

அறுபதுகளில் சிறுவர்களாக இருந்த என்னை போன்றவர்கள் மிகவும் பயந்து நடுங்கிய விஷயம். தடுப்பூசி (fear of vaccines). அம்மை தடுப்பூசி , காலரா தடுப்பூசி, யானைக்கால் தடுப்பூசி என்று மாறி மாறி போட வந்து விடுவார்கள். அவர்கள் வருவது எப்படியோ எங்கள் காலனி பசங்களுக்கு தெரிந்து விடும். அவ்வளவு தான் அங்கும் இங்கும் ஓடி ஓடி ஒளிந்து கொள்வோம். ஒருத்தன் அரிசி மூட்டை பின்னால் பதுங்குவான் ஒருத்தன் பரண் மேல் ஒதுங்குவான். இன்னொருத்தன் கட்டிலின் கீழே பதுங்குவான். வீட்டுக்கு அரை டஜன் பிள்ளைகள் இருந்தும் காலனிய அஞ்சு நிமிடத்தில் வெறிச்சோடி போகும்.
கார்பொரேஷனிலிருந்து ஒரு குழு தடுப்பூசி போடுவதற்கான உபகரணங்களோடு நுழைந்து விடுவார்கள். காலனியில் ஒரு இடத்தை தேர்ந்தெடுப்பார்கள். முதலில் ஒரு சிறிய ஸ்பிரிட் அடுப்பை பற்ற வைப்பார்கள். பின்னர் மருந்து வகையறாக்களை ஒரு ஸ்டூலில் பரப்பி வைப்பார்கள். பின்பு நடக்க ஆரம்பிக்கும் ஒரு நாடகம். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அந்தந்த வீட்டின் அப்பாக்கள் அவர் அவர் பசங்களை அவர்கள் மறைந்திருந்த மறைவிடங்களில் இருந்து தர தர வென இழுத்து வருவார்கள்.
ஒரே அழுகையும் அலறலும் தான் நாலா புறமும் கேட்கும்.. தடுப்பூசியில் மிகவும் கொடூரமானது அம்மை தடுப்பூசி தான். உண்மையில் அது ஊசியல்ல. அது ஒரு காய்ச்சப்பட்ட மோதிர சைஸ் முள் முத்திரை. ஹிட்லர் யூதர்களை சித்திரவதை செய்ய பயன்படுத்திய கருவிகளில் ஒன்று போல இருக்கும் அது! முதலில் இந்த வகை முள் முத்திரை ஊசியை சூடாக்கி ஸ்டெரிலைஸ் செய்வார்கள். பின்பு குழந்தையின் கையில் அம்மை தடுப்பு திரவத்தை சிறிது தடவி அதன் மேல் இரட்டை முள் முத்திரையை வைத்து திருகுவார்கள். இப்படி செய்யும்போது துள்ளாத பையன்களும் துள்ளுவார்கள்; பெண் குழந்தைகள் பல்லை கடித்த வாறு பொறுத்துக் கொள்வார்கள். அவர்கள் கண்களில் கண்ணீர் நிறைந்து விடும். ஆனால் வாய் விட்டு அழ மாட்டார்கள்.
அமர்க்களம் செய்வதெல்லாம் ஆண் குழந்தைகள் தான். ஒரு சிறுவன் சிறுமி விடாமல் தடுப்பூசி போட்டு விட்டு தான் நகர்வார்கள் நகராட்சிகாரர்கள்.
ஊசி போடுதல் என்பது முதல் படலம் தான். அடுத்து வருவது மோசமான இரண்டாம் படலம். ஊசி போட்ட பிறகு ஒரு மணி நேரம் கட்டுவிரியன் போட்டது போல பற்றி எரியும் . ஊசி போட்ட அன்றிரவே கை புசு புசுவென வீங்க ஆரம்பிக்கும். போட்ட இடம் சிறிய எரிமலை போல குமுறும். அதிலிருந்து ஒரு விதத் திரவம் லாவா போல வடியும். ஜுரம் வந்து உடல் கொதிக்கும். அம்மையை விட அம்மை தடுப்பூசி ஆட்டி வைத்துவிடும்.
புண் ஆர ஆறு நாளும் ஆகும் ஆறு வாரமும் ஆகும். பக்கத்து போர்ஷன் போண்டா மாமா சொல்வார்', "கையை துணி போட்டு மூடி நடடா நண்டு, காக்கா கொத்தப்போகிறது". போகுமிடமெல்லாம் துரத்தி துரத்தி பறந்து வந்து மொய்க்கும் ஈக்கள். விசிறி ஒன்றை கையில் வைத்துக்கொண்டு விசிறிக்கொண்டே இருக்கணும். அப்போதான் அம்மை தடுப்பூசி புண் ஆறி இருக்கும். அதற்குள் வந்துவிடுவார்கள் காலரா ஊசி போட.
இந்த ஊசி மாட்டு ஊசி கணக்கா இருக்கும். மஞ்சளாய் அந்த சிரிஞ்சு அத பாத்தாலே ரத்தம் உறஞ்சு போயிடும். எங்கள் கைகள் பூசணிக்காய் போல வீங்கிவிடும்.
பேய்க்கும் பிசாசுக்கும் பயந்தது மறந்து விட்டது! தடுப்பூசிக்கு பயந்தது இப்போதும் மறக்கவில்லை!
'தடுப்பூசிக்கு ஒரு தடுப்பு வராதா?' என்று நான் வேண்டியதும் உண்டு.