
கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளிச் சிறுவர்கள் அருகில் இருக்கும் குளம், குட்டைகளில் சரியாகப் பராமரிக்கப்படாத நீச்சல் குளங்களில் இறங்கி நீரில் நீந்தி விளையாடுவார்கள். குறிப்பாக மதிய நேரத்தில் இவ்வாறு விளையாடுவர்.
உச்சி பொழுதில் தண்ணீர் ஓடும் நதிகளிலும், தேங்கியிருக்கும் குளங்களிலும் தண்ணீரின் மேற்பரப்பு சூடாக இருந்தாலும், உள்ளே ஜில்லென்று இருக்கும். இதனால் முற்பகலில் ஓடி விளையாடி அலுத்துக் களைத்துப் போன சிறுவர்கள் பிற்பகலில் இரண்டு மூன்று மணிக்கு தண்ணீரில் மூழ்கிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இரண்டு மூன்று மணி நேரம் விளையாடி விட்டு பொழுது சாயும் போது ஐந்து மணி அளவில் சிறுவர்கள் தண்ணீரை விட்டு வெளியே வந்து வீட்டுக்குப் போவார்கள். அப்போது சிறுவர்களின் கண்கள் சிவப்பாக இருக்கும்.
காலையில் விளையாடும் சிறுவர்களுக்கு கண் சிவப்பு வர வாய்ப்பில்லை. மதியத்துக்கு மேல் தான் இப்பாதிப்பு தோன்றும்.
பொதுவாக சிவந்த கண்களைப் பார்த்துப் பெரியவர்கள் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது என்பர். மறுநாள் தலைக்கு நன்றாக நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று தாய்மார் பிள்ளைகளுக்கு எண்ணெய்க் குளியல் செய்து விடுவார்கள்.
ஒரு வாரம் ஆகியும் கண்ணில் சிவப்பு குறையவில்லை கொஞ்சம் அரிக்கிறது என்றதும் சிலர் கடைகளில் விற்கும் பிதுக்கு மருந்து வாங்கிப் பயன்படுத்துவர். பலனில்லை. வேறு சிலர் கண்களில் அமிர்தப் பால் விட்டு சிவப்பு மறைகிறதா? என்று பார்ப்பார்கள்.
இவ்வாறாக ஒரு வாரம் கண்ணுக்கு எந்த மருந்து போட்டாலும் கண்ணின் சிவப்பு மறையாமல் இருக்கும். முன்பை விட கண்களில் தொந்தரவு அதிகமாகும். சிறுவர்களும் தினமும் நீர் நிலைகளில் குதித்து விளையாடி அதிக நேரம் இருந்து விட்டு வருவர்.
கண்களின் சிவப்புக்கு மேற்கூறிய காரணங்கள் மட்டும் கிடையாது. வேறொரு முக்கியக் காரணமும் உண்டு. வெயில் நேரங்களில் நத்தைகள் மதியப் பொழுதில் தண்ணீரின் மேற்பரப்புக்கு வந்து முட்டையிடும். இந்த முட்டைகள் தண்ணீரில் விளையாடும் குழந்தைகளின் கண்களுக்குள் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வாறு ஒட்டிக்கொண்டால், கண்கள் சிவப்பாகி விடும்.
கண் சிவப்பால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும், சிறியவர்களும் மதுரையில் உள்ள ஒரு மிகப்பெரிய கண் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார்கள். இவர்கள் ஒரே பகுதியை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
நோயின் காரணத்தை அறிய விரும்பி மருத்துவமனையில் இருந்து ஒரு குழு அவர்கள் வாழிடமான புதுக்கோட்டை அருகில் உள்ள சில ஊர்களுக்கு சென்று அந்த ஊர்களில் இருக்கும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் 'சேம்பிள்' எடுத்து வந்து பரிசோதித்துப் பார்த்தனர்.
பரிசோதனையின் போது தண்ணீரில் நத்தையின் முட்டைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த முட்டைகளால் தான் சிறுவர்களின் கண்கள் சிவந்து போயின என்ற உண்மை தெரிய வந்தது. அதன் பின்பு அதற்குரிய சிகிச்சைகளை செய்து கண்களின் சிவப்பை அகற்றினர்.
கோடை காலத்தில் தண்ணீரில் நீந்தி விளையாடும் சிறியவர்களும் பெரியவர்களும் பாதுகாப்பாக கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொண்டு தண்ணீரில் இறங்க வேண்டும். கண்களுக்குள் நீர் வாழ் பிராணிகளின் முட்டைகள் புகுந்து விடாமல் கவனமாக விளையாட வேண்டும்.