

குட்டீஸ்களா, கிறிஸ்துமஸ் வரப் போகிறது! கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா; அடுத்தது கிறிஸ்துமஸ் கேக் தான். தீபாவளிக்கு இனிப்பு பலகாரம், பொங்கலுக்கு கரும்பு, ரம்ஜானுக்கு பிரியாணி என்றால், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் முக்கிய இடம் வகிப்பது கேக் வகைகள் தான்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீடுகளில் பல வகையான கேக்குகளைச் செய்வார்கள். உங்களுக்குப் பிடித்தமான கேக் பிளம் கேக்காக இருக்கலாம், பாதாம் கேக்காக இருக்கலாம்; இதுபோல் பலவிதமான கேக்குகளை அம்மா செய்து தருவார்கள். இந்த கிறிஸ்துமஸ் கேக் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்வோமா?
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. பதினான்காம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய நாள் ‘விஜில்’ (Vigil) என்னும் உண்ணா நோன்பு இருப்பதை மக்கள் கடைபிடித்து வந்தனர்.
இந்த நோன்பு இருப்பவர்கள், மறுநாள் சாப்பிடுவதற்கு இதமானதும், எளிதில் செரிக்கக்கூடிய தன்மை உடையதுமான ஓட்ஸ் கஞ்சியைப் பருகுவார்கள். இது ‘பாரிட்ஜ்’ (Porridge) என அழைக்கப்பட்டது. இது சற்று கூழ்மத் தன்மையுடனும் திடமானதாகவும், அதாவது வெண்ணெய் போன்று இருந்தது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
கிறிஸ்துமஸ் அன்று காலை உண்பதற்கு மேல்நாடுகளில் சிறப்பாகத் தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் கேக்குக்கு ‘பிளம் புட்டிங்’ (Plum Pudding) என்று பெயர். உலர்ந்த திராட்சை, மாவு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்டு இதைச் செய்வது மரபு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டு மன்னன் ஒருவன், கிறிஸ்துமஸுக்கு முன்தினம் வேட்டைக்குச் சென்றதால் குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப முடியாத நிலையில், காட்டிலேயே நண்பர்களுடன் விருந்து உண்ண நினைத்தான். சமையல்காரன் தன் கையில் இருந்த அனைத்துப் பொருட்களையும் கலந்து சமைத்தான் என்பது வரலாறு. அதுவே இந்த கிறிஸ்துமஸ் அன்று உபயோகிக்கும் பிளம் புட்டிங் கேக் என்று கூறுகிறார்கள்.
‘கேக்’ என்ற வார்த்தை பழைய வட ஐரோப்பாவின் நார்டிக் வார்த்தையான ‘காக்கா’ (Kaka) என்பதிலிருந்து பெறப்பட்டது. ரோமானியர்கள் கேக் தயார் செய்யும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருந்தனர்; இதில் பிளம் கேக் இன்றும் பிரபலமான கேக் வகையாகும்.
இதேபோல பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் உண்ட கேக் ரகங்களும் பிரபலமானவை. எகிப்திய கேக் என்பது ரவை, தேன், வெண்ணெய் மற்றும் முட்டை ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்பட்டது.
‘ஸ்காட்டிஷ் புரூட் கேக்’ என்பது ஓட்ஸ், பார்லி மாவு, உலர்ந்த திராட்சை, வெண்ணெய், முட்டை மற்றும் விஸ்கி அல்லது பிராந்தி ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படுகிறது. ‘ஜப்பானிய ஆரஞ்சு கேக்’ என்பது அரிசி மாவு, ஆரஞ்சு, வெண்ணெய், முட்டை மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் கலவையில் தயாரிக்கப்படுகிறது; இது ஜப்பானில் பிரபலமானது.
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாவு பிசைந்து கேக் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது குடும்பத் தலைவி ஒரு நாணயத்தை அந்த மாவுடன் கலந்து வைப்பார்.
இறுதியில் கிறிஸ்துமஸ் அன்று கேக் வெட்டி குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்படும் போது, அந்த நாணயம் யாருக்குக் கிடைக்கிறதோ அவரே அதிர்ஷ்டசாலியாகக் கருதப்படுவார். அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பரிசுகள் வழங்குவார்கள். இதனால் கேக் தயாரிக்கப்பட்ட நாளிலிருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை ஆரம்பித்துவிடும். குடும்ப உறுப்பினர்கள் அந்த நாணயம் யாருக்கு வரும் என்ற எதிர்பார்ப்போடு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.
2017-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இத்தாலியின் மிலன் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் மிகப்பெரிய கேக் செய்யப்பட்டது. 140 கிலோ எடை கொண்ட இந்த கேக், உலகின் மிகப்பெரிய ‘பன்டோன்’ (Panettone) கேக் என்ற பெருமையைப் பெற்றது.
என்ன குட்டீஸ்களா! இந்த கிறிஸ்துமஸ்க்கு எந்த வகையான கேக் அம்மா செய்யப் போகிறார்கள்? நாம் எந்த வகையான கேக் சாப்பிடப் போகிறோம் என ஆவலாக உள்ளீர்களா? கிறிஸ்துமஸ்க்கு மட்டும் இல்லாமல் புத்தாண்டு அன்றும் விதவிதமான கேக்குகளை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், மற்ற மதத்தவர்களுக்கும் கொடுத்து கிறிஸ்துமஸையும் புத்தாண்டையும் மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழுங்கள். ஓகேவா குட்டீஸ்களா!