பத்து நாட்கள் விடுமுறை! அனுஷா, கார்த்திக் இருவரையும் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்கு அனுப்புவதாகத் திட்டம்!
கும்பகோணம் வரை ரயில் பயணம். மிக சந்தோஷமாக இருந்தனர் குழந்தைகள்.
வேகமாகப் பின்னோக்கிச் செல்லும் மின்கம்பங்களும், வீடுகளும், மரங்களும் அனுஷாவுக்கு வியப்பூட்டின.
“அண்ணா, ஏன் மரம் எல்லாம் பின்னால போகுது?”
“நாம தான், நம்ம வண்டி தான் வேகமா முன்னால போகுது. நாம வண்டிக்குள்ள இருந்து பாக்கும் போது பாக்கி எல்லாம் பின்னால போற மாதிரி தெரியும்,” கார்த்திக்.
சன்னல் அருகே அமர்ந்து மரங்களை எண்ணினாள் அனுஷா.
கார்த்திக் சன்னல் கம்பிகளுக்கு நடுவில் தன் முகத்தை அழுத்தி வைத்தபடி அமர்ந்து “நாங்க தாத்தா வீட்டுக்குப் போறோம்” எனக் கத்திக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் இருவரும் மேல் இருக்கையைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடினார்கள்.
கும்பகோணம் அடையும் முன்னரே மழை தூற ஆரம்பித்து விட்டது.
கிராமத்துக்கு டவுன் பஸ்ஸில் போக வேண்டும்.
வழி முழுக்க நல்ல மழை. காற்றின் வேகமும் அதிகம். சாரலில் நனைந்து நடுங்கினார்கள் அனுஷாவும் கார்திக்கும்.
“ரெயின்கோட் எடுப்பா” என்றாள் அனுஷா.
“ரெயின் கோட் எல்லாம் கொண்டே வரல்ல. இதோ பஸ். ஏறுங்க ஏறுங்க!“
”சன்னல் வழியா மழை தண்ணி வருதுப்பா. சன்னல மூடுங்களேன்.”
நிறைய சன்னல்களை மூட முடியவில்லை.
அனுஷா மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மழை வந்தா மயில் தானே டான்ஸ் ஆடும். இங்க மரமும் டான்ஸ் ஆடுதே!“ என அங்கலாய்த்தாள்.
“உக்கும்! மழையினால டான்ஸ் ஆடல அனுஷா! காத்து அடிக்குதல்ல அதனாலதான் மரங்கள் ஆடுது.“
“பெருங்காற்றும் வந்ததே…” எனப் பாடினாள் அனுஷா.
“ம். அதான். காத்து ஸ்ட்ராங்க அடிக்கறதனால, மரம் எல்லாம் டான்ஸ் ஆடுது.”
அவர்கள் இறங்கும் நிறுத்தம் வந்தது.
“பாத்து சார், பசங்களைப் பாத்து இறக்குங்க! வழுக்கப் போவுது” என்றார் நடத்துனர், படியில் விழுந்து இருந்த சில இலைகளைத் தள்ளியபடி !
”அனுஷா… கார்த்திக்…”தாத்தாவின் குரல்.
ஒரு பெரிய குடைக்குள் இருந்தார் தாத்தா. இன்னொரு பெரிய குடை கையில்.
குடையைப் பிடித்துக் கொண்டும் ஒரு பயனும் இல்லை.
சுழற்றி அடித்த காற்றில் குடை மேல் பக்கமாக போனது.
“ஹே… ஆ… அப்பா… “ எனக் கத்திக் கொண்டு, காற்றில் பறந்த குடைக்குப் பின் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர் குழந்தைகள்.
வீடு அருகில் தான். அதற்குள் முழுக்க நனைந்தாயிற்று.
“என்னங்க இப்படி நனைஞ்சு இருக்காங்க! குடையை பிடிக்கல்லயா?“
“பாட்டி, விர்ருன்னு காத்தடிச்சுதா, சுர்ருன்னு, குடை மேல் பக்கம் திரும்பிடுச்சு பாட்டி,“ கார்த்திக்
குடையைக் கையில் பிடித்தபடி, அனுஷா வேகமாகச் சுற்றினாள். கூடம் முழுக்க நீர்த் திவலைகள்!
“ஏய், ஏய், அனு… சுத்தாத! விழப் போற” என தாத்தா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அனுஷா தண்ணிரில் வழுக்கியபடி கீழே விழுந்தாள்.
“அம்ம ஆ அம்ம அ…” என அவள் அழ, பாட்டி, “வேண்டாண்டி தங்கம் அழாத, ஓண்ணுமில்ல “எனச் செல்லம் கொஞ்ச, இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அழுதாள்.
“பாட்டி, பாரு, கார்த்திக் என்னைப் பாத்து சிரிக்கிறான்.”
“போடா கண்ணா ,சிரிக்காத அப்படி, சிரிக்கக் கூடாதுல்ல! போய் வேற ட்ரெஸ் போடு”
“பாட்டி திட்டி விடு பாட்டி! அந்த தாத்தாவைத் திட்டு! ”
”ஏய் நா என்ன செஞ்சேன்?”
“என்ன ஏய் ஏய் ன்னு கூப்பிட்ட… அப்புறம் நான் விழுவன்னு நீ சொன்னதால தான விழுந்தேன்”
“அதான!, பாவம் புள்ள, வலிக்குதாம்மா” எனச் சொல்லியபடி தாத்தாவுக்கு சும்மாயிருங்கள் என்று சிக்னல் செய்தாள் பாட்டி.
”அனுஷா, நீ மழையில நனைஞ்ச ட்ரெஸ்டோட, குடையோட ஆட்டம் போட்டயா ! நீர்த்திவலைகளோட உன் காலில் இருந்த அழுக்கு சேர்ந்து, வழுக்க ஆரம்பிச்சு அதுல தான் நீ விழுந்துட்ட! “ கார்த்திக்.
அனுஷாவின் தலையைத் துவட்டி, காய்ந்த டவலால் உடம்பைத் துடைத்துவிட்டு வேறு உடைகளைப் போட்டுவிட்டார் பாட்டி.
அதற்குள் தாத்தா அவர்களுக்காக வாங்கி வைத்திருந்த க்ரீம் பிஸ்கெட்டைக் கையில் எடுத்தார்.
“சாரி தாத்தா! நா தான் தெரியாம விழுந்துட்டேன். ஃப்ரெண்ட்ஸ்…” பிஞ்சுக் கையை தாத்தாவிடம் நீட்டினாள் அனுஷா.
பாட்டி சுடச்சுட பஜ்ஜி கொண்டு வந்த போது, தாத்தாவும் பேரப் பிள்ளைகளும் வீட்டு முற்றத்தில் ஓடிக் கொண்டிருந்த மழைத் தண்ணிரில் காகிதக்கப்பல் விட்டுக் கொண்டு, கப்பலுக்கு பேர் வைப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
“தாத்தா, என் கப்பல் பேரு என்ன தெரியுமா? பெஞ்சமின் பெஞ்சமின்”
“அட, நல்லாருக்கே!”
“தாத்தா அது அவ க்ளாஸ் பையன் பேரு! “
மழைத்துளி பட்டு, பெஞ்சமின் தடுமாறியதில் தொடங்கிய அனுஷாவின் அழுகை, பாட்டியின் பஜ்ஜி வாசனையில் நின்று போனது.
“வாடா செல்லம் ! மழை விட்ட பிறகு கப்பல் விட்டா ஜோராப் போகும். இப்ப வந்து பஜ்ஜி சாப்பிடு”
அன்பு மழையில் அனுஷா!