
நமது இந்தியக் கல்வி முறை, நாம் எழுதும் தேர்வுகளில் நமக்குக் கிடைக்கும் மதிப்பெண்களை வைத்தே நம்மை அளவிடுகிறது. ஒருவர் நல்ல சிந்தனையாளராக, பலவற்றையும் அறிந்தவராக இருந்தாலும், எக்ஸாமில் குறைந்த மார்க் எடுத்தால், அவர் அடுத்த நிலைக்குச் செல்லவே தகுதியற்றவர் என்று ஒதுக்கப்பட்டுவிடுகிறார்.
இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நம்மைத் தயார் செய்து கொள்வதே புத்திசாலித்தனம். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை அள்ளி வருவது குறித்துப் பலரும் பல கருத்துக்களைக் கூறுவர். அதில் நமக்கு ஏற்புடையது எது என்பதை ஆய்ந்து, தெளிந்து, அம்முறையை உறுதியுடன் பின்பற்றினால் நிச்சயமாக அதிகமாக ஸ்கோர் செய்யலாம்.
உதாரணமாக, இரவு ஒன்பது மணிக்கே தூங்கி விழும் ஒருவர், ‘இரவு அமைதியில் படித்தால் அத்தனையும் மனதில் பதியும்’ என்று யாரோ ஒருவர் கூறிய அறிவுரையைப் பின்பற்ற முயற்சித்தால், தூக்கமும் கெட்டு, அடுத்த நாள் பகலும் தெளிவின்றி கழியும் என்பதை உணர வேண்டும். இரவில் சீக்கிரமாகவே தூங்கச் செல்பவர்கள், பிரம்ம முகூர்த்தமாகிய அதிகாலை நேரத்தைத் தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கேற்றவாறு தங்கள் படிக்கும் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருத்தமானது பிரம்ம முகூர்த்த நேரமாகிய காலை 4.30 மணியிலிருந்து 6.00 மணி வரை என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர் என்பதை நாம் கருத்தில்கொள்வதும் நல்லது. அந்த நேரமே அமைதியும், குளிர்ச்சியும் கொண்ட அற்புத நேரம் என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். அதற்காக, இரவில் படிப்பதே தனக்கு ஏற்றது என்று இரண்டு மணி வரை படித்தவர்கள் அதிகாலை எழும்ப வேண்டிய அவசியம் இல்லை! அது ஏற்புடையதும் அல்ல.
ஒரு சிலருக்கு இரவில் படிப்பதும், சிலருக்கு மாலையில் படிப்பதும், வேறு சிலருக்கு அதிகாலையில் படிப்பதும் பிடிக்கும். இங்கு பிடித்தமானது என்பதைத் தாண்டி எந்த நேரத்தில் படித்தால் மனதில் நன்கு பதிகிறதோ, அந்த நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். படித்து மனதில் இறுத்திக்கொள்ளவும் வேண்டும்.
அதிக மதிப்பெண் பெற, மிக முக்கியமானவை ஒரு சில ஸ்டெப்ஸ்தான்!
முதலாவதாக, சப்ஜெக்டை நன்கு புரிந்து மனதில் நிறுத்திக்கொள்ளுதல்.
இரண்டாவதாக, மனதில் பதிந்ததை நினைவில் கொண்டு வந்து பார்த்தல்.
ஒருவிதத்தில் இதை அசை போடுதல் என்று கூட அழைக்கலாம். படுத்துத் தூக்கம் வருமுன்னாலும், பஸ், ரயில் போன்றவற்றில் பயணம் மேற்கொள்ளும்போதும் இதனைச் செய்யலாம். இதை மேலும் சிறப்புடையதாக்க, ஒரு பாக்கெட் நோட்டை எப்பொழுதும் உடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் படித்தவற்றின் குறிப்பை மட்டும் மிகச் சுருக்கமாக (gist) குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நினைவுபடுத்திப் பார்க்கையில், எந்த முக்கிய பாயிண்டாவது ஞாபகத்திற்கு வரவில்லையென்றால், அந்தக் குறிப்பு நோட்டின் மூலம் அதை ஞாபகத்திற்கு கொண்டு வந்துவிடலாம். இப்படிச் செய்வதால் படித்ததை ரிவிஷன் செய்தது போலாகிவிடும். அதன் பிறகு மறக்கவே மறக்காது.
மூன்றாவதாக, வார, மாத, சர்ப்ரைஸ் தேர்வுகளின்போது சுட்டிக்காட்டப்படும் தவறுகளை, எப்பொழுதும் மறக்காதிருக்க வேண்டும். தேர்வுக்குச் செல்கையில் அந்தத் தவறுகள் மனதில் நிழலாடினால், மீண்டும் அந்தத் தவறுகளைச் செய்யவே மாட்டோம்.
யாம் ஆறாம் வகுப்பில் படித்தபோது, எமது தமிழாசிரியர் திரு. பண்டரிநாதன் அவர்கள் சர்ப்ரைஸ் டெஸ்ட் என்று வகுப்பிற்கு வந்ததும் அறிவித்து, இரண்டு, மூன்று நாட்கள் நடத்தியவற்றிலிருந்து கேள்விகளைக் கேட்டுப் பதில் எழுத வைப்பார். ரஃப் நோட்டில் தாள்களைக் கிழித்து எழுதச் செய்வார்.
அவ்வாறு யாம் எழுதிய ஒரு சர்ப்ரைஸ் டெஸ்டில், ‘விளிக்கிறார்’ என்று எழுதுவதற்குப் பதிலாக ‘விழிக்கிறார்’ என்று தவறுதலாக எழுதிவிட்டோம். வேறு எந்தத் தவறும், ஒற்றுப் பிழையும் கூட இல்லை. அவரோ, அந்தப் பிழையையும் கண்டுபிடித்துத் திருத்தி, 25-க்கு இருபத்து மூன்றே முக்கால் மார்க் அளித்திருந்தார்.
அந்தத் தவறு, யாம் எம்.ஏ., எழுதி முடிக்கும் வரையிலும், ஏன், இன்று வரை மனதில் நிற்கிறது. தேர்வு ஹாலுக்குச் சென்று அமர்ந்ததும் முதலில் ஞாபகத்திற்கு வருவது அதுவாகத்தான் இருக்கும். அதுதான் யாம் இளங்கலையில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் மாநில முதன்மையைப் பெற்றுத் தந்தது.
யாம் எம்.ஏ., படித்தபோது, விடுமுறை நாட்களில் விடுதியில் தங்காமல் உறவினர்கள், நண்பர்கள் என்று போய்க்கொண்டிருப்பேன். எனது ரூம்மேட் கமால் கூட, ‘என்னய்யா இப்படி அடிக்கடி வெளியில் போய்விடுகிறீர்?’ என்பார். நான் பயணம் செய்யும்போதெல்லாம் கூடவே பாக்கெட் நோட்டு பேண்ட் பாக்கெட்டில் இருக்கும்.
மனது அசை போட்டுக்கொண்டேயிருக்கும். தடுமாறும் வேளையில் பாக்கெட் நோட்டு பக்காவாக உதவும். அது பி ப்ளஸ் (B Plus) வாங்க உதவி செய்தது. யாம் படித்த காலத்தில் எம்.ஏ.,-யில் பி ப்ளஸ் வாங்குவது கடினம். 30 பேர் கொண்ட எம்.ஏ. வகுப்பில் இருவர் மட்டுமே பி ப்ளஸ் வாங்கினோம்.
பள்ளி, கல்லூரி நண்பர்களே!
மனதில் பதியும் நேரத்தில் படியுங்கள்.
படித்ததை அசை போடுங்கள். அதாங்க, ரிவிஷன்!
பாக்கெட் நோட்டில் குறிப்பு எழுதி வைத்து, மறந்தால் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.
சுட்டிக்காட்டப்படும் தவறுகளை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
அப்புறமென்ன? எல்லாத் தேர்விலும் ஹை ஸ்கோர் உங்களுக்குத்தான் ஜமாயுங்கள்!