
மதிநுட்பம் நிறைந்த அப்பாஜி என்பவர் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த கிருஷ்ண தேவராயருடைய ஆட்சியில் முதலமைச்சராகப் பணியாற்றியவர். ஒரு சமயம் டில்லி பாதுஷா அப்பாஜியைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவருடைய திறமையை சோதித்தறிய விரும்பி விஜயநகரப் பேரரசின் மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தில் “தங்கள் என் மீது வைத்துள்ள நட்பின் அடையாளமாகவும் அன்பின் வெளிப்பாடாகவும் தங்கள் நாட்டிலிருந்து எனக்கு குடப் பூசணிக்காய், நடைக் கீரை மற்றும் குழிக் கிணறு ஆகிய மூன்றையும் பரிசாக அனுப்பி வைக்கக் கோருகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
குழப்பமடைந்த ராயர் அந்த கடிதத்தை அப்பாஜியிடம் கொடுத்துப் படிக்குமாறு கூறினார்.
“அப்பாஜி டில்லி பாதுஷா நம்மிடம் கேட்டிருக்கும் மூன்றும் நடைமுறையில் சாத்தியமில்லையே. அப்படிப்பட்டவை எங்காவது கிடைக்குமா ?” என்று கேட்டார்.
சிறிது நேரம் யோசித்த அப்பாஜி “கவலையை விடுங்கள் மன்னரே. டில்லி பாதுஷா கேட்டுள்ள மூன்றையும் நான் அவருக்கு பத்திரமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
அப்பாஜி அறிவாற்றல் நிறைந்தவர். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் திறமையாக சமாளிக்கத் தெரிந்தவர். எப்படியும் டில்லி பாதுஷா கேட்டவற்றை அனுப்பி வைத்து விடுவார் என்று மனதுள் சமாதான மடைந்தாலும் அப்பாஜி இவற்றை எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கவலையும் அவருடைய மனதில் எழுந்தது.
அப்பாஜி உடனே செயலில் இறங்கினார். ஒரு ஆளைக் கூப்பிட்டு பிஞ்சு பூசணிக்கொடி ஒன்றை வரவழைத்து அதை ஒரு குடத்தில் நட்டு வளர்த்தார். பூசணி சில நாட்களில் காய்த்தது. தொடர்ந்து மொட்டை வண்டி ஒன்றை வரவழைத்து அதன் மீது மண்ணைப் பரப்பி பாத்தி கட்டச் செய்தார். அதில் கீரை விதைகளை விதைத்தார். வண்டியை நகரச் செய்தார். இப்படியாக நடைக் கீரையை தயார் செய்தார். இரண்டையும் வெற்றிகரமாக தயாரித்து முடித்தார்.
மன்னரிடம் சென்று தான் சொல்வதுபோல கடிதம் ஒன்றை டில்லி பாதுஷாவிற்கு எழுதச் சொன்னார். அதில் “எங்கள் நாட்டில் தற்போது இருக்கும் குழிக்கிணறுகள் டில்லிக்கு புதியதாக இருக்கும். ஆகையினால் தங்கள் நாட்டிலுள்ள குழிக்கிணற்றில் ஒன்றை மாதிரிக்காக எங்களுக்கு அனுப்ப வைக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். அதைக் கொண்டு ஒரு குழிக் கிணற்றைத் தயாரித்து நாங்கள் விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்பாஜி தான் உருவாக்கிய குட பூசணிக்காய், நடைக் கீரை ஆகியவற்றோடு அந்த கடிதத்தையும் கொடுத்து டில்லிக்கு அனுப்பி வைத்தார். இவற்றைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியின் திறமையை எண்ணி வியப்பில் ஆழ்ந்தார். பாராட்டு மடல் ஒன்றையும் பரிசையும் கிருஷ்ணதேவராய மன்னருக்கு அனுப்பி வைத்தார்.