எல்லாம் எந்திர மயம்!

– தகவல் தொடர்பின் கதை!
story of communication...
story of communication...
Published on

-என். சொக்கன்

திகாலை நேரம். அலாரம் அடிக்கிறது. எழுந்து உட்காருகிறீர்கள். உடனே, உங்களுடைய கடிகாரம் பேசத் தொடங்கு கிறது. ‘காலை வணக்கங்கள், வெளியே நல்ல வெய்யில் அடிக்கிறது. மாலை ஆறு மணிக்குமேல் மழை வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் சீக்கிரம் பல் தேய்த்து, காஃபி குடித்து, குளித்து, சாப்பிட்டுத் தயாராகி விடுங்கள். இன்று பத்து மணிக்கு உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது.’

‘இப்போ எட்டு மணிதானே ஆகுது? என்ன அவசரம்?’

‘இன்னும் சரியாக 125 நிமிடங்கள்தான் இருக்கின்றன’ என்கிறது கடிகாரம், ‘நீங்கள் தூங்கி எழுந்தது முதல் அலுவலகத்துக்குத் தயாராகச் சராசரியாக 51 நிமிடங்கள் தேவைப்படுகிறது; நீங்கள் பயணம் செய்யும் சாலையில் இருக்கும் 17 டிராஃபிக் சிக்னல்களில் நீங்கள் காத்திருக்க வேண்டிய மொத்த நேரம் 36 நிமிடங்கள்; உங்கள் வண் டியில் 4 லிட்டர் பெட்ரோல்தான் மீதமுள்ளது; அதை நிரப்புவதற்கு உங்களுக்கு 15 நிமிடங்கள் தேவை. இவற்றையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால், பத்து மணிக் கூட்டத்துக்கு நீங்கள் இப்போதே கிளம்பினால்தான் சரிப்படும்.’

தலையாட்டியபடி எழுந்து, முகம் கழுவி டூத் ப்ரஷ்ஷில் பேஸ்டைப் பிதுக்குகிறீர்கள். உடனே அது பேசத் தொடங்குகிறது. ‘உங்களுடைய இடதுபக்கம் நான்காவது பல்லில் கிருமிகள் அதிகமாக உள்ளன. நன்றாகத் தேய்க்கவும்.’

அதன்படி பல் தேய்க்கத் தொடங்குகிறீர்கள். எதிரே உள்ள கண்ணாடித் திரையில் உங்களுக்கு வந்திருக்கும் ஈமெயில்கள் வரிசையாகத் திரையிடப்படுகின்றன. அவற்றைக் கவனித்துக்கொண்டே முக்கியமான ஈமெயிலை விரலால் தொடுகிறீர்கள், அது திறக்கிறது. ‘பதில்’ என்கிற பொத்தானை அழுத்திப் பல் தேய்த்தபடி பதில் சொல்கிறீர்கள். அது அப்படியே எழுத்தாக மாறி, உரிய நபருக்குச் சென்றுவிடுகிறது.

பல் தேய்த்து முடித்தவுடன் காஃபியைக் கையில் எடுக்கிறீர்கள். மேஜைமீது உங்களுக்குப் பிடித்த செய்தித்தாள்களில் இருந்து உங்களுக்குப் பிடித்த பகுதிகள் மட்டும் திரையிடப்பட்டுள்ளன. அவற்றை க்ளிக் செய்து படிக்கிறீர்கள்.

திடீரென்று, அந்தத் திரையில் ஒரு பெட்டி தோன்றி, ‘உங்களுடைய வெந்நீர் சரியான வெப்பநிலையில் உள்ளது. குளிக்கக் கிளம்பினால் சரியாக இருக்கும்’ என்று அறிவிக்கிறது.

அதே சமயம் ஃப்ரிட்ஜிலிருந்து சத்தம். ‘பால் தீர்ந்து விட்டது. மேலும் 5 லிட்டர் ஆர்டர் செய்யலாமா? பச்சைப் பொத்தானை அழுத்தவும்’ என்று அது அறிவிக்க, அந்தப் பொத்தானை அழுத்திவிட்டுக் குளியலறைக்குள் நுழைகிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
ஒற்றைத் தலைவலி – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்!
story of communication...

அங்கே சுவரில் உங்களுடைய அலுவலகக் கூட்டத் துக்காக நீங்கள் படிக்கவேண்டிய ஆவணம் பெரிய எழுத்துகளில் திரையிடப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்தபடி குளித்துவிட்டு வெளியே வருகிறீர்கள். சாப்பிட உட்கார்ந்ததும், உங்கள் காதுக்குள் ஓர் ஒலி கேட்கிறது. ‘அண்ணனிடமிருந்து ஃபோன்!’

‘சரி’ என்று சொல்கிறீர்கள்.

மறு விநாடி, உங்களுடைய சாப்பாட்டு மேஜையில் அண்ணனின் முகம் தெரிகிறது. ‘என்ன தம்பி? நல்லா இருக்கியா?’ என்று விசாரிக்கிறார் அவர்.

’நல்லா இருக்கேன், நீங்க சௌக்கியமா?’ என்று கேட்கும்போதே, கீழே ஒரு பெட்டி திறந்து, ‘நாளைக்கு அண்ணிக்குப் பிறந்தநாள்’ என்று அறிவிக்கிறது. ‘என் னண்ணே, அண்ணியோட பர்த்டே பார்ட்டி ஏற்பாடெல் லாம் எப்படிப் போய் கிட்டிருக்கு?’ என்று விசாரிக்கிறீர்கள். அவரும் மகிழ்ச்சியோடு பதில் சொல்கிறார்.

...இந்தக் கற்பனை நாளைத் தொடர்ந்து விவரித்தால், இந்தப் புத்தகம் போதாது. ஆகவே, இதோடு நிறுத்திக்கொண்டு, நாம் இங்கே என்ன பார்த்தோம் என்பதைக் கொஞ்சம் அலசுவோம்.

மேலே நாம் பார்த்த மனிதர், காலை எழுந்ததுமுதல் கம்ப்யூட்டரைத் தொடவில்லை, ஃபோனைத் தொட வில்லை, ஜன்னலைத் திறந்து வெளியே எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், எல்லா விவரங்களும் அவரைத் தேடிவந்தன.

இதுவரை மனிதன் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்குப் பலவிதமான கருவிகளைப் பயன்படுத்திவந்திருக்கிறான். ஒலி எழுப்புதல், குகை ஓவியங்கள், சின்னங்கள், எழுத்துகள், எண்கள், தோல், காகிதம், பேனா, பென்சில், தொலைபேசி, தொலைக்காட்சி, கணினி, இணையம் என்று பல கருவிகள் அதற்கு உதவியிருக்கின்றன.

ஆனால் இப்போது, விவரங்களைப் பகிர்ந்துகொள்வ தற்கென்று ஒரு தனிக் கருவி தேவை என்கிற அவசியமே இல்லை. உலகில் உள்ள அனைத்துக் கருவிகளும் கம்யூனிகேஷனுக்கு உதவவேண்டும் என்ற நிலை பிறந்துவிட்டது.

அதாவது, நீங்கள் யாரிடமாவது பேசவேண்டுமென்றால் அதற்கென்று ஃபோனைத் தேடி எடுக்கவேண்டியதில்லை. உங்கள் காதுக்குள்ளேயே ஒரு ஃபோன் தொற்றிக்கொண்டிருக்கும். அல்லது, உங்களுடைய சாப்பாட்டு மேஜை, தொலைக்காட்சி, கார் எல்லாம் திடீரென்று ஃபோனாக மாறும், எதுவும் இல்லை என்றால், உங்கள் கண்முன்னே ஒரு திரையைத் தோன்ற வைத்து, அதில் வீடியோமூலம் உரையாடலாம்.

இந்த வேகத்தில் ‘அலுவலகம்’ என்கிற விஷயமே காணாமல் போய்விடும் என்கிறார்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அதுதான் அலுவலகம். நினைத்த இடத்தில் மின்னஞ்சல் அனுப்பலாம், ஆவணங்களைப் படிக்கலாம், சக ஊழியர்களோடு பேசிக் கட்டளையிடலாம்... இணையம் எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

இவையெல்லாம் வேலைக்குப் போகிறவர்களுக்கு மட்டுமில்லை. இதே தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அமலுக்கு வரும்.

உதாரணமாக, நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அத்தனை பாடப் புத்தகங்களையும் நோட்டுகளையும் எடுத்துச்செல்லவேண்டிய தில்லை. எந்த ஆசிரியர் வருகிறார் என்பதைப் பொறுத்துச் சரியான பாடப் புத்தகம் உங்கள் மேஜையில் தோன்றும், அன்றைக்கு அவர் நடத் தப்போகும் பாடம் திறக்கும். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் மேஜையைத் தொட்டுப் பதில் அளிக்கலாம். மாலை வீடு திரும்பியதும் உங்கள் வீட்டுத் தொலைக்காட்சித் திரையில் அன்றைய பாடங்களைத் திருப்பிப் பார்க்கலாம்.

அடுத்த நாள் நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது காதுக்குள், ‘அதோ, அந்தச் சுவர் மேல ஒரு குருவி உட்கார்ந்திருக்கே, அந்தக் குருவி உன்னோட பதினெட்டாவது பாடத்துல இருக்கு’ என்று ஒரு குரல் கேட்கும். சட்டென்று அந்தக் குருவியைப் பற்றிய விவரங்கள் கண்முன் தோன்றும்.

இதெல்லாம் ஏதோ கற்பனை அல்ல. இதற்கான தொழில்நுட்பங்கள் இப்போதே இருக்கின்றன. அவற்றின் விலை குறைந்து பரவலாகப் பயன்படுத்தச் சில ஆண்டுகள் ஆகும், அவ்வளவுதான்.

இப்போது, உலகெங்கும் குரல் வழியே, கை, கண் அசைவுகளின் வழியே கருவிகளை இயக்குவது பற்றிய ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அவை இன்னும் மேம்பட்டால், கணினி, தொலைபேசி, தொலைக்காட்சி என்று தனித்தனிக் கருவிகளைச் சுமந்துகொண்டு செல்லும் அவசியம் குறையும். எல்லாம் நம்முடைய விரல் நுனியில் அல்லது காது ஓரத்தில் காத்திருக்கும்.

இன்னொரு பக்கம், கருவிகளை இணையத்துடன் இணைக்கும் முயற்சிகள் தீவிரம் பெற்றுவருகின்றன. உதாரணமாக, உங்கள் வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல் அதை அழுத்துபவருடைய விரல் ரேகையை ஆராய்ந்து அவர் யார் என்று கண்டுபிடித்து உங்களுக்கு விவரம் சொல்லலாம். ஒருவேளை அவர் ஏதாவது குற்றம் செய்தவர் என்றால், கதவைப் பூட்டிவிட்டுப் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்துக்குத் தெரிவிக்கலாம்.

இப்படித் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்கிற சூழ்நிலையில், சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள், பலர் அதனால் கவனம் சிதறித் தடுமாறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான ருசியில் கர்நாடகா ஸ்பெஷல் உப்பு புளி தோசை!
story of communication...

ஆகவே, எத்தனை புதிய கருவிகள் வந்தாலும், அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.

உதாரணமாக, செல்ஃபோன் என்பது மனிதர்களை இணைக்கும் என்று சொல்கிறோம். ஆனால், ஒரே வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் பேசாமல் சாப்பிடும் காட்சியைப் பார்க்கிறோம், ஒரு கொண்டாட்டத்துக்கு வந்துவிட்டு எல்லாரும் அதை செல்ஃபோனில் படம் பிடித்துக்கொண்டு அந்த விநாடியின் மகிழ்ச்சியை அனுப விக்காமல் இருப்பதைப் பார்க்கிறோம்.

இவையெல்லாம், தொழில்நுட்பத்தின் வெற்றிகளாக இருக்கலாம், ஆனால் அடிப்படை மனிதத் தன்மையின் தோல்வி.

ஆகவே, அவ்வப்போது தொழில்நுட்பத்தை ஓரமாக வைத்துவிட்டு, பக்கத்தில் இருக்கிறவர்களைப் பார்த்துப் புன்னகை செய்து நாலு வார்த்தை பேசவேண்டும். அவர்கள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தரும் பிணைப்பு மிகவும் வலுவானது, அதுவே உண்மையானது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com