடனே பார்வதி தேவி ஓடி வந்து அந்த ஜீவனின் சிரசை தன் மடியில் வைத்துக் கொள்ள, சிவபெருமான் அந்த ஜீவனின் வலக்காதில் ராம நாமத்தை ஓதுவாரம்.
ஸ்ரீ ராமர் அவதரித்த ஸ்ரீ ராம நவமி இந்த வருடம் மார்ச் மாதம் 27-ம்தேதி வருகிறது. இவருக்கான நைவேத்தியம் மிக மிக எளிமையான பானகமும், நீர் மோரும் தான். நாமும் அன்று ஸ்ரீ ராம நாமத்தை நாமஸ்மரணை செய்து, ஸ்ரீ ராமர் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு துதித்து, இந்த அவதார தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம்.