உலக கடித தினம்: அன்புள்ள அம்மாவுக்கு… ஆசையில் ஒரு கடிதம்...

Boy writing letter to his mom
A boy writing letter
Published on

அன்புள்ள அம்மாவுக்கு…

நலம் நலமறிய ஆவல். நீங்கள் என்னையும், தம்பியையும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தினாலும், வசதியாக வாழ்ந்து தாழ்ந்து விட்ட சூழ்நிலையாலும் எங்களை இந்த போர்டிங் பள்ளியில் சேர்த்து விட்டீர்கள்.

சேர்ப்பதற்கு கூடவே வந்த பெரியப்பா சொன்ன ஒரே ஆறுதல் வார்த்தை, அவ்வப்போது உங்களை வந்து பார்த்து கொள்வேன் என்று சொன்னது பிடித்தமாய் இருந்தது.

புதிய இடம், மாணவர்கள் அதிகம் புழங்கும் இடம், அவரவர்களுக்கு தனித்தனி கப்போர்டுகள் என்று ஒதுக்கி கொடுத்துள்ளார்கள். காலை 5:00 மணிக்கு மணி அடித்து விடும். எல்லோரும் எழுந்து விட வேண்டும்.

காலையிலேயே “இன்றைய பொழுது நல்லவையாக நடக்க வேண்டும்” என்ற பிரார்த்தனையை ஒரு மாணவன் சொல்ல, அதை நாங்களும் திரும்பச் சொன்னோம்.

பிறகு, காலைக் கடன்களைக் கழிக்க பாலாற்றங்கரை யோரம் ஒதுங்கினோம். அது புது விதமாகவும், விசித்திரமாகவும் பட்டது. பாலாற்றின் நீர் பளிச்சென்று இருந்தது. அது சலசலவென்று ஓடும் சத்தம் மிக நன்றாக இருந்தது. ஆற்றுக்குள் காலடி வைத்தால் மீன் குஞ்சுகள் காலைக் கௌவின.

நம்மூரில் இது போன்ற அனுபவம் கிடைக்காது. காலைக்கடன்கள் கழித்து வந்த பிறகு, எல்லோரும் வரிசையாக அமர்ந்து அவரவர் பாடங்களைப் படிக்க வேண்டும் என்று வார்டன் உத்தரவு பிறப்பித்தார். அவ்வப்போது கண்காணிக்கவும் செய்தார். இது காலை ஏழு மணி வரைக்கும் நடைபெற்றது.

“எல்லோரும் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு வரச் சொன்னார்கள்.” குளித்தபின் எங்கள் துணிமணிகளை நாங்களே தோய்த்துக் கொண்டோம். தம்பிதான் மிகவும் சிரமப்பட்டான். அவனுக்கு ஒன்றும் புரியாமல் தடுமாறினான்.

எட்டு மணிக்குக் காலை மணி அடித்தது. “அது பிரார்த்தனை நேரம்” என்று பழைய மாணவர்கள் சொன்னார்கள். பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அமர்ந்து வள்ளலாரின் “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை” என்ற பாடலைப் பாடினார்கள். இது உங்கள் பிரிவை கொஞ்சமாக குறைத்து இருந்தாலும், உங்கள் முகம் என் முகத்தின் முன்னாலே இருப்பது போலவே தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
களிமண் பிள்ளையார்
Boy writing letter to his mom

பிரார்த்தனை முடிந்தவுடன், காலை உணவிற்கு வரிசையாக அழைத்துச் சென்றனர். அவரவர்களுக்குத் தனித்தனி தட்டில் உணவு பரிமாறினார்கள். தட்டில் பரிமாறிய உணவைப் பார்த்தவுடன் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால் நாம் வீட்டில் சாப்பிடும் அரிசி உணவல்ல அது, கோதுமை உணவு. கோதுமையைக் கஞ்சியாகக் காய்ச்சி எல்லோருக்கும் பரிமாறினார்கள். தொட்டுக்கொள்ள காரமான மிளகாய் ஊறுகாய்.

முதல் நாள் என்பதால் அதன் சுவையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், கொஞ்சமாக வாங்கிச் சாப்பிட்டு என்னை அந்த சூழ்நிலைக்குத் தயார்படுத்திக் கொண்டேன். தம்பிதான் சாப்பிட முடியாமல், பட்டினி இருக்கவும் முடியாமல் மிகவும் தடுமாறுகிறான்.

சாப்பிட்ட பின் அனைவரும் பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு வரிசையாகப் பள்ளிக்குச் சென்றோம். பின்பு மதிய உணவு இடைவேளை வந்த பின் உணவு சாப்பிட்டோம். இப்போது தயிர் சாதம் பரிமாறினார்கள். சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்குச் சென்று படித்துவிட்டு மாலை நான்கு மணிக்கு போர்டிங் திரும்பினோம்.

நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை “எல்லோரும் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்” என்றார்கள். ஆனால், ஆங்காங்கு மாணவர்களைக் கண்காணிக்க பழைய மாணவர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

விளையாடி முடித்துவிட்டு, ஆறு மணிக்கு மீண்டும் பிரார்த்தனை நேரம். அனைவரும் இறைவனைத் துதித்து பாடல்கள் பாடினோம். பின்பு அவரவர் பாடங்களைப் படிக்கச் சொன்னார்கள். இது இரவு எட்டு மணி வரை நடைபெற்றது. மீண்டும் இரவு உணவு. இப்போது சாம்பார் சாதம் பரிமாறினார்கள். அதில் நிறைய காய்கறிகள் இருந்தது.

சாப்பிட்டு முடிந்து அவரவர் இருப்பிடம் சேர்ந்த பின் மீண்டும் இறைவணக்கம் நடைபெற்றது. அனைவரும் தூங்கச் சென்றோம். இது வழக்கமான நடைமுறை என்றும், மாணவர்களைக் கட்டுக்கோப்பாகவும் ஒழுங்காகவும் கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்ற பள்ளியின் ஆரம்பகால நிறுவனர் ஏற்பாடு செய்த முறை என்றும், அவர் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல், பல பெரிய மனிதர்களிடம் நன்கொடைகள் பெற சென்னைக்குச் செல்ல வேண்டுமானால் சாப்பாட்டை கையில் கொண்டு சென்று ரயிலில் சாப்பிடுவாராம். மாணவர்களின் படிப்புக்காக எல்லோரிடமும் தயங்காமல் உதவி கேட்டுப் பெறுவதில் கூச்சப்பட மாட்டாராம்.

தங்களின் பிரிவு எங்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும், படிக்க வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் எங்களை இங்கு சேர்த்து விட்டதால், அதைக் கண்டிப்பாக நானும் தம்பியும் நிறைவேற்றுவோம். அங்கு தங்கைகள் இருவரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். சிரமங்களே நமது வாழ்க்கை என்று ஆன பிறகு, அதைச் சமாளித்து நல்ல நிலைமைக்கு ஆளாகிக் காண்பிப்போம்.

எங்களைப் பற்றிய கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் உடல் நலனையும், தங்கைகளையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் பதில் கடிதம் போடவும். பதில் கடிதத்தைப் பார்த்தால், உங்களைப் பார்த்தது போல ஆறுதல் கிடைக்கும்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்

இதையும் படியுங்கள்:
அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? படிக்கும் ரகசியம் இங்கே!
Boy writing letter to his mom

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com