

கல்வி ஒரு மனிதனுக்கு அவசியமானது. கல்வி என்பது காலத்தால் அழியாதது. ‘கற்கை நன்றே கற்கை நன்றே. பிச்சை புகினும் கற்கை நன்றே’ இது ஒளவை மொழி. அதாவது, பிச்சை எடுத்தாவது கல்வி கற்க வேண்டும் என்று பொருள் படாது. ஒரு விஷயத்தை தொிந்தவர்களிடம் கெஞ்சிப்பாா்த்து பணிவு கடைபிடித்தாவது ஏன் கூடுதலாக அவர்கள் காலில் வீழ்ந்தாவது கல்வியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பொருளாகும்.
அதன்படி எழுத்தறிவின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து அறியும் நிலையில், அதோடு கல்வியின் மேன்மையை கெளரவிக்கும் வகையிலும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பதவி வகித்த மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11ம் நாளை அவரை நினைவுகூறும் விதமாய் தேசிய கல்வி தினம் (National Education Day) என்று கொண்டாடப்படுகிறது.
மெளலானா அபுல் கலாம் ஆசாத் கடந்த 15.8.1947ல் இருந்து 2.2.1958 வரை கல்வி அமைச்சராக சிறப்பாகப் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 11.9.2008ல் மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை தேசிய கல்வி நாளாக அறிவித்தது. அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர் பிரதீபா பாட்டீலாவாா்.
கற்றோா்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பாா்கள். ஆக, இந்த நாளானது இந்தியாவின் கல்வி முறைகளை மேம்படுத்தவும், தற்கால சவால்களை எதிா்கொள்ளவும் வழிவகை செய்கிறது. ஆரம்பக் கல்வி தொடங்கி, மேல்படிப்பு வரை மைய அரசும் மாநில அரசும் நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த கால ஆட்சியாளர்கள் கொள்கை அளவில் வேறுபட்டிருந்தாலும் காமராஜர், எம்.ஐி.ஆா். ஆகியோா்களின் நல்ல பல திட்டங்களால் கிராமப்புற மாணவர்கள் கல்வி அறிவு பெற்றாா்கள்.
அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் இன்று வரை கல்விக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தியதால் கல்வியின் தரத்தில் தமிழ்நாடு முதலாவது இடத்தில் இருப்பது பெருமையான விஷயமாகும். கல்வியானது பல வகையிலும் சமூக முன்னேற்றத்திற்கு மிகப்பொிய உதவியாக உள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது.
கல்விதான் ஒரு மாநிலத்தின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது என்பதும் நடைமுறை. எனவே, அனைவருக்கும் கல்வி முறை என்பதைப் போல, அனைவரையும் பாடசாலைக்கு அனுப்புவோம். கல்வியில் மேலும் பல புரட்சிகளை ஏற்படுத்தி சாதனைகள் பல புாிவோம். ஆக, இந்நாளை சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ்வோம்!