
அழகான ஒரு கிராமம். அதில் முத்துப்பாண்டி என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். தினமும் தன்னிடம் இருக்கும் மாடுகளை காட்டிற்கு அழைத்துச் சென்று மேய விடுவது வழக்கம். ஒரு நாள் அவனுக்கு அவசர காரியமாக பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. அதனால் தன் மகன் கோபாலிடம், "நாளையிலிருந்து இரண்டு நாட்கள் மட்டும் இந்த மாடுகளை காட்டிற்கு அழைத்துச் சென்று மேய விடு" என்று கூற அவனோ "முடியாது" என்று மறுத்து விட்டான்.
கோபத்தை அடக்கிக் கொண்ட முத்துப்பாண்டியோ "நாளை நீ கட்டாயம் சென்றுதான் ஆக வேண்டும். எனக்கு வெளியில் வேலை உள்ளது" என்று கண்டிப்பாக கூறிவிட்டு படுக்கச் சென்று விட்டார்.
காலையில் சூரியன் உதயமாவதற்கு முன்பே முத்துப்பாண்டி கிளம்பி விட, சிறிது நேரம் கழித்து எழுந்த கோபாலோ தந்தையைக் காணாமல், 'வேறு வழி இல்லை. இந்த மாடுகளை மேய்த்துத்தான் ஆக வேண்டும் போலும்' என்று எண்ணி, காலைக்கடன்களை முடித்துவிட்டு அம்மா கொடுத்த கஞ்சியையும் குடித்துவிட்டு மாடு மேய்க்கக் கிளம்பினான்.
காட்டை அடைந்ததும் மாடுகள் புற்களை மேயத் தொடங்கின. கோபாலும் அருகில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து கொண்டு இங்குமங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பொழுதே போகவில்லை.
எப்போதும் சோம்பேறியாக வேலை செய்யாமல் படுத்துக் கிடக்கும் அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லாததால், என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்த போது, தூரத்தில் சிலர் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான்.
உடனே சத்தமாக "அய்யோ மாடு கிணற்றில் விழுந்துவிட்டது. யாராவது உதவிக்கு வாங்களேன்" என்று கூச்சலிட்டான். வேலை செய்பவர்கள் அப்படியே வேலையை போட்டுவிட்டு ஓடி வந்தனர். என்ன என்று விசாரிக்க "இந்த பெரிய கிணற்றில் தான் என் மாடு ஒன்று விழுந்துவிட்டது?" என்று கூற, வந்தவர்கள் எங்கே என்று பதட்டத்துடன் கிணற்றை எட்டிப் பார்த்தனர்.
கோபால் சிரித்துக்கொண்டே "சும்மா பொய் சொன்னேன்" என்றதும் வந்தவர்கள் கோபம் கொண்டு அவனை திட்டி விட்டு திரும்பிச் சென்றனர். கோபாலோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து சிரித்து சந்தோஷப்பட்டான்.
அடுத்த நாள் வழக்கம் போல மாடுகளை காட்டிற்கு அழைத்து வந்து மேய விடும் பொழுது, உண்மையிலேயே அருகில் இருந்த பெரிய கிணற்றில் ஒரு மாடு தவறி விழுந்து விட்டது. கோபால் சத்தம் போட்டு அலற ஆரம்பித்தான். மாடு கிணற்றில் விழுந்து விட்டது என்று பல முறை கத்தி கூப்பிட்டும் கூட ஒருவரும் உதவிக்கு வரவில்லை.
அவர்கள் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு இவனுக்கு இதே வேலையா போச்சு என்று முணுமுணுத்துக் கொண்டே வேலையை தொடர்ந்தனர். காப்பாற்ற யாரும் இல்லாததால் மாடும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது. கோபாலின் கதறல் ஓய்ந்த பாடில்லை. அழுது கொண்டே மீதி இருக்கும் மாடுகளை கூட்டிக்கொண்டு தன் வீட்டை நோக்கி புறப்பட்டான். தான் செய்த செயல் தனக்கே வினையாகி விட்டதே என்று மனம் வருந்தி அழுதான்.
நீதி: உண்மையே பேச வேண்டும். நாம் பேசும் வார்த்தையில் உண்மை இல்லையென்றால் நம்மை யாரும் நம்ப மாட்டார்கள். உண்மைதானே குழந்தைகளே!