ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளில் உலக யானைகள் நாள் (World Elephant Day) கொண்டாடப்படுகிறது. உலகத்தில் யானைகள் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட 65 அமைப்புகள் மற்றும் யானைகள் இருக்கும் நாடுகளில் யானைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நாளில், தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாக இருக்கிறது.
கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தின் ஆறாட்டுப்புழா எனுமிடத்திலுள்ள ஆறாட்டுபுழா கோயிலில் நடத்தப்பெறும் ஆறாட்டுப்புழா பூரம் திருவிழாவின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் மாலை ‘சாஸ்தவிந்தே மேளம்’ என்று அழைக்கப்படும் விழாவின் ஒரு பகுதியாக, தாளக் குழுக்கள் மற்றும் அலங்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கேரளாவில் பல கோயில்களில் பூரத்தின் போது யானைகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பிக்கப்படுகின்றன.
கேரள மாநிலத்தில் யானைகளுக்கு தங்களால் இயன்ற பழங்கள், கரும்பு, வெல்லம் மற்றும் அரிசி போன்றவற்றை வழங்கி ஆசி பெறும் நிகழ்வினை ஆனையூட்டு என்கின்றனர். கேரளாவில் மலையாளத்தின் கற்கடக மாதப் பிறப்பின் போது திருச்சூர் நகரிலுள்ள வடக்குநாதன் கோயிலில் (சிவன் கோயிலில்) இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.
2002 ஆம் ஆண்டு முதல் அசாம் மாநில வனத்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து, ஒவ்வோர் ஆண்டும் அசாம் மாநிலத்திலுள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், காசிரங்கா யானைத் திருவிழா நடத்தப்பெறுகிறது. யானையின் தலை முதல் பாதம் வரை அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆசிய யானைகள் இவ்விழாவில் பங்கேற்கின்றன. இவ்விழாவிற்கு வரும் யானைகள் அணிவகுப்பு, ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் என பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்கின்றன.
கர்நாடக மாநிலம், மைசூரு தசரா திருவிழாவில் விஜயதசமி நாளில் நடைபெறும் ஊர்வலத்தில் யானைகள் முக்கிய இடம் பிடித்துள்ளன. முன்னணி யானை சாமுண்டேசுவரி தேவியுடன் தங்க அம்பாரியைச் சுமந்து செல்கிறது. இது, 750 கிலோகிராம் எடை கொண்டது. மேலும் தங்கத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள செய்ப்பூர் நகரில், மார்கழி மாதத்தில் ஹோலி பண்டிகை நாளில் நடைபெறும் திருவிழாவில் யானைத் திருவிழா நடைபெறுகிறது. இதில் யானையின் போலோ விளையாட்டும், யானை நடனமும் இடம் பெறுகின்றன.