எல்லா உயிரினங்களுக்கும் , மனிதன் உட்பட, தூக்கம் மிக மிக அவசியம். உணவில்லாமல் இருந்துவிடலாம், ஆனால் தூக்கம் இல்லாமல் இருப்பது நடக்காத காரியம். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு தேவை. அதைத் தூக்கத்தில் மட்டுமே அடைய முடியும். மனிதர்கள் போல மிருகங்கள் பயமின்றி நிம்மதியாகத் தூங்க முடியாது.
இதில் மிகக் கொடிய, வல்லமை பொருந்திய மிருகங்களான யானை, சிங்கம், காண்டாமிருகம், பனிக்கரடி போன்றவை விதிவிலக்கு. ஏன் என்றால், இவைகள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சாகப் பட்சிணிகளான மான்கள், முயல்கள் போன்றவை பயந்து பயந்துதான் கண்ணயர முடியும்.
விசித்திரமான வழிகளில் தூங்கும் உயிரினங்களைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போமா குட்டீஸ்!
டால்பின்கள் தூங்கும் பொழுது, அதன் மூளையில் ஒரு பாகம் மட்டுமே தூக்கத்தில் மூழ்கியிருக்கும். மற்றொரு பாதி 'அலர்ட் ஆறுமுகம்' மாதிரி விழித்திருக்கும். இதனால், தூங்கும் பொழுது கூட எதிரிகள் இதைத் தாக்க முடியாது. டால்பின்கள் தவிர, சில வகை மீன்கள் கூட இது போலத் தூங்குகின்றன. தூங்கும், ஆனால் தூங்காது!
யானைகள் நின்றுகொண்டே குட்டித் தூக்கம் போடுவதில் கெட்டிக்காரர்கள். ஆழ்ந்து தூங்க வேண்டும் என்றால், தரையில் ஒருக்களித்துப் படுத்து உறங்கும். பொதுவாக, யானைகள் சாப்பிடுவதில் அதிக நேரம் செலவிடும். முதலில் உணவு, பின்புதான் உறக்கம்.
பனிக்கரடிகள் 'ஹைபர்னேஷன்' என்ற நீண்ட நாட்கள் தூக்க நிலைக்கு, வருடத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் போய்விடும்.
இவைகள் தூங்கும் விதமே தனி. நீர்நாய்கள் தனித்தனியாக உறங்குவதில்லை. இரண்டு அல்லது இரண்டுக்கு மேலோ ஒன்றோடு ஒன்று கைகளைக் கோர்த்தவாறு மல்லாக்க மிதந்துகொண்டு தூங்கும். தூக்கத்தில் மிதந்தவாறு வழி தவறிப் போகாமல் இருக்கவே நீர்நாய்கள் இம்முறையைப் பின்பற்றுகின்றன.
பென்குவின் குட்டித் தூக்கம் போடுவதில் கில்லாடி. ஒரு மணி நேரத்துக்கு விட்டு விட்டு நூறு முறை கூடத் தூங்கித் தூங்கி விழிக்கும் வல்லமை பெற்றது இந்தத் தென் துருவப் பறவை.
பாம்புகளுக்கும் மீன்களுக்கும் இமைகள் கிடையாது. அதனால், அவை கண்விழித்தவாறே தூங்கும் தன்மை உடையவை. ஒரு பாம்பு தூங்குகிறதா, விழித்திருக்கிறதா என்பதை அதை சீண்டினால் தான் அறிய முடியும்.
'பிளெமிங்கோ' என்று அழைக்கப்படும் நாரை இனப் பறவை ஒற்றை காலில் நின்று, தன் தலையைச் சிறகுக்குள் புதைத்தவாறு உறங்கும்.
'அல்பின் ஸ்விப்ட்' என்ற பறவை பறந்தவாறே தூங்கக்கூடியது. வெகு தூரம் பறக்க நேரிடும் போது, இவ்வகைப் பறவைகள் ஓய்வெடுத்தவாறே பயணம் செய்யும்.
தலைகீழாகத் தொங்கியவாறு தூங்கும் வவ்வாலுக்கு வருவோம். தங்கள் சிறகுகளைக் குடை போல மடித்தே வைத்திருப்பதால், வவ்வால்களுக்கு நின்ற நிலையில் இருந்து பறக்க முடியாது. அதனாலேயே தலைகீழாகத் தொங்கிய நிலையில் தூங்குகின்றன.
இந்த நிலையில் அவை முழிக்க நேரிடும் போது உடனே பறக்க முடிகிறது. விட்டத்தில் தங்கள் கால் பிடியைத் தளர்த்தியவுடன் கீழே விழ ஆரம்பிக்கும். அப்படி விழும்போது இறக்கையை விரித்துப் பறக்கத் தொடங்கிவிடும்.
கடைசியாக எறும்புகளுக்கு வருவோம். பொதுவாக, எறும்புகள் தூங்காது என்று பேசப்பட்டாலும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், உழைக்கும் எறும்புகள் நாளொன்றுக்கு 253 முறை விட்டு விட்டுத் தூங்குகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை இவ்வெறும்புகள் தூங்க எடுத்துக்கொள்ளும் நேரம் 1.1 நிமிடங்கள் மட்டுமே.