
சோனுக்கு பள்ளி விடுமுறை விட்டாச்சு. ஒரே ஜாலிதான். வீட்டிற்கே வராமல் விளையாட்டு விளையாட்டு தான். சோர்வாகும் வரை நன்கு விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு தூங்கி விடுவான். திரும்பவும் காலையில் எழுந்து விளையாட்டு, சாப்பாடு, டிவி, தூக்கம் என நான்கு நாட்களாக பொழுதை கழித்தான். அவன் அம்மா அனுவுக்கு கோபம் வந்தது.
""என்ன சோனு உன் ரூமை இவ்வளவு மோசமா வச்சிருக்க? முதல்ல டிவிய ஆஃப் பண்ணு. உன்னோட ரூம் எப்படி இருக்குனு பாரு! முதல்ல எல்லாத்தையும் சரியா அடுக்கிவை," என்றாள். அவனும் சோம்பலுடன் "சரிமா" என்று சொல்லிவிட்டு திரும்பவும் டிவியை பார்த்துக் கொண்டிருந்தான்.
அனு ஆபீசுக்கு கிளம்பி கொண்டே, "மத்தியானம் மறக்காமல் நேரத்தோடு சாப்பிடு. டேபிளில் எல்லாம் வைத்திருக்கிறேன். எனக்கு மணி ஆயிடுச்சு நான் கிளம்பறேன்," என்று கிளம்பும்போது, "சாயங்காலம் ஆபீஸிலிருந்து வரும்போது உன் ரூம் சுத்தமா இருக்கணும்" என்று சொல்லிவிட்டு சென்றாள். அவனும் தலையை வேகமாக ஆட்டிவிட்டு திரும்பவும் டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.
மாலையில் ஆபீஸிலிருந்து வந்த அவன் அம்மாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவனின் காதைப் பிடித்து திருகி அழைத்துச் சென்று, "பார் உன் ரூமை! புத்தகங்கள் எல்லாம் மேசையில் கலைந்து கிடக்கு. கழட்டிய துணிகள் அங்கும் இங்குமாக வீசி கிடக்கு. விளையாட்டு சாமான்களைக் கூட எடுத்து வைக்கவில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிட்ட காலி பாக்கெட்டுகள் கூட கட்டிலுக்கு அடியில் கிடக்கு. பார்க்கவே ரொம்ப அசிங்கமாக இருக்கு" என்று கூறி அவனைப் பார்த்து முறைத்தாள். "இதையெல்லாம் எடுத்து ரூமை சுத்தமாக வைத்தால்தான் நாளை உன்னை விளையாட அனுப்புவேன். இல்லையென்றால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்" என்று சொல்லிச் சென்றாள்.
"அச்சச்சோ நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆச்சே! அம்மாவுக்கு ஆபீஸ் லீவு. விளையாட விடவில்லை என்றால் என்ன பண்ணுவது" என்று எண்ணிக் கொண்டே ரூமை சுத்தப்படுத்த உள்ளே நுழைந்தான். எதை எங்கு வைக்க வேண்டும் என்றே தெரியாத அளவிற்கு குப்பையும் கூளமுமாக இருந்ததைக் கண்டு செய்வதறியாது நின்று கொண்டிருந்தான்.
ஸ்நாக்ஸ் சாப்பிட்ட தட்டில் எறும்பும், ஈயும் மொய்க்க, களைந்து போட்ட உடையை உதறினால் கொசு பறக்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் மலைத்துப் போய், கொஞ்ச நேரம் படுத்து விட்டு செய்யலாம் என்று எண்ணியபடியே கரடி பொம்மையைத் தேடினான். அவன் எப்பொழுதும் கட்டிலில் கரடி பொம்மையை பக்கத்தில் போட்டுக் கொண்டுதான் தூங்குவான்.
கரடி பொம்மையைத் தேட அது அவனுடைய மேஜையில் ஒரு ஓரமாக இருந்தது. இவன் அதை தூக்க போகும்போது கரடி பேச ஆரம்பித்தது. "சே! இவ்வளவு குப்பைக்கு நடுவிலா நாம் தூங்கப் போகிறோம்! நான் வரலை" என்று சொல்ல உடனே மேசையில் கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்தான்.
"அங்க பாரு கட்டில் அடியில் நீ சாப்பிட்டு போட்ட ஸ்னாக்ஸ் கவர்கள்" என்று கேலி செய்ய, அதையும் சுத்தம் செய்தான். தரையில் கிடந்த பொம்மைகளையும் அழகாக எடுத்து வைக்க, "சாப்பிட்ட தட்டில் ஈயும் எறும்பும் மொய்கிறது பார்! முதலில் இதையெல்லாம் சரி பண்ணு" என்றது. கரடி சொன்னபடியே சுத்தம் செய்து ரூமை பார்க்க பளிச்சென்று சுத்தமாக இருந்தது.
ஆபீஸிலிருந்து வந்த அம்மா அவன் ரூமை பார்த்து திகைத்துப் போனாள். "இது எப்படா பண்ண? ரொம்ப சுத்தமா வச்சிருக்கியே ஹேப்பியா இருக்கு" என்று பாராட்டினாள். பாராட்டியதுடன் நிற்காமல் நீண்ட நாட்களாக அவன் ஆசைப்பட்ட சைக்கிள் ஒன்றையும் வாங்கி பரிசளித்தாள்.
"சுத்தமான சூழலில் இருப்பது உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் நல்லது. சுத்தம் சோறு போடும். சுகாதாரக் கேடு நோய் தரும் என்பார்கள். இனிமேலாவது சோம்பல் படாமல் உன் அறையை சுத்தமாக வைத்துக்கொள். சரியா?" என்றாள். சோனுவும் பலமாக தலையாட்டினான்!
நீதி: இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? சுத்தம் சுகம் தரும் என்பதால் நம்மையும் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தானே!