அன்று சனிக்கிழமை. கோபாலின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முப்பது பேர் மிருககாட்சி சாலைக்கு பஸ்ஸில் சந்தோஷமாக கும்மாளம் அடித்தவாறு போய்க் கொண்டிருந்தனர். தனி யாக பலமுறை மிருகக்காட்சி சாலைக்கு அவர்களில் பலர் போயிருந்தாலும் சக வகுப்பு மாணவர்கள் ஒன்றாக போவது நல்ல அனுபவம் தானே. பஸ் மிருககாட்சி சாலையை பதினோரு மணிக்கு சென்றடைந்தது. டிக்கெட் எடுத்து குழந்தைகள் வரிசையாக மிருக காட்சி சாலையில் நுழைந்து ஒவ்வொரு மிருகமாக பார்த்து கொண்டு நடந்தனர். ஆசிரியர் அரவிந்தன் குழந்தைகளை இரண்டு டீமாக பிரித்து ஒன்றை கோபாலை பார்த்துக்கொள்ள சொல்லி மற்றோன்றை தன் மேற்பார்வையின் கீழ் வைத்து கொண்டார். அகழியோடு இருந்த பெரிய கொரில்லா கூடத்தை பார்த்த ராதா "இவ்வளவு பெரிய வீடு நமக்கு கூட இல்லையே" என்று எல்லோரையும் சிரிக்க வைத்தாள். தோகையை விரித்து நின்ற மயிலை பார்த்து வாய் பிளந்து போனான் ரஞ்ஜித். "மயிலுக்கு ஆயிரம் கண்கள் இருக்குன்னு இப்பதான் எனக்கு தெரிஞ்சது" என்றான். சிங்கங்கள் பகுதிக்கு வந்த போது மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தது ஒரு ஆண் சிங்கம். பிடரி பொன்னால் செய்தது போல் மின்னியது . கண்களோ கனல் துண்டுகள். "நாம் இப்போ அதன் முன்னால் போனால் என்ன ஆகும்" என்றான் கண்ணன்.
"சும்மா குலாப் ஜாமூன் போல முழுங்கிப்புடுவான்" என்று சொல்லி சிரித்தாள் லாவண்யா. காண்டாமிருக பகுதிக்கு வந்தபோது முதலில் எதுவுமே தெரிய வில்லை. பிறகு "அதோ !அதோ!!" என்று குதித்தான் ராகுல். கொஞ்ச தூரத்தில் புதரை விலக்கி கொண்டு கம்பீரமாய் நின்றது ஒரு காண்டாமிருகம் வளைந்த தன் கொம்பை நிமிர்த்தியவாறு." கொம்பா பாரு ஒரு குன்றையே நெம்பி தூக்கிடுவான் போல இருக்கு" என்றான் ராஜேஷ். புலிகள் பகுதிக்கு வந்த போது "உடம்ப பாரு வெல்வெட்டு போல தொடலாம் போல இருக்கு" சொன்னா சந்தியா. "தொட்டுத்தான் பாரேன்" என்றான் கோபால். கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில் காணப்படும் கிரேன்போல நின்றுகொண்டிருந்த ஒட்டக சிவிங்கியை பார்த்து ராதா இவனுக்கு "பயர் சர்வீஸுல ஈஸியா வேலை கிடைச்சிடும்" என்று சொல்லி மறுபடியும் சிரிக்க வைத்தாள். வரிக்குதிரைகளை பார்த்த கோகுல் "வெள்ளை உடம்பில் கருப்பு கோடுக்களா இல்லை கருப்பு உடம்புல வெள்ளை கோடுகளா" என்று கேட்டான். அதற்கு " அட போடா போத்துண்டு படுத்தாலும் படுத்துண்டு போத்திண்டாலும் ஒண்ணுதானடா" என்றான் விடை தெரியாமல் விக்னேஷ் "அடுத்தது யானை சவாரி" என்று சொல்லி ஆசிரியர் அரவிந்தன் . டிக்கெட் எடுக்க கவுண்டருக்கு போனார். யானை ஒன்றை பாகன் சவாரி மேடைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். குழந்தைகள் எல்லாம் ஆர்வத்துடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று யாரும் எதிர் பாராத வகையில் யானை பிளிறியபடி பாகனிடமிருந்து கூட்டத்தை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. பயத்தில் குழந்தைகளும் மற்றவர்களும் ஓட ஆரம்பித்தனர். கோபாலுக்கு புரிந்து விட்டது.
குழந்தைகளில் சிலர் யானையிடம் மாட்டி விடுவர் என்று. அந்த நொடியே அவனுக்கு தெரிந்து விட்டது தான் என்ன செய்ய வேண்டும் என்பது. யானையால் துரத்தப்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை கென்னத் ஆண்டர்சன் என்பவர் தனது புத்தகத்தில் எழுதி இருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து யானை மீது எரிந்து அதன் கவனத்தை குழந்தைகளிடமிருந்து தன் பக்கம் திருப்பி வேறு திசையில் ஓட ஆரம்பித்தான். ஓடும்போதே தன்னுடைய உணவு பொட்டலம் அடங்கிய பையை கீழே எறிந்தான். பிறகு தன் சட்டையையும் கழட்டி போட்டுவிட்டு ஓடினான். யானை அவன் எதிர்பார்த்தது போல அவனை நோக்கி ஓடி வந்தது. உணவு பொட்டல பையினை அடைந்தவுடன் பிரேக் அடித்தாற்போல் நின்று தும்பிக்கையால் அதை ஆராய தொடங்கியது. பின்பு கோபாலின் சட்டை வரை நடந்து வந்து அதை கிழித்து போட்டுவிட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று உம்மென்று நிற்க ஆரம்பித்தது. கிடைத்த அவகாசத்தில் கோபாலும் சரி மற்றவர்களும் வெகு தூரம் போய்விட்டார்கள். இதற்குள் மிருக காட்சி அதிகாரிகளும் ஜீப்பில் விரைந்து வந்து யானையை வாழை குலை ஒன்றை போட்டு சமாதான படுத்தி கூட்டிச்சென்றனர். புத்தி சாதுரியத்துடன் துணிச்சலுடனும் குழந்தைகளை எல்லாம் காப்பாற்றிய கோபாலை எல்லோரும் பாராட்டினர். "கோபால் யூ ஆர் ரியலி எ ஹீரோ" என்று தட்டிக்கொடுத்தார் மிருகக்காட்சி சாலையின் மேலதிகாரி.