சிறுவர் சிறுகதை: பெரிய யானையும் குட்டி காட்டு பூனையும்!

உருவத்தை வைத்து எடை போடக்கூடாது!
Elephant in forest
Tamil story for children
Published on

ஒரு ஊர்ல ஒரு மிகப்பெரிய காடு இருந்தது. அந்த காட்டில் பெரிய யானை ஒன்று வசித்து வந்தது. தினமும் அந்த காட்டில் உள்ள அழகான பெரிய ஆற்றில் போய் குளித்துவிட்டு சாவகாசமாக நடந்து வரும். அப்போது எதிர்ப்படும் சின்ன சின்ன மிருகங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே பேச முயற்சி செய்யும். ஆனால், யானையைக் கண்ட மிருகங்கள் எல்லாம், அது அருகில் வந்தாலே ஓடி ஒளிய ஆரம்பிக்கும். இதனால் மிகவும் வருந்திய யானை நாட்கள் செல்லச் செல்ல எதையுமே கண்டுக் கொள்ளாமல் ஆற்றில் குளிப்பதும், காட்டில் இருக்கும் பழ வகைகளை பறித்து தின்பதும் என வாழ்க்கையை நிம்மதியாக ஓட்டியது.

ஒரு நாள் குட்டி குரங்கு ஒன்று தன் தாய் குரங்கிடம், "யானை பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது. அதோடு நான் விளையாடட்டுமா?" என்று கேட்டது.

ஆனால் தாய் குரங்கோ, "வேண்டாம்! இது ஒரு பெரிய பயங்கரமான மிருகம். அதற்கு அருகில் செல்ல வேண்டாம்" என்று எச்சரித்தது. இப்படித்தான் காட்டில் வாழும் மற்ற மிருகங்களும் யானை உருவத்தைப் பார்த்து பயந்து போனது.

யானை வருகிற பக்கம் கூட போக பயந்த அந்த மிருகங்கள் தங்களுடைய குட்டிகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன் என்றும், அது இருக்கும் திசைக்கே போகக்கூடாது என்றும் சொல்லி வைத்தது. மனதில் வருத்தம் இருந்தாலும் இது எதையுமே கண்டுகொள்ளாத யானை நிம்மதியாக வாழ்ந்து வந்தது.

இதையும் படியுங்கள்:
🖋️'பீமன்' பேனா!
Elephant in forest

தன்னுடன் பழகாமல் தன்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் தன்னை இப்படி மற்ற மிருகங்கள் உதாசீனப்படுத்துவதைக் கண்டு யானை வருந்தியது. ஒரு நாள் காட்டுக்குள் பெரிய மழை பெய்து வெள்ளம் வந்தது. குட்டி குட்டி மிருகங்கள் வாழ்கிற இடம் சுற்றி பெரிய ஆறு போல் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. இதனால் தீவில் மாட்டிக் கொண்டது போல் எல்லா மிருகங்களும் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டது. வெளியே வந்து உணவு தேட முடியாத நிலையில் எல்லா மிருகங்களும் பசியில் வாடி வதங்கியது.

இதைக் கண்டு வருந்திய யானையோ அவற்றிற்கு உதவி செய்ய முடியாமல் வருத்தப்பட்டு கொண்டிருந்தது. ஒரு காட்டுப் பூனை மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த யானையைப் பார்த்து, "யானை மாமா இங்குள்ள அனைத்து மிருகங்களும் பசியில் வாடிக்கிடக்கின்றோம். எங்களுக்கு உதவக் கூடாதா?" என்று கேட்டது.

இதையும் படியுங்கள்:
கஷ்டமான பாடம் ஈஸியாக மாற... டாப் 5 சீக்ரெட் டிப்ஸ்!
Elephant in forest

அதைப் பார்த்து சிரித்த யானை, "நான்தான் உங்களுக்கெல்லாம் கொடியவனாகத் தெரிகிறேனே. என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறது என்று கூறுகிறீர்களே பின் எப்படி உதவுவது?" என்று கேட்டது. அப்பொழுது அந்த குட்டி காட்டு பூனை, "எங்கள் அப்பா அம்மாக்கள் தான் உன் உருவத்தை வைத்து எங்களுக்கு எதுவும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று அப்படி சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் உன்னை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நீ தினமும் இந்த வழியாக அமைதியாக நடந்து செல்வதும், எங்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்காமல் இருப்பதையும் பார்த்தால் நீ ஆபத்தானவன் இல்லை, நல்லவன் என்று தோன்றுகிறது. எங்களுக்கு உதவி செய்ய மாட்டாயா?" என்று கேட்டது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: "ஆக்ராவில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?" அக்பர் கேள்விக்கு பீர்பால் சொன்ன கணக்கு!
Elephant in forest

முதல் முறையாக ஒரு குட்டி மிருகம் தன்னிடம் பேசியதும் சந்தோஷம் கொண்ட யானை துதிக்கையை தண்ணிக்கு மேல் வைத்து ஒவ்வொரு குட்டி விலங்குகளை எல்லாம் அது மேல் ஏறச்செய்து பாதுகாப்பான இடத்தில் கொண்டு விட்டது. இப்படி எல்லா மிருகங்களும் யானையின் தும்பிக்கையில் ஏறி அந்த வெள்ளத் தண்ணீரிலிருந்து வெளியே வந்து தப்பித்தது. அன்றிலிருந்து தங்கள் உயிரை காப்பாற்றிய யானையையும் தங்களில் ஒருவராக நினைத்து அன்புடன் பழக ஆரம்பித்தது.

குட்டி மிருகங்களுடன் தாய் மிருகங்களும் யானையை தங்கள் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தது.

நீதி: இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? உருவத்தை வைத்து எதையும் எடை போடக்கூடாது என்பதைத் தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com