காட்டில் ஒரு சிங்கம் வசித்து வந்தது. அதனைக் கண்டு மற்ற விலங்குகள் அனைத்தும் பயந்து நடுங்கின. கைகட்டி நின்றன. சிங்கம் எந்த வேலை கொடுத்தாலும் பயந்து கொண்டு செய்தன. தனக்கு நிகர் எதுவும் இல்லை என்ற ஆணவத்துடன் சுற்றி திரிந்தது சிங்கம். தன்னைவிட பெரியதான யானையைக் கூட விடவில்லைை. அதனையும் விரட்டி வேலை வாங்கியது.
ஒரு நாள் யானை தோட்டத்தில் கரும்பை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அதன் ருசிக்காக ஈயொன்று வந்து கரும்பில் அமர்ந்து மொய்த்தது. கரும்பில் உள்ள இனிப்பை சுவைத்தது. யானையும் அதனை விரட்டி அடிக்காமல் "இன்னும் சாப்பிடு உனக்கு பசிக்குமே!" என்று கூறியது. இதனால் மிகவும் மகிழ்ந்த ஈயோ ஆசை தீர வயிறு முட்ட கரும்புச்சாறை பருகியது. யானை அந்த ஈயைப் பார்த்து "எனக்கு ஒரு உதவி செய்வாயா?" என்றது. "என்ன வேண்டும் தாராளமாகக் கேளுங்கள் யானையாரே!!" என்று கூறிய ஈயிடம் யானை சிங்கத்தின் அராஜக செயல்களை எடுத்துக் கூறியது.
காட்டில் உள்ள அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வைக்கிறது இந்த சிங்கம். இதற்கு ஒரு வழி பண்ண வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டது. "கவலைப்படாதீர்கள். நான் ஒரு உபாயம் செய்கிறேன். நிம்மதியாக போய் வாருங்கள்" என்றது.
அடுத்த நாள் சிங்கத்தை தேடிச் சென்ற ஈ பயமின்றி அதன் மீது அமர்ந்தது. அதைக் கண்டதும் சிங்கத்திற்கு கோபம் வந்து கர்ஜனை செய்தது. "உன்னை என்ன செய்கிறேன் பார். கடித்து குதறி விடுவேன். நசுக்கி விடுவேன்" என்று வீர சபதம் போட்டது. ஈயோ அதற்கு சிறிதும் அசராமல் "நீ பலசாலியாய் இருக்கலாம். உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் நான் பயம் கொள்ள மாட்டேன். முடிந்தால் என்னை நெருங்கிப்பார்" என்றது. சிங்கம் கோபத்துடன் அதனை முறைத்து விட்டு ஈயின் சவாலை ஏற்றுக் கொண்டது.
ஈ பறந்து வந்து சிங்கத்தின் முகத்தில் அமர்ந்து கொண்டது அதை விரட்டுவதற்காக சிங்கம் தன் கால் நகங்களால் பிடிக்க முயல ஈ பறந்து விட்டது. சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிராண்டிக் கொண்டது.
அடுத்ததாக ஈ சிங்கத்தின் முதுகில் அமர்ந்து கொண்டது. அதை விரட்டுவதற்காக சிங்கம் தன்னுடைய பற்களால் முயன்றபொழுது ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது. முகம், முதுகு என ரத்தம் பெருக கோபம் கொண்ட சிங்கம் ஈயை பார்த்து "தைரியம் இருந்தால் என் எதிரில் வா. உன்னை கடித்து குதறி விடுகிறேன்" என்றது. ஈயோ சிங்கத்தின் அருகில் பறந்து வந்து "நீ என்னதான் முயன்றாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. உன்னையே நீ பற்களால் கடித்துக்கொண்டு, நகங்களால் கீறிக்கொண்டு காயம் அடையப்போவது தான் மிச்சம்" என்றது.
சிங்கத்தினால் கடைசிவரை ஈயை பிடிக்கவோ, கொல்லவோ முடியவில்லை. தன்னுடைய இயலாமையை எண்ணி வெட்கி தலை குனிந்தது. தான் உடலளவில் பலசாலியாய் இருந்தாலும் ஒரு சின்ன ஈ தன்னை இவ்வளவு பாடாய்படுத்திவிட்டதே. உருவத்தைக் கண்டு சாதாரணமாக எடை போடக்கூடாது போலும் என்பதை உணர்ந்து கொண்டது.
நீதி: இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது. பெரிய தேர் ஓடவே காரணமாய் இருப்பது அதன் சிறிய அச்சாணி தான் என்பதை மறந்து விடக்கூடாது!