தேர்வும் தெளிவும்!

கல்வியின் பெருமையை தெய்வப் புலவரிலிருந்து அனைத்துப் புலவர்களுமே சிறப்பித்துப் பாடியிருந்தாலும், அரசர் நெடுஞ்செழியன் அதனைப் பாடிச் சிறப்பித்துள்ளது, கல்விக்கிட்ட மணிமகுடமாகும்.
Student, Exam hall, Studying
Student, Exam hall, Studying
Published on

‘எண்ணும் எழுத்துமே நம் இரு கண்களுக்குப் பெருமையூட்டி, இப்பிறவியை எளிதாகக் கடக்க உதவுவன’. கற்றவர்களே உலக வாழ்வை முழுதாக வாழ்கிறார்கள் என்றால் அதில் மிகையில்லை. அவ்வாறு சொல்வதற்கு அடிப்படை காரணமும் உண்டு.

இப்பூவுலகில் கொட்டிக்கிடக்கும் அனைத்து இன்ப துன்பங்களையும், இந்த ஒரு பிறவியில் எல்லோராலும் அனுபவித்து விட முடியாது. ஆனால் படித்தவர்கள், தாங்கள் அனுபவித்தவற்றோடு, பலரின் அனுபவங்களையும் படித்துத் தெரிந்து கொள்வதால், நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதோடு அவற்றைப் பின்பற்றும் வாய்ப்பினையும் பெறுகிறார்கள். அதனால்தான் ‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’என்றார்கள். வறுமையால் சூழப்பட்டு, பிச்சையெடுத்து வாழும் கடைநிலைக்குத் தள்ளப்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது என்றார்கள். அந்த இழி நிலையிலிருந்து நம்மை மீட்டு எழில் நிலைக்குக் கொண்டு செல்லக் கல்வியால் மட்டுமே முடியும் என்பதால்.

கல்வியின் பெருமையை தெய்வப் புலவரிலிருந்து அனைத்துப் புலவர்களுமே சிறப்பித்துப் பாடியிருந்தாலும், மன்னர் ஒருவரே(ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் -புறநானூறு-183)அதனைப் பாடிச் சிறப்பித்துள்ளது, கல்விக்கிட்ட மணிமகுடமாகும்.

அந்தக் காலத்தில், குடும்பத்தைக் காப்பாற்ற வருமானம் பெறவும், மன்னர்களிடமிருந்து பரிசில்கள் பெறவுமே, பல புலவர்கள் பாடி இருக்கிறார்கள். அவர்கள் பாடல்களில் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்கள் இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும், மன்னர்களைப் புகழ்ந்து பாடும் கருத்துக்களே செறிந்திருக்கும். ஆனாலும் ஒரு மன்னரே, மிக ஆழமான கருத்துக்களைக் கூறுவதென்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது.

எப்படிக் கற்க வேண்டுமென்பதையும், அந்தக் கல்வியால் ஒருவருக்குச் சமுதாயத்தில் எந்த மாதிரியான மதிப்பும், மரியாதையும் கூடுமென்பதையும், ஏஐ யைக் காட்டிலும் விளக்கமாக, ஓர் அரசரே ஆணித்தரமாகக் கூறியிருப்பது ஆச்சரியம் தருவது! அது எக்காலத்திற்கும் பொருந்தி வருவது.

தற்காலக் கல்வியின் தரம் குறைவதற்குக் காரணம் குருவாக விளங்கும் ஆசிரியர்கள் மீது குறை சொல்வதே! குடை பிடிக்கச் சொன்னார்; வகுப்பறையைக் கூட்டச் சொன்னார்; நிற்கச் சொன்னார்; உட்காரச் சொன்னார், என்றெல்லாம் இன்றைக்கு ஆசிரியர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படுகின்றன. அதன் காரணமாக மாணாக்கர்கள் மீது அவர்கள் காட்டும் அக்கறை குறைந்து விட்டது. ‘நமக்கேன் வம்பு?’ என்ற மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகிறார்கள். இது தொடருமானால், கல்வியின் தரம் மேலும் குறைவதை யாராலும் தடுக்க முடியாது!

இதையும் படியுங்கள்:
சமூக முன்னேற்றத்திற்கு உதவும் காலத்தால் அழிக்க முடியாத கல்வி!
Student, Exam hall, Studying

அரசர் நெடுஞ்செழியன் என்ன சொல்கிறார் பாருங்கள்!

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!”

துன்பம் வரும் போதும், தேவையான நேரத்திலும் ஆசிரியருக்கு உதவியும், சிறந்த, உயர்வான பொருள்களைக் கொடுத்தும், எந்த நிலையிலும் மிகுந்த பணிவுடனும் கற்பதே நன்று என்று கூறுகிறார் அவர். படித்தாயிற்று! அப்புறம்?

அதுதரும் பலன் பற்றியும் அவர் கூறுவதைப் பார்ப்போமா?

“பிறப்போரன்ன உடன் வயிற் றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயின் மனந்திரியும்”

பல பிள்ளைகளைப் பெற்றாலும் தாயின் அன்பில் எந்த மாறுபாடும் இருக்காதென்றாலும், அந்தத் தாயின் மனங்கூட சிறந்த கல்வி கற்ற மகனின் மீதே அதிகப் பாசம் காட்டும் விதமாகத் திரிந்து போகுமாம்! பால் திரியக் கூடாதுதான்! ஆனால், சூழல் காரணமாகத் திரிந்து(கெட்டு)போகிறது. அதைப்போல், தாயின் அன்பு மாறக் கூடாதுதான்! கல்வியின் மாண்பு அதனையும் மாற்றி விடுகிறதாம். என்னே மன்னர் நெடுஞ்செழியனின் புலமை!விட்டாரா அத்தோடு? விளம்புகிறார் மேலும்!

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோனை வருக வென்னாது அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்”

குடும்பத்தில் மூத்தவர்களாகப் பிறந்தவர்களுக்கு முழுமையான அதிகாரம் உண்டென்றாலும், அதனையும் தாண்டி அறிவுடையவன் இளையவனாக இருந்தாலுங்கூட அவன்சொல் கேட்டே குடும்பம் செல்லும்.

“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்

கீழ்ப் பாலொ ருவன் கற்பின்

மேற்பா லொருவனும் அவன்கட் படுமே!”

சமுதாயத்தில் வேரூன்றியுள்ள நான்கு வித ஏற்றத்தாழ்வுகளில், கீழ்நிலையில் உள்ள ஒருவர் கல்வியின் மூலம் சிறப்பின், பாகுபாடு கருதாமல் மேல்நிலையில் உள்ளவரும் அவரைப் பின்பற்றியே நடப்பர் என்கிறார் நாடாண்ட மன்னர்!

தற்காலக் கல்வியின் முன்னேற்றம் ஆண்டுத் தேர்வுகளின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது தேர்வுகளும் நடந்து வருகின்றன. தேர்வர்கள் நன்றாகவே எழுதி வருவீர்கள் என்று நம்புகிறோம். அதே சமயம் முக்கிய ஆலோசனை ஒன்றையும் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு தேர்வை எழுதி முடித்த பிறகு, அதனைப் பற்றிய ஆய்வையோ, சக மாணாக்கர்களுடனான கலந்துரையாடலையோ மேற்கொள்ளாதீர்கள். அது முடிந்து விட்ட ஒன்று. அடுத்த தேர்வில் மட்டுமே உங்கள் முழுக்கவனமும் இருக்க வேண்டும். முடிந்து போன தேர்வில் தவறு இழைத்திருப்போமோ என்ற சந்தேகம் அடுத்த தேர்விற்கான தயார் நிலையைப் பாதிக்கும் என்பதை மனதில் இறுத்துங்கள்.

கடைசித் தேர்வையும் முடித்த பிறகு, உங்கள் பகுப்பாய்வை(analysis)த்தொடங்கலாம். நீங்களெல்லோருமே அதிர்ஷ்டசாலிகள்! ஏதாவது ஒரு பாடத்தில் தேர்வைச் சரியாக எழுதாமல், மதிப்பெண் குறைந்து தேர்ச்சி தடைப்பட்டால், உடனடியாகவே அதனை எழுதிப் பாஸ் செய்து விட்டு அடுத்த வகுப்புக்குச் செல்லலாம்.

நாங்களெல்லாம் மீண்டும் ஓராண்டு முழுவதும் ஜூனியர்களோடு சேர்ந்து படித்தே அடுத்த வகுப்புக்குச் செல்லமுடியும் என்ற நிலையில் இருந்தோம்!

எனவே கவலையின்றி தேர்வுகளை எழுதி ஜமாயுங்கள்! வெற்றி நமதே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com