
இன்று இந்தியாவையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் ரேபிஸ் நோய். வெறிநாய் கடித்தால் பரவும் வைரஸ் நோய்தான் ரேபிஸ். ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்நோயை முறியடிப்பதில் முன்னேற்றம் காணவும், ஆண்டுதோறும் செப்டம்பர் 28ம் தேதி உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்த பிரெஞ்சு வேதியியலாளரும், நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் இறந்த செப்டம்பர் 28ம் தேதி உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற வேதியியல் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டியர் டிசம்பர் 27, 1822, பிரான்ஸ் டோல் நகரில் பிறந்தார். அவர் தனது இளங்கலைப் பட்டத்தையும் (1840) அறிவியல் பட்டத்தையும் (1842) பெசன்கானின் ராயல் கல்லூரியில் பெற்றார்.1854ம் ஆண்டு தன்னுடைய 31 வயதில் லில்லி யுனிவர்சிட்டியில் வேதியியல் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
இதற்கிடையே 1865ம் ஆண்டு அவரின் தந்தை காலமானார். 1866ம் ஆண்டு அவருடைய தங்கைகள் இருவரும் டைபாய்டு காய்ச்சல் காரணமாக இறந்து போயினர். 1868ம் ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டு லூயிஸ் பாஸ்டியரின் இடது கையும், காலும் ஊனமாகப் போயிற்று. இருப்பினும் வேதியியல் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து அவர் ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.
1866ம் ஆண்டு ஒயின் பற்றி ஆராய்ந்தார். 1868ம் ஆண்டு வினிகர் பற்றி ஆராய்ந்தார். 1870ம் ஆண்டு பட்டுப்பூச்சி வளர்ப்பில் அப்பூச்சிகளுக்கு வரும் நோய்களைப் பற்றி ஆராய்ந்தார். பின்னர் 1876ம் ஆண்டு பீர் பற்றி ஆராய்ந்தார். இந்த ஆய்வுகளில் அவர் கண்டறிந்ததுதான் நுண்ணுயிரிகள் நொதித்தல் மற்றும் நோயை ஏற்படுத்துகின்றன என்பது.அதன் பயனாக பாஸ்டுரைசேஷன் செயல்முறையைத் தோற்றுவித்தார். இதுவே தற்போதைய பால் பதப்படுத்தும் மற்றும் மது பானங்கள் தயாரிப்பு துறையில் பயன்படுத்தப்படுகிறது. பிரான்சில் பீர், ஒயின் மற்றும் பட்டுத் தொழில்களைக் காப்பாற்றினார்.
பிரான்ஸ் - புருஸ்ஸியர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவப் பணியாற்றச் சென்றார். அப்போது போர் வீரர்கள் நோய் தொற்று ஏற்பட்டு மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி வந்தனர். அதனால் நோய் தீவிரம் அடைந்தது. அதற்குக் காரணமாக இருப்பது நுண் கிருமிகள் என்பதை அறிந்து அதனைத் தடுத்து மருத்துவ உபகரணங்களை சூடு நீரில் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதை முதன் முதலாக வலியுறுத்தினார்.
1873ம் ஆண்டு லூயிஸ் பாஸ்டியர் பிரெஞ்சு அகடமியில் ஒரு உறுப்பினராக சேர்ந்தார். 1876ம் ஆண்டு ‘ஆந்தராக்ஸ்’ நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார். இது கால்நடைகளை தாக்கும் கொடூரமான நோய். 55 முதல் 65 வயதிற்குள் லூயிஸ் பாஸ்டர் நுண்ணுயிரியலை உருவாக்கி, அதை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தினார். நோய்கள் நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன என்பதை நிறுவிய பின்னர், அவற்றைக் கண்டறிந்து எதிர்த்துப் போராடுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயன்றார்.
ஐந்து ஆண்டுகள் கடுமையான ஆராய்ச்சிக்குப் பின்னர் ரேபிஸ் எனும் வெறிநாய் கடி நோய் வைரஸ் மூலமாக வருகிறது என்று கண்டறிந்து, 1884ம் ஆண்டு அதற்கு தடுப்பூசி கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்த தடுப்பூசியை 1885ம் ஆண்டு ஜோசப் மெஸ்டர் எனும் 9 வயது பையன் மீது செலுத்தி வெற்றி கண்டார். வெறிநாய் கடித்த அந்தப் பையன் 12 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.
1888ல் மைக்ரோ பயாலஜி ஆராய்ச்சிக்காக ஒரு பெரிய ஆராய்ச்சி நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் பாஸ்டியர் பெயரில் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனம். இது உருவாக்கப் பாடுபட்டவர் லூயிஸ் பாஸ்டியர்தான். இதற்காக பிரான்சின் மிக உயர்ந்த விருதான லெஜியன் ஆஃப் ஹானர் விருதைப் பெற்றார்.
அவருடைய 70வது பிறந்த நாளை பிரான்ஸ் பெரிய அளவில் விழாவாகக் கொண்டாடியது. பிரான்ஸ் அரசு அவருடைய பிறந்த தினத்தை விடுமுறையாக அறிவித்தது. ஆனால், பாஸ்டியரால்தான் பேசக் கூட முடியவில்லை. அந்தளவுக்கு அவருடைய உடல் சீர் கெட்டது. அதன் விளைவாக 1895ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி அவர் காலமானார். அவருடைய உடலை பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்டில் புதைத்தனர்.
இன்று அவரது பெயரைக் கொண்ட சுமார் 30 நிறுவனங்கள் மற்றும் ஏராளமான மருத்துவமனைகள், பள்ளிகள், கட்டடங்கள் மற்றும் தெருக்கள் உள்ளன. இது ஒருசில விஞ்ஞானிகளுக்கு மட்டுமே கிடைக்கும் மரியாதை.