கோகுலுக்கு சைக்கிள் என்றால் கொள்ளை பிரியம். யாராவது சைக்கிள் ஓட்டிக்கொண்டு சென்றால் ரசித்து பார்த்துக் கொண்டிருப்பான். சில சமயம் யாராவது புது சைக்கிள் ஓட்டிச் சென்றால் அதன் பின்னாடியே மூச்சு வாங்க ஓடிச் சென்று பிறகு திரும்புவான். அவனும் எவ்வளவோ முறை அப்பாவிடம் சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டுப் பார்த்தான். ஆனால் வசதி இல்லாததால் தந்தை வருத்தத்துடன், 'கொஞ்ச நாள் போகட்டும் நிச்சயம் வாங்கி தருகிறேன்' என்று வாக்குறுதி கொடுப்பார்.
பக்கத்து வீட்டில் இருக்கும் இவன் நண்பன் விஷால் புது சைக்கிள் வாங்கியதை அறிந்து ஓடி வந்தான். "டேய் நானும் ஒரு ரவுண்டு ஓட்டுறேன் டா" என்று கேட்க, விஷாலும் "சரி ஓட்டிப்பார்!" என்று கொடுக்க, சைக்கிளை வாங்கி ஓட்டி மகிழ்ந்தான்.
ஆனாலும் ஆசை தீரவில்லை. அவனிடம் கேட்டு இன்னொரு ரவுண்டு ஓட்டி விட்டு மனசே இல்லாமல் சைக்கிளை திருப்பிக் கொடுத்தான். அன்று இரவு முழுவதும் அவன் கனவில் அந்த சைக்கிள் தான் வந்து போனது. அடுத்த நாள் திரும்பவும் அவன் அப்பாவிடம் "ப்ளீஸ் பா எனக்கும் சைக்கிள் வாங்கி கொடு. பக்கத்து வீட்டு விஷால் புதுசா சைக்கிள் வாங்கி இருக்கிறான். அதே மாதிரி எனக்கும் வேணும்" என்று கூற, அவன் அப்பாவோ வருத்தத்துடன் "பணம் இல்லை. சீக்கிரம் வாங்கி தருகிறேன் கண்ணா," என்று சொல்லி சமாளித்தார்.
மறுநாளும் விஷாலிடம் சைக்கிள் ஓட்ட கேட்க அவனோ தர மறுத்து விட்டான். கோகுலுக்கு ஒரே அழுகை அழுகையாக வந்தது. எப்படியும் சைக்கிள் வாங்கியே தீர வேண்டும் என்ற ஆசையில் அதைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தான். தானே சைக்கிள் வாங்கினால் என்ன என்று எண்ணி அம்மா தரும் காசை உண்டியலில் சேமிக்க ஆரம்பித்தான். அவன் அம்மாவும் இவனின் ஆர்வத்தை கவனித்து தினம் தன்னால் முடிந்த ரூபாய்களை கொடுத்து அவனை உண்டியலில் போட வைத்தாள்.
இதற்கிடையில் சில நாட்களாக பள்ளிக்கு வராத தன் நண்பன் விஷாலை காணச் சென்று ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை என கேட்க, "என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை; இரண்டு நாட்கள் பெட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். மருந்து மாத்திரைகள் வாங்க பணம் ஏற்பாடு பண்ண அப்பா வெளியே போயிருக்கிறார். அதனால்தான் தன்னால் பள்ளிக்கு வர முடியவில்லை" என்று கூறினான்.
சற்று யோசித்த கோகுலோ வீட்டுக்கு ஓடிச் சென்று தான் சேமித்த உண்டியலை எடுத்து வந்து விஷாலிடம் கொடுத்து, "இதை மருத்துவ செலவுக்கு வச்சுக்கோ" என்றான். விஷாலுக்கோ கண்ணில் நீர் கட்டியது. நன்றி சொல்லி வாங்கிக் கொண்டான்.
தான் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்குவதை விட தன் நண்பனுக்கு உதவுவது சரியாகப் பட்டதால் எதையும் யோசிக்காமல் சட்டென்று தான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்த நல்ல மனதை நினைத்து விஷாலும் அவனது பெற்றோரும் மகிழ்ந்தனர்.
இதை அறிந்த கோகுலின் அப்பா அம்மா இருவரும் கோகுலை நினைத்து பெருமைப்பட்டார்கள். "உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் கவலைப்படாதே. சீக்கிரமே நீ ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கித் தருகிறேன்" என்று தந்தை கூறியதும் "பரவாயில்லை அப்பா உங்களால் எப்போது முடியுமோ அப்போது வாங்கிக் கொடுங்கள். நான் காத்திருக்கிறேன்," என்று பெரிய மனுஷனைப் போல் சொல்லிவிட்டு சென்ற கோகுலைப் பார்த்து அவன் தாய் ரொம்பவும் பெருமிதம் அடைந்தாள்.
நீதி:
இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? ஆபத்தில் கை கொடுப்பதுதான் சிறந்தது என்பதைத் தானே! நீங்களும் கோகுலைப் போல் நல்ல மனதுடன் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் தானே!