
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு அழகான ரெண்டு ஆண் பிள்ளைகள். இருவரும் ஒரே சுட்டித்தனம் செய்வதும் அமர்க்களம் செய்வதுமாக இருந்தனர். அவர்களுடைய குறும்பை ராஜா மிகவும் ரசித்து வந்தார்.
இரண்டு பேரையும் ஒன்றாகவே நடத்துவதும், இருவருக்கும் ஒரே மாதிரியான உடைகள் போட்டு அழகு பார்ப்பதும் என்று பிள்ளைகளை ரசித்து வளர்த்தார். இருவரும் குருகுலம் செல்ல ஆரம்பித்தனர்.
மந்திரிமார்கள் விதவிதமான வித்தைகளையும், வாழ்க்கை படிப்புகளையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். குருகுலத்திலும் குருமார்கள் விதவிதமான வில்வித்தை, ராஜ சாணக்கியம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து நல்ல பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருமுறை தன் இரு பிள்ளைகளையும் அழைத்து தாங்கள் கற்ற வித்தைகளையும், அறிவுப்பூர்வமான விஷயங்களையும் செய்து காட்டச் சொல்ல இருவருமே அழகாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இருந்தாலும் ராஜாவுக்கு மனதிற்குள் ஒரு குறை இருந்தது. இருவருமே ஒரே ஆசிரியரிடம் தான் பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால் இருவரின் செயல்களிலும், திறமைகளிலும் வித்தியாசம் காண முடிந்தது. ஒருவரின் குணமும், செயல்படும் முறைகளும் மற்றொருவரின் குணத்துடன் ஒத்துப் போக மறுத்தது. செயல்களும் அதே முறையில் தான் இருந்தது. இதைக் கண்டு வருந்திய மன்னர் குருமார்களை அழைத்து பேசினார்.
இவர்கள் இரண்டு பேரும் உங்களிடம் தான் கற்றுக் கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களின் நடைமுறைகளில் வித்தியாசம் நிறைய உள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க மறுக்கின்றனரே என்று அங்கலாய்ப்புடன் கேட்க,
குருமார்களோ, "மன்னிக்க வேண்டும் அரசே! இருவரும் ஒரே வயிற்றில் பிறந்தவர்கள் தான் என்றாலும் ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
இருவரது குணாதிசயங்களிலும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியில்லை" என்று அரசருக்கு மென்மையாக தங்களுடைய எண்ணங்களை எடுத்துக் கூறினார்கள்.
மன்னரோ உடனே அருகில் இருந்த அமைச்சரிடம், "என்ன மடமை இது! இரண்டு பேரைக் கூட ஒன்றாக ஒரே மாதிரியாக செயல்பட வைக்க முடியாமல் இருக்கும் நான், என் ஆட்சியில் மட்டும் எப்படி ஆயிரக்கணக்கான மக்களை ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்! இப்படி எதிர்பார்ப்பது முற்றிலும் தவறான விஷயம் அல்லவா? அவரவர்கள் வழியில் அவரவர்கள் செயல்படுவது தானே சரி. அதுதானே சிறப்பும் கூட. இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே," என்று மனம் வருந்தினான்.
நீதி: இதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் குட்டீஸ்? அவரவர் வழியில் அவரவர்கள் சிறப்பானவர்கள். அவர்களை நம் வழிக்கு கொண்டு வர நினைத்தால் அது தவறு என்பதைத் தானே!