சோட்டா பீம் முதல் ஜாக்கி ஜான் வரை பல கார்ட்டூன் திரைப்படங்களில் தீய எண்ணங்களைக் கொண்ட அரக்கர்களை பார்த்திருப்போம். சில சமயம், பயந்தும் இருப்போம். இந்த கட்டுரையில், அதற்கு எதிர்மாறாக, குழந்தைகளாகிய உங்கள் மனதைக் கவரும் வகையில் உள்ள அரக்கர்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். வாங்க குட்டீஸ், இந்த 'அரக்கர்கள்' எவ்வளவு நல்லவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!
cartoon monsters அரக்கர்களை கெட்டவர்களாக காட்டிய பல திரைப்படங்களுக்கு மத்தியில், 'மான்ஸ்டர்ஸ் இன்க்' (Monsters, Inc.) திரைப்படம், அரக்கர்கள் உண்மையில் தீயவர்கள் அல்ல, மாறாக மிகவும் அன்பானவர்கள் என்பதைக் காட்டியது. இதில் வரும் சுல்லி ஒரு பெரிய நீல நிற பூதமாகவும், மைக் ஒரு கண்ணுடைய உருண்டையான பூதமாகவும் இருந்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து, அரக்கர்கள் என்றால் பயப்படத் தேவையில்லை என்பதை நமக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
2001 இல் வெளியான 'ஷ்ரெக்' திரைப்படம், ஒரு பெரிய பச்சை நிற அரக்கனை (ogre) உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரமாக மாற்றியது. ஷ்ரெக் ஒரு வித்தியாசமான கதாநாயகனாகவும், நட்பையும் அன்பையும் போதிக்கும் ஒரு சிறந்த நண்பனாகவும் உள்ளது. இந்த திரைப்படம், குழந்தைகளுக்குப் பிடித்தமான அதே நேரத்தில், பெரியவர்களுக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது. பல தொடர்களையும், மீம்ஸ்களையும் உருவாக்கியது.
பல திரைப்படங்கள் டிராகுலா கதாபாத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளன. ஆனால் 'ஹோட்டல் டிரான்சில்வேனியா' (Hotel Transylvania) தொடரில் வரும் ஆடம் சாண்ட்லரின் ட்ராக், முன்னர் ஒரு கொடூரமான காட்டேரியாக இருந்து, பின் அப்பா, சமுதாய பொறுப்பு என வித்தியாசமான கோணங்களில் காட்டப்படுகிறார். மனித சமூகத்திடமிருந்து விலகி, அரக்கர்கள் ஓய்வெடுக்கும் ஒரு ஹோட்டலை நடத்தும் ட்ராக், 'உண்மையான அரக்கர்கள் யார்' என்ற கேள்வியை எழுப்புகிறார்.
பயமுறுத்தும் எவரெஸ்ட் மனிதர்களை உண்ணும் ஒரு அரக்கனாக இருந்தாலும், 'அபாமினபிள்' (abominable) திரைப்படம் அவனது அன்பான பக்கத்தைக் காட்டியது. ஒரு இளம் பனிமனிதனான எவரெஸ்ட், மூன்று டீனேஜ் நண்பர்களின் உதவியுடன் தனது குடும்பத்தை அடைய முயற்சிக்கும் கதைதான் இது. இந்த எவரெஸ்ட், விலங்குகளை கூண்டில் அடைக்கக் கூடாது என்பதையும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
'மோனா' (Moana) திரைப்படத்தில் வரும் டெ கா ஒரு பயங்கரமான நெருப்பு அரக்கி. கடவுளின் இதயத்தைத் திருடியதால், கோபமாக மாறினாள். இந்தப் படம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஒரு அற்புதமான உருவகமாகச் சொல்கிறது. பூமியைப் புண்படுத்துவது எப்படி பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கையாக டெ கா இருக்கிறாள்.
இந்த அரக்கர்கள் பயமுறுத்துவதற்குப் பதிலாக, நமக்கு அன்பு, நட்பு மற்றும் தைரியம், சமூக பொறுப்பு போன்ற பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
இவற்றுள் உங்களுக்குப் பிடித்த அனிமேஷன் அரக்கன் யார்? கீழே கமென்ட் செய்யுங்க குட்டீஸ்!