
விமானம் திடீரென ஆடத்தொடங்கியது. விமானம் முழுவதும் ஆயிரம் ஊர்க்குருவிகள் கத்துவது போன்ற ஒரே இரைச்சல். "பயணிகள் அனைவரும் கவனிக்க" என்ற கரகரத்த குரலில் ஒலிபரப்பு ஒன்று விமானியின் அறையிலிருந்து வந்தது. அதைக் கேட்டதும் தூங்கிக்கொண்டும், தங்கள் எதிரே இருந்த சின்னத்திரையில் திரைப்படம் பார்த்துக்கொண்டும் இருந்த பயணிகள் அனைவரும் திடுக்கிட்டனர். விமானப் பணிப்பெண்கள் அங்கும் இங்கும் அறக்கப்பறக்க ஓடிக்கொண்டிருந்தனர்.
விமானியின் அறையிலிருந்து அதே கரகரப்பான குரலில் மீண்டும் அறிவிப்பு ஒலித்தது. "பயணிகள் கவனத்திற்கு விமான இயந்திரத்தில் ஏதோ கோளாறு; எரிபொருள் வேறு குறைந்துவிட்டது. விமானம் எந்த நேரத்திலும் விபத்துக்குள்ளாகலாம். ஆகவே தங்களது இருக்கை வார்களைக் கவனமாக அணிந்துகொள்ளவும். யாரும் இடத்தைவிட்டு அசையாதீர்கள்" என்று விமானி ஆங்கிலத்தில் அறிவித்துக்கொண்டு இருக்கும்போதே விமானத்திற்குள் மின்சாரம் நின்றுவி்ட்டது.
எங்கும் ஒரே இருள்மயம். பயணிகள் அனைவரும் பயத்திலும் பதற்றத்திலும் கூக்குரலிடத் தொடங்கினர். இது எதிலும் கவனம் செலுத்தாத கந்தன் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த அவன் தங்கை சீதா நடுங்கும் கரங்களுடன் வாய்குழற அவனை எழுப்பினாள். "கந்தா! க..ந்..தா..! சீக்கிரம் எழுந்திரு. நம் உயிருக்கு ஆபத்து. விமானம் தலைகீழாக ஆடுது. நீ பாட்டுக்குத் தூங்குறாயே! எழுந்திரு சீக்கிரம். நேரே உக்காரு" என்று தன் அண்ணனைத் தட்டி எழுப்பினாள்.
அவளது பதற்றமான குரலைக்கேட்ட கந்தன் உடனே கண்விழித்து எழுந்து சீட்டில் நேரே உட்கார்ந்தான். அவனால் எதையுமே சரியாகப் பார்க்கமுடியவில்லை. விமானத்திற்குள் என்ன நடக்கிறது என்று அவன் யூகிப்பதற்குள் விமானம் மீண்டும் ஒருமுறை தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றடித்து தாறுமாறாகக் கீழிறங்கியது.
பயணிகள் அனைவரும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு குய்யோமுறையோ என்று கூக்குரலிட்டனர். அனைவர் முகத்திலும் மரணபயம் எங்கிருந்தோ வந்து அப்பிக்கொண்டது. விமானம் கீழே விழுந்து நொருங்கப் போகிறது என்று எண்ணிய கந்தன் 'ஐயோ! அம்மா!' என்று அலறியவாறே விமான இருக்கையில் மயங்கி விழுந்தான்.
"கந்தா! கந்தா!" என்று யாரோ தன்னைக் கூப்பிடுவதைக் கேட்டு மெல்ல கந்தன் தன் இரு கண்களையும் திறந்தான். அவனால் தன் கண்களை முழுவதும் திறக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வெளிச்சத்தால் அவன் கண்கள் கூசியது. ஒருவாறு தன் கண்களைத் திறந்து பார்வையைச் சுற்றும்முற்றும் படரவிட்டான். எங்கும் ஒரே ஒளிமயம். சுற்றிலும் பசுமையான புல்வெளிகள். ஆங்காங்கே மஞ்சள் வண்ணத்தில் சிறிசிறு குன்றுகள். ஒளிவெள்ளம் அந்தக் குன்றுகளில் இருந்துதான் வந்தன என்பதைப் புரிந்துகொள்ள அவனுக்குச் சற்று நேரம் பிடித்தது.
தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது யாரென அவன் கண்கள் அங்குமிங்கும் அலைந்தன. ஒருவரையும் காணோம். மிண்டும் 'கந்தா! கந்தா!' என்று குரல் கேட்டது. "என்ன.. குரல் மட்டும் கேட்கிறது. ஒருவரையும் காணோமே!?" குரல் வந்த திசையை நோக்கி மீண்டும் தன் பார்வையைத் திருப்பினான் கந்தன்.
"என்ன கந்தா பார்க்குறே! நான் யாரென்று உனக்குத் தெரியவில்லையா? கொஞ்சம் குனிந்து உன் காலருகில் பார்!" என்ற குரலைக் கேட்டு சற்றுப் பயத்துடனேயே கந்தன் கீழே குனிந்து தன் காலடியைப் பார்த்தான். அங்கே பாம்பு ஒன்று தன்னைச் சுற்றிக்கொண்டு ஒரு கற்பாறை போன்று கிடந்தது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் அல்லவா? படையே நடுங்கும் பாம்பைக் கந்தன் ஒருவன் மட்டும் பார்த்தால் நடுங்காமல் இருப்பானா? பயத்தால் அவன் உடலெல்லாம் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. 40 டிகிரி ஜுரம் வந்தவன் போல அவன் உடம்பெல்லாம் கொதித்தது. பயத்தால் பேச்சு வரவில்லை, தான் காண்பது கனவா நனவா எனத் திகைத்து வாயடைத்துப் போய் நின்றான்.
"கந்தா! பயப்படாதே! நான் உன்னை ஒன்னும் செய்துவிடமாட்டேன். என் பெயர் நாகராஜா. நான் இந்த நாட்டிற்குத் தலைவன்" என்று அன்பொழுகக் கூறியது அப்பாம்பு. "நீ நாகராஜனா? நான் எங்கே இருக்கிறேன். இது எந்த இடம்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!" என்று குழப்பத்தோடு அந்தப் பாம்பைப் பார்த்துக் கேட்டான் கந்தன்...