
சுவர் ஏறும் திறனுக்கு பெயர் பெற்ற வகையாக பல்லிகள் இருக்கின்றன. நம் வீட்டின் கூரை பகுதி, சுவர், மரம் எல்லா இடங்களிலும் எளிதாக ஏறிச் செல்லும். இதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது எப்படி? என பலமுறை யோசிப்போம். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
இதற்கு காரணமான ரகசியம் அவற்றின் கால்களில் உள்ள நுண்ணிய அமைப்புகளில் உள்ளது. இந்த நுண்ணிய அமைப்புதான் பல்லிகளுக்கு அந்த பிடிமானத்தை கொடுக்கிறது. அவை சுவர்கள் கூரைகள் ஏன் கண்ணாடி பரப்பில் மீது கூட நகர்வதற்கு உதவுகின்றன. ஆனால் அவை இறந்த பின் மறைந்து விடும் என்று தெரியுமா? ஏன்? என்று பார்க்கலாம்.
பல்லிகள் சுவரில் எப்படி ஒட்டி உள்ளது?
பல்லிகளின் காலின் அடிப்பகுதியில் 'சீட்டே' எனப்படும் சிறிய முடி போன்ற அமைப்பு இருக்கும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த சீட்டே பகுதி 'ஸ்பேட்டூலே' எனப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய முடிகளால் மூடப்பட்டிருக்கும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பு பல்லிகளின் கால்களில் பரப்பளவை அதிகரித்து அவை எளிதில் சுவர் மற்றும் கூரையில் எளிதாக ஒட்டிக்கொள்ள உதவுகிறது.
பல்லிகளுக்கு வலுவான பிடியை இந்த தனித்துவமான வடிவமைப்புதான் கொடுக்கிறது. அதாவது ஸ்பேட்டூலேக்கள் மேற்பரப்புடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதால் அவை நழுவாமல் உறுதியாக பிடித்துக் கொள்கின்றன. அவை சுவரில் அல்லது கூரையில் என ஈர்ப்பு விசை எதிராக எளிதாக ஏற முடிகிறது.
வான் டெர் வால்ஸ் விசை (Van der Waals force)
பல்லியின் கால்களில் இருக்கும் 'ஸ்பேட்டூலாக்கள்' சுவரின் மேற்பரப்பில் படும்போது அவை 'வான் டெர் வால்ஸ் விசை' (Van der Waals force) எனப்படும் ஒருவகையான விசையை உருவாக்குகின்றன. இந்த விசை மூலக்கூறுகளுக்கு இடையேயான ஒரு பலவீனமான ஈர்ப்பை உண்டாக்குகிறது. நாம் பார்க்க கூட முடியாத அளவிற்கு மிகச்சிறியது. இது ஈர்ப்பு விசையை போல சக்தி வாய்ந்ததாக இல்லாவிட்டாலும் இந்த விசைகள் தான் ஒட்டிக்கொள்ள உதவுகின்றன.
பல்லி இறந்தால் விழுந்து விடும்...
பல்லிகள் உயிருடன் இருக்கும் போது மேற்பரப்புகளில் எளிதில் ஒட்டிக் கொள்ள முடியும். அவை இறந்தால் ஏன் கீழே விழுகின்றன? அதற்கான பதில் அவற்றின் உடல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்பதில் தான் இருக்கிறது. உயிருடன் இருக்கும் போது பல்லிகள் தங்கள் கால்களில் உள்ள தசைகளைக் கட்டுப்படுத்தும். அதன் விளைவாக 'வான் டெர் வால்ஸ் விசை' (Van der Waals force) உருவாகி சுவரில் ஒட்டும் தன்மையை பெறும்.
ஆனால் அவை இறக்கும் போது அவற்றின் தசை செயல்பாடுகள் நின்று விடும். இந்த தசை கட்டுப்பாட்டு இயக்கம் இல்லாமல் அவற்றின் கால்களில் உள்ள ஸ்பேட்டூலாக்கள் ஒட்டிப் பிடிக்கும் திறனை இழந்து விடும் .
இதனால் பல்லி சுவரில் அதன் ஒட்டும் தன்மையை இழந்து கீழே விழுந்து விடுகிறது. பல்லிகள் எந்த வகையான மேற்பரப்பில் இருந்தாலும் உறுதியாக பிடித்திருக்கும் படி உதவக்கூடிய கூடிய வகையில் அவற்றின் அசைவுகள் ஒவ்வொன்றும் கால்களை தொடர்ந்து வைத்திருக்கும் படி கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும்.
இது சுவரில் ஒட்டிக்கொள்ளும் தன்மையை ஒருபோதும் இழக்காமல் பார்த்துக் கொள்கிறது. நம்வாழ்வியலில் பரிணாம வளர்ச்சி உயிரினங்களை எப்படி சிறப்பாக வடிவமைத்திருக்கிறது என்பதற்கு பல்லிகள் ஒரு சரியான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.