சீன சிறுவர் கதை: உலக மகா கருமியும், மூன்று மகன்களும்!

Chinese children's story
Chinese Man and his sons
Published on

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் உலக மகா கருமி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, தனக்குப் பின் தனது மூன்று மகன்களில் தனது சொத்துக்களை யார் பொறுப்பாக வைத்திருப்பார்களோ அவர்களிடம்தான் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணினார். அவர்களுக்கான தகுதி அறிதல் சோதனை நடத்தப்பட்டது.

முதல் மகனை அருகில் அழைத்து, “நான் இறந்த பிறகு எனது சவ அடக்கத்தை எப்படி நடத்துவாய்?” என்று கேட்டார்.

“சிறப்பான முறையில் செய்வேன், அப்பா! தங்க ஜரிகை அலங்காரங்கள் செய்த அங்கியை உங்களது சடலத்துக்கு அணிவித்து, வெள்ளி சவப்பெட்டிக்குள் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வேன். மூன்று நாட்களுக்கு உங்கள் பெயரால் ஏழைகளுக்கு உணவளிப்பேன்.”

“முட்டாள்! வெள்ளி சவப்பெட்டி - தங்க அங்கி - மூன்று நாட்களுக்கு ஏழைகளுக்கு உணவு! இந்த வெட்டிச் செலவுகள் எதற்கு? நான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் நீ விரயமாக்கிவிடுவாய்! போ அந்தப் பக்கம்!”

அடுத்ததாக, இரண்டாவது மகனிடம் அதே கேள்வி.

“அண்ணன் மிகவும் ஆடம்பரமானவர். ஆனால் நான் எளிமையான முறையில் உங்களது சவ அடக்கத்தைச் செய்வேன். துறவிகளை அழைத்து ஈமக் கிரியை நடத்துவேன். துறவிகளுக்கு உணவு அளிப்பேன். ஏழைகளுக்கு உணவளிக்க மாட்டேன்.”

“அவன் அளவுக்கு இல்லாவிட்டாலும், நீயும் ஓர் அறிவிலிதான்! துறவிகள் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்று உனக்குத் தெரியுமா? அது மட்டுமல்ல; அவர்கள் ஈமக் கிரியை செய்ததற்கு நீ அவர்களுக்கு தங்கக் காசு கொடுக்கவும் வேண்டிவரும். அந்தப் பக்கம் போ! உங்களுடைய தம்பியாவது என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்!”

மூன்றாவது மகன் வந்தான்.

“உங்களுடைய சவ அடக்கத்திற்காக நான் எந்தச் செலவும் செய்ய மாட்டேன், அப்பா! அது மட்டுமல்ல; உங்கள் சடலத்தை வைத்து நான் பணம் சம்பாதித்துவிடுவேன்!”

கருமிக்குப் பெருமகிழ்ச்சி.

“அருமை மகனே, அருமை! அது சரி; எனது சடலத்தை வைத்து நீ எப்படி பணம் சம்பாதிப்பாய்?”

“உங்களது சடலத்தை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு சென்று, நல்ல விலை பேசி விற்றுவிடுவேன்!”

“சபாஷ், மகனே! நீதான் அப்பனுக்குத் தப்பாத பிள்ளை!”

பாராட்டிய கருமி, தனது தலையணை அடியில் இருந்த சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மரம் சிம்மாசனமாகி சிம்மாசனம் சின்னாபின்னமாகி...
Chinese children's story

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com