

குட்டீஸ்..! உங்களுக்கு விண்வெளி என்றதும் அங்கே போகிறவர்கள் குளிப்பார்களா, சாப்பிடுவார்களா, தூங்குவார்களா? என்ற சந்தேகம் வரும் தானே. வாருங்கள்! அவர்கள் எப்படி இதையெல்லாம் செய்கிறார்கள் என்பதை இப்பதிவில் காண்போம்!
விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வீரர்களின் விண்வெளி வாழ்க்கை முறை சற்று வித்தியாசமானது தான். விண்வெளி பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் குளிப்பது உண்டு. ஆனால் ஷவர் கிடையாது. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எப்படி ஸ்பாஞ்ச் பாத் எடுத்துக் கொள்கிறோமோ அது போல் தான் இவர்களும். ஸ்பான்ச் வைத்து தண்ணீரைத் தொட்டு உடம்பை துடைத்துக் கொள்வார்கள்.
பின்னர் உபயோகப்படுத்திய ஆடைகளை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு சீல் செய்து வைத்துவிடுவார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவார்கள். பூமியில் இருப்பது போல அழுக்காவது இல்லை. எத்தனை பேர் செல்கிறார்கள்; எவ்வளவு நாள் விண்வெளியில் இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து எடுத்துச் செல்லும் உடைகளின் எண்ணிக்கையும், அதன் எடையும் கூடும் என்பதால் மிகவும் குறைந்த அளவு உடைகளை எடுத்துச் செல்வார்கள்.
சாப்பாடு என்று வரும் பொழுது ஏறக்குறைய பூமியில் சாப்பிடும் பலவிதமான ஆகாரங்கள் உண்டு. ஆனால் எல்லாம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்டவை. சிலவற்றுடன் சூடான நீர் சேர்க்க வேண்டும். சிலவற்றை சூடாக்க வேண்டும். இதற்கெல்லாம் வசதி உண்டு. உணவு அடங்கிய பாக்கெட்களையும், கண்டெய்னர்களையும் ட்ரேயில் அதன் படிவங்களில் உள்ள குழிகளில் காணப்படும் இடத்தில் பொருத்தி வைக்க வேண்டும். ட்ரேயை மடியில் வைத்து பெல்ட்டு மூலம் கட்ட வேண்டும். பிறகு சாப்பிடலாம். சாப்பிட்டு முடித்ததும் பாக்கெட்டுகளையும், கண்டெய்னர்களையும் ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு குப்பை பாக்ஸில் போட்டு விட வேண்டும்.
ஆளுயர பைகளில் புகுந்து கொண்டு தூங்குவார்கள். படுத்து கொண்டு தான் தூங்க வேண்டும் என்பது இல்லை. நின்று கொண்டும் தூங்கலாம். ஏழு பேர் பயணம் செய்தால் படுப்பதற்கு அடுக்குமெத்தை 'பங்க் பெட்' இருக்கும். எங்கே படுத்தாலும் இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டு அதை ஒரு அசையாத பொருளுடன் கட்டிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிதந்து செல்ல ஆரம்பித்து விடுவார்களாம்.
விண்வெளி வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பி வரும்போது அவர்களின் உடல்நிலையில் மாற்றம் ஏற்படுமா என்றால், பெரும்பாலானவர்களின் எலும்புகளில் கால்சியம் குறைபாடு சிறிதளவு இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றார்கள்.
என்ன குட்டீஸ்.. அவர்கள் சாப்பிடும் முறையை பார்த்தால் இன்றைய குழந்தைகளுக்கு பெல்ட் கட்டி அம்மாக்கள் சாப்பாடு ஊட்டுவது ஞாபகத்திற்கு வருகிறது தானே!