ஆகஸ்ட் 12: உலக யானைகள் நாள் - மனிதனின் தலையீடால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் யானைகள்!

World Elephant Day
World Elephant Day
Published on

வாழ்விடங்கள் அழிக்கப்படுவதாலும், தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவதாலும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் யானைகள்!  

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் நாளில் உலக யானைகள் நாள் (World Elephant Day) கொண்டாடப்படுகிறது. உலகத்தில் யானைகள் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்ட 65 அமைப்புகள் மற்றும் யானைகள் இருக்கும் நாடுகளில் யானைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. யானைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நாளில், தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாக இருக்கிறது. 

வில்லியம் சாட்னர் என்பவர் 'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படம் ஒன்றை எடுத்தார். இந்தப் படமானது, ஒரு தனியார் வளர்க்கும் யானையை, மீண்டும் காட்டிற்குள் கொண்டு போய் விடுவது பற்றிய கதையைக் கொண்டிருந்தது. இந்தப் படம் 2012 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாளில் வெளியானது. அன்றிலிருந்து 'உலக யானைகள் நாள்' கொண்டாடப்பட்டு வருகிறது.

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் அனைத்திலும் மிகப் பெரியதும், மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். மனிதர்கள் தவிர்த்த, மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும்.

யானைகள் மிகவும் வலிமையானவை; வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையில் உள்ளவைகளுமான சிங்கம், புலி ஆகியவை கூட நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிக மிகக் குறைவே. யானைகள் குடும்பமாக வாழும். 

யானைகளில், ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள் என்று மூன்று சிற்றினங்கள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.

பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. ஆண் யானையை களிறு என்றும், பெண் யானையை பிடி என்றும் தமிழில் குறிப்பிடுகின்றனர். யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்று சொல்கின்றனர். 

ஆப்பிரிக்க யானைகள்: ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டும் தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்துச் சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமமாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கையின் (தும்பிக்கையின்) நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால், முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும்.

ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும், காது மடல்கள் சிறியனவாகவும் இருக்கும். துதிக்கை நுனியில் மேற்புறம் ஒரே ஓர் இதழும் இருக்கும். முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும். ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவேக் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 12: உலக யானைகள் நாள் - கம்பீரத்துக்கு தலைவணங்குவோம்!
World Elephant Day

யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை. யானையின் தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. இது அனைத்துப் புறங்களிலும் வளையக்கூடியது. தும்பிக்கையின் நுனியில் யானை மூச்சுவிடும் மூக்குத் துளைகளும், சின்னஞ்சிறிய, மிகவும் நுண்ணுணர்வு உள்ள விரல் நீட்சியும் இருக்கின்றன. தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை, பொதுவாக உணவை எடுப்பதற்கும், நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. பகை விலங்குகளின் தாக்குதலையும் யானை தும்பிக்கையால் எதிர்த்து முறியடிக்கிறது. யானையின் கழுத்து குட்டையாக இருப்பதால் தும்பிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானது. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும். எனினும், மெத்தெனவே இருக்கும். இதனால், கொசு முதலியனவும் கடிக்கும்.

யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பருமனான உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீதும், நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. 

யானைகள் மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும், இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே, இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்குச் சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே மிகவும் பெரியதாகும். ஐந்து கிலோ கிராமுக்கும் சற்று கூடிய எடையைக் கொண்டது. யானைகள் நினைவாற்றல் மிக்கவை. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அறிவிற் சிறந்தவையாக யானைகள் கருதப்படுகின்றன. யானைகளின் மூளையும் அமைப்பிலும், நுட்பத்திலும் சிறந்தவை. கருவிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்கின்றன. பொதுவாக யானை இரக்கவுணர்ச்சி கொண்டது.

இதையும் படியுங்கள்:
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் - காரணம் தெரியுமா?
World Elephant Day

யானையின் கருக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட கருக்காலம் ஆகும். பொதுவாக, இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 முதல் 115 கிலோ கிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.

யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. பெரியவையும், நீண்ட காலம் வாழுவனவும், குறைவான வேகத்தில் இனம் பெருகுவனவுமான யானைகளுக்கு, அவை அளவு மீறி வேட்டையாடப்படுதல் பெரும் பாதிப்பை எற்படுத்துகின்றது.

யானைகளின் வாழிடங்கள் அழிக்கப்படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். மனிதர் வேளாண்மை விரிவாக்கத்துக்காக யானைகளின் வாழிடங்களான காடுகளை அழித்து வருகின்றனர். மனிதர்களின் நலனுக்கும், யானைகளின் நலன்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்குகின்றது. இந்த முரண்பாடுகளை முறியடிக்க முற்படுவோம். இந்த யானைகள் தினத்தில் உறுதி கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com