
நீண்ட காலத்துக்கு முன்பு யானைகளுக்குத் தும்பிக்கை இவ்வளவு நீளமாக இல்லை. குட்டையான தொங்கு மூக்காகத்தான் இருந்தது.
அந்த ஆண்டு பல மாதங்களாக மழை பெய்யவில்லை. கிணறு, குளம், குட்டை, ஏரி யாவும் வற்றத் தொடங்கின. ஆறுகள் மற்றும் நீரோடைகளில் சொற்பமான நீரோட்டமே மிஞ்சியிருந்தது. கானக விலங்குகள், பிராணிகள் யாவும் தாகத்தால் தவித்தன. அவை நீர் ஆதாரங்களைத் தேடி புலம் பெயர்ந்து அலைந்தன. கானகத்திற்கு சற்று அருகாமையிலேயே ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது. யானை நீர் அருந்த அங்கே சென்றது.
அந்த நதியில் ஒரு பச்சை முதலை வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த நதி தனக்கே சொந்தம் என்று அந்த முதலைக்கு நினைப்பு. நதிக்கு அரசன் என்று கானுயிர்களும் அதைச் சொல்லும்.
அது யானையைக் கண்டதுமே விரட்டியது.
“அப்பாலே போ யானையே! ஏற்கனவே இங்கே நீர் வற்றியிருக்கிறது. நீ பருகிவிட்டால் எனக்கு எதுவும் மிச்சமிருக்காது. பருகுவதற்கு மட்டுமல்ல; நான் வசிப்பதற்கே நிறைய நீர் தேவை. போ, போ!”
முதலையுடன் சண்டை பிடிப்பது சிரமம் என்பது யானைக்குத் தெரியும். எனவே, பின்வாங்கி, முதலை தூங்குவதற்காகக் காத்திருந்தது.
அந்த நதியில் ஒரு பச்சைத் தேரையும் வாழ்ந்து வந்தது. அது ஒரு லொள்ளுப் புடிச்ச தேரை. முதலை நதியில் நீந்தும்போது குதித்து, அதன் பாளம் பாளமான முரட்டு முதுகில் அமர்ந்துகொண்டு, முதலைச் சவாரியை அனுபவித்து மகிழும். முதலைக்கு அந்தத் தேரையைக் கண்டாலே எரிச்சல்.
‘துளுக்குனூண்டு இருந்துட்டு அந்தத் தேரை என்னா லொள்ளு பண்ணுது பாரு! ஆனானப்பட்ட யானை, காட்டெருமையெல்லாமே என்னைக் கண்டா பயப்படும். ஆனா, இந்தத் தேரை எவ்வளவு ஜம்பமா என் முதுகுல ஏறிட்டு, இலவச சவாரி பண்ணுது? என்ன ஒரு சாமார்த்தியம் அதுக்கு?’ என அதன் மீது எரிச்சலும், கடும் கோபமும் கொண்டிருந்தது முதலை.
முதலை அடிக்கிற அளவுக்கோ, தின்கிற அளவுக்கோ உள்ள பிராணி அல்ல அது. முதலையின் பல் இடுக்கில் சிக்கும் துணுக்கு அளவுக்குக் கூட இராது. அதனால்தான் முதலை அதைக் கொல்ல முற்படவில்லை. ஆனால் அதன் லோலாயம் தாங்க முடியாததாக இருந்தது. எப்போது முதலை நீந்தினாலும் தாவிக் குதித்து முதுகில் ஏறிவிடும்.
அதைக் கீழே தள்ளிவிடுவதற்காக முதலை தன் முதுகை அசைக்கும். அது பலனளிக்காது என்பதோடு, தேரை “ஹா-ஹா-ஹா” என எகத்தாளமாக சிரிக்கும்.
பிற்பகலில் முதலை பாறை மீது படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. அந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி யானை சத்தமில்லாமல் சென்று நதியில் நீர் பருகலாயிற்று. அப்போது தேரை முதலையின் முதுகில் குதித்து ஏறி தொந்தரவு செய்தது. அதனால் ஓய்வு கெட்ட முதலை, நதியில் பாய்ந்து நீந்தி, முதுகை வன்மத்தோடு அசைத்து தேரையை விழ வைக்க முயற்சித்தது. ஆனால், பல்லி போல சுவற்றிலும் ஒட்டி நிற்கக்கூடிய தன்மையுள்ள தேரையை விழச் செய்ய இயலவில்லை.
அப்போதுதான் முதலை யானையை கவனித்தது.
“என்னுடைய நதியிலிருந்து நீ எப்படி நீர் பருகலாம்? காலையிலேயே உன்னை எச்சரித்தேனே! அசந்த நேரம் பார்த்து வந்துவிட்டாயா, திருட்டு யானையே!”
தேரை மீது இருந்த வஞ்சத்தையும் சேர்த்து யானையிடம் கோபம் காட்டிய முதலை, நீரை உறிஞ்சிக்கொண்டிருந்த அதன் தொங்கு மூக்கைப் பிடித்து இழுத்தது. பரிதாபத்துக்குரிய யானை பின்னுக்கு இழுத்து, “ஞஞ் ஞூஞ்ஞை ஞிஞு,… ஞஞ் ஞூஞ்ஞை ஞிஞு,…” என்று கதறியது.
மூக்கை முதலை பிடித்து இழுத்துக்கொண்டிருந்ததால், யானை, ‘என் மூக்கை விடு,… ‘என் மூக்கை விடு,…’ என்பதுதான் “ஞஞ் ஞூஞ்ஞை ஞிஞு,… ஞஞ் ஞூஞ்ஞை ஞிஞு,…’ என்று மூக்கு மொழியாகக் கேட்டது.
முதலை இரக்கம் காட்டவில்லை. யானை நீண்ட நேரம் போராடியது. முதலைக்கும் யானைக்குமான இழுத்தல் போட்டியில் யானையின் மூக்கு நீண்டுவிட்டது.
அதனால் கோபமுற்ற யானை, நதியில் இருந்த நீர் முழுதையும் அந்த நீண்ட மூக்கால் உறிஞ்சிக் குடித்துவிட்டது. அதன் பின் நதியின் சேற்றை வாரி முதலை மீது தெளித்தது. பச்சை நிறமாக இருந்த முதலையும், அதன் முதுகில் இருந்த பச்சைத் தேரையும் அதிலிருந்து சேற்று நிறமாகிவிட்டன.