
அமராவதி காலனி ஒரு அழகான குடியிருப்பு. எட்டு கட்டடங்கள், நாற்பத்தி எட்டு பிளாட்டுகள், பன்னிரண்டு மாபெரும் தூங்கு மூஞ்சி மரங்கள், புதர்கள், பூச்செடிகள்... தொடங்கி அறுபது வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொரு குடும்பத்திலும் எஞ்சி இருப்பது வயதான தம்பதியர் தான். இவர்களின் பிள்ளைகள் என்றோ சிறகு முளைத்து, மணம் முடித்து வெவ்வேறு இடங்களுக்குப் பறந்துவிட்டார்கள்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இந்தக் காலனி மீது ஒரு கண். அதைப் பார்க்கும்போதெல்லாம் பொறாமைப் பெருமூச்சு விடாமல் போக மாட்டார்கள். அமராவதி ஒரு காலனி அல்ல, அது ஒரு அந்தமான் தீவு என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற குடியிருப்புகளில் இரண்டு சக்கர வாகனங்களைக்கூட நிறுத்த முடியாத நிலை. ஆனால் அமராவதியில் பேருந்துகள் பத்து நிறுத்தும் அளவுக்கு இடம் உண்டு.
குடியிருப்பில் இருந்த யாருக்கும் அமராவதியை விட்டு வெளியே போகவோ, அதை இடித்துப் புதிய பிளாட்டுகள் கட்டவோ விருப்பமே இல்லை. இப்படி இருக்கையில், ஒரு புரோமோட்டரின் கழுகுப் பார்வை அமராவதி மேல் விழுந்தது. பண முதலையான இந்த நபர், ஒவ்வொருவராகப் பிளாட் உரிமையாளர்களை வளைத்துப் போட ஆரம்பித்தார்.
ஒரே வருடத்தில் நினைத்ததை முடித்தும்விட்டார். எல்லோரையும் ஒப்புக்கொள்ள வைத்து, ஒப்பந்தத்தையும் தயார் செய்துவிட்டார்.
எல்லோரும் மூன்று மாதங்களில் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்துவிட வேண்டும் என்று நோட்டீஸும் அனுப்பப்பட்டது. ஒவ்வொரு வீடாகக் காலி செய்யப்பட்டுப் பூட்டுப் போடப்பட்டது.
மனிதர்களுக்குக் காலி செய்ய அவகாசம் கொடுத்தவர்கள், காலனியில் இருக்கும் மரங்களில் வாழும் பறவைகளையும் அணில்களையும் ஒரு க்ஷணம் கூட நினைத்துப் பார்க்கவில்லை. காலனியில் இருந்த ஒரு மரத்தில் பரம்பரையாக வாழ்ந்து வருகிறது ஒரு காக்கா குடும்பம். அப்பா காகம் கார்மேகம், அம்மா காகம் கறுப்பழகி. இவர்களுக்கு இரண்டு குஞ்சுகள். காலனியில் வீடுகள் ஒவ்வொன்றாக காலியாகிப் போகும் போது, அவர்கள் மனதில் பயம் உண்டாயிற்று. ஏதோ நடக்கப் போகிறது என்று அச்சம் ஏற்பட்டு, கவலையில் ஆழ்ந்தன.
"மனிதர்கள் வீட்டை காலி செய்து வேறு வீடுகளுக்குப் போய்விட்டனர். நாம் கூட்டை காலி செய்து எங்கு போவது?" புலம்பியது பெண் காகம். "கட்டடங்களை இடித்துக் கொள்ளட்டும், பரவாயில்லை. கிருஷ்ணா ராமா என்று ஓரமாக நிற்கும் மரங்களையும் விட்டு வைக்க மாட்டார்களே. நாம் இருவரும் மட்டும் இருந்தால் கவலை இல்லை, எங்காவது பறந்து போய்விடலாம். சிறகு முழுசா முளைக்காத நம் குஞ்சுகளை என்ன செய்வது?" சோகக்குரலில் சொன்னது அப்பா காகம்.
அவர்கள் பயந்தது அந்த வார முடிவிலேயே நடக்கத் தொடங்கியது. நான்கிற்கும் மேற்பட்ட JCB இயந்திர வண்டிகள் காலனிக்குள் புகுந்து, கட்டடங்களைக் காண்டா மிருகங்களைப் போல முட்டி இடிக்கத் தொடங்கின. வேலையை மேற்பார்வையிட வந்த பொறியாளர், "நாளை இந்த மரங்களையும் அகற்றிவிடுங்கள்" என்று அலட்சியமாக உத்தரவிட்டார்.
குடியிருப்புவாசிகள் எல்லோரும் கூடிப் பேசினார்கள். தங்களது பழைய காலனியின் ஒரு பகுதியை, குறிப்பாக மரங்கள் இருக்கும் இடத்தைப் பாதுகாக்குமாறு, அந்தப் புரோமோட்டருக்கு ஒரு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பினர்.
ஆனால் அவர்களின் கோரிக்கை சற்று வித்தியாசமாக இருந்தது.
"எங்கள் பிள்ளைகளும் பேரன்களும் இந்த மரங்களில் விளையாடியவர்கள். கோடையில் நிழல், மழைக்காலத்தில் மண் வாசனை என இந்த மரங்களின் பலனை அனுபவித்திருக்கிறோம். அதனால், இந்த மரங்களை மட்டும் அப்படியே விட்டுவிட வேண்டும். புதிய பிளாட்டுகள் கட்டப்பட்டாலும், இந்த மரங்கள் எங்கள் காலனியின் அடையாளமாக இருக்க வேண்டும்" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் கோரினர்.
மக்களின் இந்த எதிர்பாராத கோரிக்கை புரோமோட்டரை யோசிக்க வைத்தது. அவர்கள் தங்கள் வாதத்தை மரங்களின் மீதான அன்பு என்று குறிப்பிடாமல், தங்களது குழந்தைகள் பெற்ற பலன் என்று குறிப்பிட்டது அவரைத் திகைக்க வைத்தது. அவர்களின் உணர்வுகளை மதித்த, பிரமோட்டரால் மரங்களை அகற்ற முடியவில்லை.
புதிய பிளாட்டுகள் கட்டப்பட்டன, ஆனால் கார்மேகம் குடும்பம் வாழ்ந்த மரம் காலனிக்கு நடுவே கம்பீரமாக நின்று நிலைத்தது. கார்மேகமும் கறுப்பழகியும் தங்கள் மரம் வெட்டப்படாத மகிழ்ச்சியில் குஞ்சுகளுடன் சந்தோஷமாக அமர்ந்து, புதிய காலனியை வரவேற்றன.
நீதி: பெரியவர்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும், தான் அனுபவித்த நன்மைகளுக்காகவும் ஒரு மரத்தைக் காக்க முடிவு செய்தது போல, நாமும் இயற்கையைக் காத்தால், அது நம்மைச் சந்தோஷமாக வாழ வைக்கும்.