
முன்பெல்லாம் வீட்டில் ஏதாவது ஒரு கயிறை பார்த்து விட்டால் ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பித்து விடுவோம். தெரிந்தோ தெரியாமலோ அப்படி விளையாடும் விளையாட்டினால் பல்வேறு நன்மைகளை பெற முடியும் என்பதை அப்போது அறியாவிட்டாலும் இப்பொழுது உணர்கிறோம். அவை என்ன என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கோங்க குட்டீஸ்...
தசை இயக்கம்:
உடற்பயிற்சி செய்வதை சிறுவயதில் இருந்தே ஆரம்பித்து விட வேண்டும் . தொடர்ச்சியாக ஸ்கிப்பிங் ஆடும்போது இந்தப் பயிற்சி உடலின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் இந்த பயிற்சியின்போது கை ,கால், மார்பு, வயிறு, தொடை போன்றவற்றின் தசைகள் இயங்குகின்றன. இந்த இயக்கத்தால் இவை ரத்தத்திலிருந்து அதிக அளவு பிராணவாயுவைப் பெற்றுக் கொண்டு அங்கு சேர்ந்துள்ள கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றி, அங்குள்ள உறுப்புகள் சுத்தமடைய வழிவகை செய்கின்றன. இதனால் உறுப்புகள் சுத்தம் அடைவதுடன் சுறுசுறுப்படைந்து நல்ல வலுவடைகின்றன.
எடை குறையும்:
ஸ்கிப்பிங் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது இதயத்திற்கு ரத்தம் செல்வது அதிகரிக்கிறது. மூளை, சுவாசப்பை, கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம் ஆகிய முக்கிய உறுப்புகளுக்கும் ரத்தம் செல்வது அதிகரிக்கிறது. இதனால் நாள் முழுவதும் உற்சாகமாக உழைப்பதற்கு உடல் தயாராகி விடுவதுடன், உடல் எடையை குறைக்கவும் இப்பயிற்சி உதவுகிறது.
மரபணுவின் வேலை:
பொதுவாக எல்லோருக்கும் நல்ல உயரமாக வளர வேண்டும் என்று ஆசை இருப்பது இயல்பு. ஆனால் அப்படி நினைத்தபடி எல்லோராலும் வளர முடிவதில்லை என்பது நடைமுறை. அப்படி உயரமாக வளர வேண்டும் என்றால் அந்த வளர்ச்சியில் அவர்களுடைய மரபணுக்களின் பங்கு நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்பது அறிவியல் கூறும் ஆய்வு. மேலும் உடலில் சுரக்கும் வளர்ச்சி இயக்குநீர் அந்த உயரம் வளர்வதற்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது.
உயரமாக்கும் காரணிகள்:
இதனுடன், அவர்கள் சாப்பிடும் உணவுகள், உடற்பயிற்சிகள், நோய் வராமல் உடல் நலனை காக்கும் முறைகள் ஆகியவற்றை பொருத்தும் உயரம் அமையும். இதற்கு ஸ்கிப்பிங் ஆடினால் உயரம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகின்றனர்.
மேற்கூறிய காரணங்களால் ஸ்கிப்பிங் ஆடுவதை தொடர்ந்து செய்து வந்தோமானால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உயரமாக வளர்வதற்கும் வழி வகுக்கும் என்பதை நினைவில் கொள்வோமாக!