
தமிழ்நாட்டில் சுமார் 580க்கும் மேற்பட்ட பறவைச் சிற்றினங்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். வலுவான கால்களும், அகண்ட நீண்ட இறக்கைகளும், பெரிய கண்களும், கூரிய நுனியுடைய வளைந்த அலகும் கொண்ட பறவைதான் கழுகு. கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவையாகும்.
கழுகுகளில் மொத்தம் 74 வகையான இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 60க்கும் மேற்பட்ட வகைகள் யூரேசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ளன. தமிழில் ஏழால், கழுகு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது இப்பறவை.
கழுகு அதிகாரம், சுதந்திரம், மேன்மை, கம்பீரம் ஆகியவற்றின் அடையாளமாகவும், பறவைகளின் அரசன் எனவும் அழைக்கப்படுகிறது. கழுகை அமெரிக்காவின் தேசியப் பறவையாக வைத்திருக்கின்றனர்.
பறவை இனத்திலேயே கழுகு மட்டும் தான் சுமார் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றது. வானில் மிக உயரத்தில் பறக்கும் திறமைக் கொண்ட கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றினால் அவை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகின்றன. இதனால் அவை சிறகினை விரித்துக் காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் செய்கின்றன.
பெரிய கண்களைக் கொண்ட கழுகுகளின் கண் பார்வை மிகக் கூர்மையானது. வட்டமடித்துக் கொண்டே உயரே பறந்து கொண்டிருந்தாலும் கீழே நகரும் எலி, கோழிக் குஞ்சு போன்ற கீழ் நோக்கிப் பாய்ந்து வந்து தனக்கான உணவை, தன் வலுவான கூரிய நகங்களால் பற்றிப் பிடித்து தன் கூர்மையான அலகினால் கொத்திக் கொத்தி தின்னும்.
இவ்வாறு கொன்று தின்பதால் இப்பறவை கொன்றுத் தின்னிப் பறவை எனவும் அழைக்கப்படுகிறது. கழுகின் கண்களும், கால் பகுதிகளும் மஞ்சள் நிறத்திலும், உடல் மற்றும் இறக்கைகள் பழுப்பு நிறத்திலும், தலை மற்றும் வால் பகுதிகள் வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன. ஆண் கழுகை விட பெண் கழுகு சற்றே பெரியதாக இருக்கும்.
மிக உயரமான முட்களையுடைய மரக்கிளைகளிலும், மலைச் சரிவுகளிலும், பாறைப் பிளவுகளிலும் மற்ற உயிரினங்களால் எளிதில் நெருங்க முடியாத இடத்தைத் தேர்வு செய்து, பின்னர் முள், குச்சி, புல், வேர்கள் மற்றும் வைக்கோலைக் கொண்டு ஆண், பெண் கழுகுகள் இருவரும் சேர்ந்து அழகான கூட்டைக் கட்டுகின்றன. ஒரு முறை இரண்டு முட்டைகள் இட்டு சுமார் 40 நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. பெண் கழுகு குஞ்சுகளைப் பாதுகாக்க, ஆண் பறவை இரையை வேட்டையாடிக் கொடுக்கிறது.
குஞ்சுகளுக்கு இறக்கைகள் வளர்ந்தவுடன் கூட்டிலுள்ள புல், வேர்கள், வைக்கோலை எடுத்து விடுகின்றன. இதனால் தாவித்தாவி உட்காரும் குஞ்சுப் பறவைகளை முட்கள் குத்திக் காயப்படுத்துவதால், அவை விரைவில் பறக்கக் கற்றுக் கொள்கின்றன.
பொதுவாக கழுகுக்கு 40 வயதாகும் போது, அதன் அலகு தேய்ந்து, வளைந்து இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் ஏற்றதாக இல்லாமலாகி விடுகிறது. அதன் இறக்கைகளும் தடித்துக் கனமாகி பறப்பதற்கு இயலாததாய் மாறிவிடும். இந்த நிலையில் தான் கழுகுக்குச் சவால்கள் காத்திருக்கின்றன. ஒன்று, இறந்து விடுவது. மற்றொன்று, தன் அலகு மற்றும் இறகுகளைப் புதுப்பிக்க வலிமிக்க ஒரு நிகழ்விற்குக் தன்னைத் தயார் செய்வது.
புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்து இருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறக்கைகளைப் பிய்த்தெடுக்கும். சுமார் ஐந்து மாதத்திற்கு பிறகு புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். அதுவரை காத்திருக்கும். நமக்கு இருக்கும் நகங்களைப் போலத்தான் கழுகுகளின் அலகும். வளர்ந்து கொண்டே இருக்கும். சேதமடைந்தாலும் வளரும் தன்மை கொண்டது. வலிகளையும், வேதனையையும் அனுபவித்து தன்னைத் தானே புனரமைத்துக் கொள்ளும் கழுகு மேலும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறி விடும்.
ஆனால், உலகில் கழுகு இனம் வேகமாக அழிந்து வருகிறது. சுற்றுச் சூழல் மாசடைதலைத் தடுப்பதில் கழுகுக்கு முக்கியமான பங்குமுண்டு. விவசாயம் செய்யும் போது பயிர்களை நாசம் செய்யும் எலி மற்றும் சிறிய விலங்குகளை அழிப்பதற்காக விவசாயிகள் நச்சுப் பொருட்களை உபயோகிக்கின்றனர். இவற்றை உண்ணும் கழுகுகள் நச்சுத் தன்மையினால் இறக்க நேரிடுகிறது. மற்றொரு காரணம், மின்சாரக் கம்பங்கள் அதிகரிப்பதாகும். அதனால் கழுகுகள் மின்கம்பியில் மோதி தாக்குதலுக்கு உள்ளாகி இறக்கின்றன.
இனியேனும் கழுகு இனத்தினைக் காப்பாற்றுவதில் அக்கறைக் கொள்வோம்.