
பூமியிலிருந்து நிலா எப்படி காட்சியளிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், நிலவிலிருந்து பூமி எப்படி காட்சியளிக்கிறது என்பதை நாம் கற்பனையாவது செய்து பார்த்திருக்கிறோமா?
நிலவிலிருந்து பூமி, ஒரு நீலமும் பச்சையும் கலந்த ஒளிரும் பந்தாகத் தெரிகிறதாம். பூமி, நிலவுக்கு முழு நிலவு பூமிக்கு அளிக்கும் வெளிச்சத்தை விட 50 மடங்கு அதிகமான வெளிச்சம் தருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமியில் தெரியும் நிலாவின் அளவை விட, நிலவில் தெரியும் பூமியின் அளவு 13 மடங்கு அதிகம்.
நிலா எப்படி கொஞ்சம் கொஞ்சமாகப் பிறை பிறையாக வளர்ந்து முழு நிலவாகி, பின்பு பிறை பிறையாய்த் தேய்ந்து அமாவாசை ஆகிறதோ, அதே போல நிலவிலிருந்து பார்க்கையில் பூமியும் தேயவும், வளரவும் செய்கிறது.
இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால்:
நிலாவுக்கு இங்கு தேய்பிறை நடக்கும்போது, பூமிக்கு நிலவில் வளர்பிறை.
பூமியில் சந்திர கிரகணம் நடக்கும்போது, சந்திரனில் சூரிய கிரகணம்.
பூமியில் சூரிய கிரகணம் நடக்கையில், சந்திரனில் பூமி கிரகணம்.
சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும்போது, பூமியின் கண்டங்கள் தெளிவாகத் தெரிவதாகக் கூறப்படுகிறது.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், சந்திரனின் ஒரு பாதிக்கு மட்டுமே பூமி தெரியும். அதாவது, பூமியைப் பார்த்தவாறு இருக்கும் பகுதிக்கு மட்டுமே பூமி தெரியும். மற்றப் பாதிக்கு பூமி அறவே தெரியாது. இந்த நிலைக்குக் காரணம், நிலா பூமியைச் சுற்றி வர எடுக்கும் அதே நேரம்தான் (சுமார் 27.3 நாட்கள்) தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும் எடுத்துக் கொள்கிறது.
பூமிக்கும் நிலாவுக்கும் உள்ள உறவு, தாய் பசுவுக்கும் கன்றுக்கும் உள்ள உறவு போன்றது. இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், கன்றான நிலாதான் தாய் பசுவான பூமிக்கு 'பாலூட்டுகிறது'! (அதாவது, அதன் ஒளியைப் பிரதிபலித்துப் பூமிக்குத் திருப்பி அனுப்புகிறது).