'Beetles of Our Lady'- லேடிபக் பற்றிய அதிசயமான தகவல்கள்!

Ladybugs
Ladybugs
Published on

ஹாய் சுட்டீஸ்.

பலவிதமான பூச்சிகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் லேடிபக் எனும் விநோதமான பூச்சியைப் பற்றி நாம் அவ்வளவாக அறிந்ததில்லை. எனவே குட்டீஸ்.  லேடிபக் பூச்சிகளைப் பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்ளுவோமா ?

வண்டு வகையைச் சேர்ந்த லேடிபக் (Ladybug)  ஒரு பூச்சியாகும்.  லேடிபக்ஸின் அறிவியல் பெயர் Coccinella septempunctata ஆகும்.    லேடிபக்ஸ் இனத்தில் உலகெங்கும் சுமார் 5000 வகையான வண்டுகள் காணப்படுகின்றன.  இவற்றில் சுமார் 500 வகையான லேடிபக்ஸ் அமெரிக்காவில் காணப்படுகின்றன.   இவற்றிற்கு லேடிபீட்டில்ஸ் அல்லது லேடிபேர்டு பீட்டில்ஸ் என்ற பெயரும் வழங்கப்படுகின்றன.  

இத்தகைய வண்டு இனத்தில் பலவகை நிறத்தில் வண்டுகள் காணப்படுகின்றன.  ஆனால் பெரும்பாலான வண்டுகள் சிவப்பு உடலின் மீது ஏழு கறுப்பு வண்ணத் திட்டுக்கள் அமைந்திருக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இத்தகைய வண்டுகள் வடஅமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன.  இத்தகைய வண்ணக் கலவையானது பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படும். லேடிபக்ஸ் கறுப்பு சிவப்பு வண்ணம் மட்டுமில்லாது மஞ்சள், ஆரஞ்சு, கிரே, நீலம் என பலவகையான வண்ணங்களில் காணப்படுகின்றன.    

ஆதிகாலத்தில் ஐரோப்பா தேசத்தில் ஊறு விளைவிக்கும் பூச்சிகள் பயிர்களை பெருமளவில் அழித்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை விளைவித்தன.   இதனால் கவலையடைந்த விவசாயிகள் தாங்கள் வணங்கும் கடவுளான வர்ஜின்மேரியிடம்  (Virgin Mary)  தங்கள் பயிர்களை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள்.  இவ்வாறு வேண்டிக்கொண்ட சில மணிநேரத்தில் கறுப்பு-சிவப்பு வண்டுகள் பெருங்கூட்டாக பறந்து வந்து பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளைப் பிடித்து சாப்பிட ஆரம்பித்தன. இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் இத்தகைய கறுப்பு-சிவப்புப் பூச்சிகளை 'Beetles of Our Lady'  என்று அழைக்கத் தொடங்கினார்கள். இதுவே பின்னர் 'Lady beetle'  என்றும் நாளடைவில் லேடிபக் என்றும் மருவி அழைக்கப்படுகிறது.    

இதையும் படியுங்கள்:
Understanding the Difference Between Being Friendly and People-Pleasing!
Ladybugs

உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மனிதர்கள் இத்தகைய வண்டுகளை மிகவும் நேசிக்கிறார்கள். காரணம் இவை அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவை என்று கருதுகிறார்கள். மேலும் இவை மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிப்பதில்லை. இவை மனிதர்களை மற்ற வண்டுகளைப் போல கடிப்பதுமில்லை. இத்தகைய வண்டுகள் விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்குகின்றன. பயிர்களை நாசப்படுத்தும் பல்வேறு பூச்சிகளை இவை பிடித்து சாப்பிட்டு விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன. ஒரு கறுப்பு-சிவப்பு லேடிபக் வண்டானது தன் வாழ்நாளில் சுமார் 5000 பூச்சிகளைப் பிடித்து உண்ணுகிறது.

லேடிபக் வழக்கமாக 7 மில்லிமீட்டர் அளவுடையவை. பெண் லேடிபக் வண்டானது ஆண் லேடிபக்கை விட சற்று பெரியதாக காணப்படும். லேடிபக்ஸ் வண்டுகள் ஓவல் வடிவத்திலும் கூண்டு போன்ற அமைப்பிலும் காணப்படுகின்றன. இவற்றிற்கு ஆறு சின்னஞ்சிறு கால்கள் உண்டு. கறுப்பு-சிவப்பு லேடிபக்ஸ் வண்டுகளின் உடலில் பக்கத்திற்கு மூன்று சிறிய கறுப்பு திட்டுகளும் உடலின் நடுப்பாகத்தில் ஒரு கறுப்பு திட்டும் அமைந்திருக்கும். தலையானது கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும்.   தலையின் மீது வெள்ளைத் திட்டுக்கள் இரண்டு காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
ஆடி மாத அக்கோ குருவி கதை தெரியுமா?
Ladybugs

பறவைகள் சிவப்பு மற்றும் கறுப்பு நிற உணவுகளை என்ன காரணத்தினாலோ தவிர்த்து விடுகின்றன. லேடிபக்ஸ்களின் உடல் நிறமானது பறவைகளிடமிருந்து அவற்றைக் காக்கின்றன. லேடிபக்ஸ் மெல்லிய உடலைக் கொண்ட பூச்சிகளை பிடித்து உண்ணும் வழக்கமுடையவை. இவை Aphids எனும் ஒருவித பூச்சியை மிகவும் விரும்பி உண்ணுகின்றன. நல்ல பசியுடன் இருக்கும் ஒரு லேடிபக், சுமார் 50 Aphidsகளை பிடித்துச் சாப்பிட்டுவிடுகின்றன. இவை பாலுட்டிகளைப் போல மேலும் கீழும் வாயை அசைத்து தங்கள் உணவை மென்று விழுங்குவதில்லை.  இவை தங்கள் உணவை பக்கவாட்டிலேயே மென்று தின்னுகின்றன.     

லேடிபக்குகளுக்கு வயதாக வயதாக அவற்றின் உடலின் மேலுள்ள திட்டுக்களின் நிறம் மங்கும். இதை வைத்து இவை வயதானவை என்று புரிந்து கொள்ளலாம்.   

லேடிபக்ஸ் பறக்கும் போது ஒரு விநாடிக்கு 85 முறை தங்கள் இறக்கைகளை அசைக்கின்றன. இவை தங்கள் உடலின் பக்கவாட்டில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாக சுவாசிக்கின்றன. தட்பவெப்ப நிலையானது 13 டிகிரி செல்ஷியசுக்குக் குறைவாக இருந்தால் இவை பறப்பதில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com