🐄ஆடு அளவு பசு! ஆச்சர்யம் ஆனால் உண்மை; குட்டீஸ்!
சாதாரணமாகப் பசுக்களைப் பாதுகாத்து, பராமரிப்பதே ஒரு அருமையான அனுபவம். பசுக்களில் பல வேறு வகைகள் உண்டு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். நம் இந்தியாவில் மட்டுமே 50 வகைப் பசுக்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை கிர் பசு, ரெட் சிந்தி, சஹிவால், காங்கேயம், ஓங்கோல் பசு ஆகும்.
எல்லோராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படும் ஒரு வாமன (குள்ளம்) வகைப் பசுக்கள் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ளன. அவை புங்கனூர் பசு என்றும், நாடிப்பதி நானோ பசு என்றும் அழைக்கப்படுகின்றன.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்! இந்தப் புங்கனூர் பசுவின் உயரம் இரண்டரை அடிதான். ஆடு அளவுதான் பசு என்றால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியுமா? இந்தப் பசுக்களின் மூர்த்திதான் சிறியது, கீர்த்தி பெரிது. இவைகள் கொடுக்கும் பாலின் தரமும், சத்தும், தனிச் சுவையும் உள்ளதாகக் கூறுகிறார்கள்.
இன்னொரு விஷயம் இந்தப் பசுக்களின் சாந்த குணம். மிகவும் சாதுவான சுபாவம் கொண்ட காமதேனுக்கள் என்று கிராம மக்கள் இந்தப் பசுக்களைப் புகழ்கிறார்கள். முட்டுதல் என்பதே இந்தப் பசுக்களுக்குத் தெரியாது. நாம் சொல்லிக் கொடுத்தால் தான் உண்டு.
இவை உட்கொள்ளும் உணவும் மிகவும் குறைவு. இந்தக் காரணங்களால் விவசாயிகள் இவ்வகைப் பசுக்களை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
புங்கனூர் பசுவை விட ஒரு அடி உயரமான பசு நாடிப்பதி நானோ ஆகும். இந்த நாடிப்பதி நானோ கொடுக்கும் பால் அதிகக் கொழுப்புச் சத்து கொண்டதாகக் கருதப்படுகிறது.
அகலமான நெற்றியும், சிறிய கொம்புகளையும் கொண்ட புங்கனூர் பசுவின் எடை 115 முதல் 120 கிலோக்கள் தான். குள்ளம்தான், ஆனால் கொடுக்கும் பால் வெள்ளம். நாளைக்கு 5 லிட்டர்கள் வரை தரக்கூடியவை இந்த வாமனப் பசுக்கள்.
இந்தப் பசுக்களைப் பராமரிப்பதில் இருக்கும் ஒரே ஒரு கஷ்டம் என்று விவசாயிகள் கூறுவது, அவைகளைக் கறப்பதில் இருக்கும் சிரமம் தான்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கன்றுக்குட்டி அளவே இருக்கும் இந்தப் புங்கனூர் மற்றும் நாடிப்பதி நானோ பசுக்களின் கன்றுக்குட்டிகள் பார்க்க எத்தனை அழகாக, க்யூட்டாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

