
வேறு இடத்திலிருந்து மாற்றலாகி வந்த ஸ்ட்ரிக்ட்டான விஞ்ஞான ஆசிரியர், வீட்டுப்பாடம் செய்து வராத பாண்டியனிடம், "நீயெல்லாம் படிக்க லாயக்கில்லை. மாடு மேய்க்கத்தான் லாயக்கு. மாடு மேய்க்கப் போயிடு" என்று சொன்னார். பாண்டியனின் கண்களில் கண்ணீர் வந்தது. துடைத்துக்கொண்டார். பார்க்க பாவமாக இருந்தது.
குடும்ப சூழ்நிலை காரணம், பாண்டியன் நிஜமாகவே அவ்வப்போது, மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
"மாடு மேய்க்கிறது ஈஸியா?’ சார்..?" கேட்ட பாண்டியனிடம்,
"இல்லையா பின்னே? ஈஸிதான். படிப்பு இல்லாதவந்தானே மாடு மேய்க்கிறான்?" என்றார் ஆசிரியர்.
"சார்! அம்பது மாட்ல, முத்தப்ப செட்டியார் வீட்டு மாடு எது? செவந்தி நாடார் வீட்டு மாடு எது? வேலம்மா ஆச்சி வீட்டு மாடு எதுன்னு உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா சார்?"
அதிர்ந்து போனார் ஆசிரியர். இருந்தாலும், சமாளித்துக் கொண்டு
"எல்லா மாடும் ஒரே இடத்துலதான் மேயுமா?" அடுத்த கேள்வியைக் கேட்டார்.
"இல்லை சார்! எந்த மாடு எங்க மேயுதுன்னு பாத்து ஓட்டிக்கிட்டு வரணம். வருவீங்களா?"
ஆசிரியர், பாண்டியராஜன் போல விழித்தார். நாங்கள் வாயை மூடிக்கொண்டு மெதுவாக சிரித்தோம். பாண்டியன் தொடர்ந்தார்.
"சார்! மாடு எப்ப சாணி போடும்ன்னு தெரியுமா?"
"சாணி மொத்தத்தையும் எதுல அள்ளணம்? தெரியுமா?"
"சார்! வரட்டி தட்டத் தெரியுமா?"
"வரட்டியில ஏன் வைக்கோல் போடணும்ன்னு தெரியுமா? "
பாண்டியனிடமிருந்து கேள்விகள் அடுக்கடுக்காக வந்தன.
"போதும் பாண்டி! நிறுத்து!" என்ற ஆசிரியரிடம்,
"சார்! எனக்கு மாடு மேய்க்க வரல்லைன்னுதான், எங்கப்பா-
"நீ மாடு மேய்க்க லாயக்கில்லை, பேசாம படிச்சி வாத்தியார் ஆயிடுன்னு அனுப்புச்சாரு!" தெரியுமா சார். மாடு மேய்க்கிறது ஈஸி கிடையாது. புரிஞ்சுக்குங்க!"
ஆசிரியர் கப்சிப் ஆனார்.
அதன் பிறகு, அந்த ஆசிரியர், யாரையுமே "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு! மாடு மேய்க்கப் போயிடு!” என்று சொன்னதே இல்லை!