
இந்து வேதங்களில் எட்டு சிரஞ்சீவிகள் இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது. ஆஞ்சநேயரும் அவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அதாவது புராணத்தின் படி, அவர் பூமியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும் கலியுகத்தின் இறுதி வரை ராமரின் நாமத்தையும் கதைகளையும் தொடர்ந்து உச்சரித்து கொண்டிருப்பார் என்றும் கருதப்படுகிறது.
தனது குறும்புத்தனமான குழந்தைப் பருவத்தில், ஆஞ்சநேயர் அடிக்கடி முனிவர்களைத் தொந்தரவு செய்வார். ஒரு நாள் கடுமையான தியானத்திலிருந்த ஒரு முனிவரை கேலி செய்த காரணத்தால் கடுமையான சாபத்திற்கு ஆளானார். அந்த சாபத்தால் அவர் தனது தெய்வீக சக்திகளை முற்றிலும் மறந்து விட்டார்.
ஜாம்பவானின் நினைவூட்டல் மூலம் தான் சீதா மாதாவைத் தேடும் போது ஆஞ்சநேயர் தனது திறமைகளை நினைவு கூர்ந்தார். இராமயணத்தில் ஆஞ்சநேயர் தான் இராமர், இலட்சுமணருக்கு கடைசி வரை இருந்து சீதாவை மீட்டெடுக்க உதவினார் என்பதை நாம் எல்லோருமே அறிவோம். மேலும் அவர் இராமர் மீது கொண்டுள்ள பக்திக்கு எல்லையே இல்லை.
இந்த பக்தியை சித்தரிக்கும் விதமாக தான், அவர் பெரும்பாலும் ராமர், சீதை மற்றும் லட்சுமணன் முன் கைகளைக் கூப்பி மண்டியிடுவது போலவோ அல்லது அவரது இதயத்தில் வைத்திருக்கும் ராமர் மற்றும் சீதையின் உருவத்தை வெளிப்படுத்த மார்பைப் பிளப்பது போலவோ சித்தரிக்கப்படுகிறார்.
சரி, ஆஞ்சநேயருக்கு எப்படி ஹனுமான் (Hanuman) என்ற பெயர் வந்தது?
குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் அழகான சம்பவத்தின் காரணமாக தான் ஆஞ்சநேயர் ஹனுமான் என்ற பெயரை பெற்றார். ஆஞ்சநேயர் தனது சிறு வயதிலிருந்தே ராமரின் தீவிர பக்தராக இருந்தார். குழந்தையாக இருந்தபோது, ஆஞ்சநேயர் மிகவும் குறும்புக்காரராகவும் இருந்தார்.
ஒருமுறை அவர் வானத்தில் சூரியனைப் பார்த்தார், அது ஒரு பழுத்த பழம் என்று தவறாக நினைத்து, அதை கிட்ட தட்ட விழுங்க ஆரம்பித்து விட்டார். இதைக் கண்ட தேவர்கள் பதற்றமடைந்தனர். ஆஞ்சநேயரின் இச்செயலானது அண்ட சமநிலையை சீர்குலைத்துவிடும் என்று அஞ்சினார்கள்.
ஆஞ்சநேயர் சூரியனை விழுங்குவதைத் தடுக்க, தேவர்களின் ராஜாவான இந்திரன், தனது சக்திவாய்ந்த ஆயுதமான வஜ்ரத்தை அதாவது இடியை அவர் மீது வீசினார். வஜ்ரமானது ஆஞ்சநேயரின் தாடையில் தாக்கி, அவரை காயப்படுத்தியது.
இந்த சம்பவத்தின் விளைவாக, ஆஞ்சநேயரின் தந்தையான காற்றின் கடவுளான வாயு பகவான் கோபமடைந்து, பிரபஞ்சத்திலிருந்து அனைத்து காற்றையும் விலக்கி, குழப்பத்தை ஏற்படுத்தினார். வாயுவை அமைதிப்படுத்தி ஒழுங்கு நிலையை மீட்டெடுக்க, தேவர்கள் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வரங்களையும், ஆசிகளையும் வழங்கினார்கள்.
இந்த ஆசீர்வாதங்களின் ஒரு பகுதியாக தான், அவரது தந்தை வாயு பகவான், அவருக்கு 'ஹனுமான்' என்ற பெயரை வழங்கினார். சமஸ்கிருதத்தில் 'ஹனு' என்றால் தாடை என்றும் மற்றும் 'மான்' என்றால் சிதைந்த அல்லது முக்கியமானவர் என்றும் பொருளாகும். அதாவது 'சிதைந்த தாடை கொண்டவர்' என்று பொருளாகும்.