

கிளி வகைகள் முதன் முதலில் இந்தியாவில் தோன்றி பின் இனவிருத்தி அடைந்து உலக நாடுகள் அனைத்திற்கும் சென்றன என்பதற்கு வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன.
கிமு ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க மருத்துவர் கிளிகளைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்திய மொழிகளை பேசக்கூடிய கிளிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் சென்று வீரதீர செயல்களை செய்து காட்டின என்கிறது அவரது குறிப்பு .
கிளிகள் ஆங்கிலத்தில் 'பேரட் (parrot) என்கிறோம்.
பேரட் குடும்பத்தில் பேரட் கோனூர்ஸ், மெக்காவ்ஸ், கொக்கட்டூ காக்டீல், லோரி, லோரி கீட், பேரகீட் என எட்டு வகையான கிளிகள் உள்ளன இவை அனைத்தும் அடிப்படையில் ஒரே இனத்தைச் சேர்ந்தவையே.
இந்த கிளி வகைகளை அனைத்தும் உறுதியான கொக்கி போல் வளைந்த கூர்மையான அலகினையே பெற்றிருக்கின்றன. நமக்கு மூக்கு அழகாக இருந்தால் கிளி மாதிரி மூக்கு என கூற கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த அலகினை விருப்பப்படி திருப்பிக் கொள்ளும் படியான அமைப்பினை பெற்றிருக்கின்றன.
இவற்றின் கால் பகுதியில் முன்னோக்கி இரண்டு விரல்களும் பின்னோக்கி இரண்டு விரல்கள் அமைந்துள்ளன. இது போன்ற அமைப்பினை வேறு பறவைகளிடம் காணவே முடியாது.
மரக் கிளைகளில் முன்னுள்ள இரண்டு விரல்களின் உதவியுடன் ஆதாரமாக அமர்ந்து கொண்டு பின்னுள்ள விரல்களால் மரங்களை உறுதியாக பிடித்துக் கொள்கிறது.
கிளிகள் சாகபட்சிணிகள் என்பது பொதுவான கருத்து. ஆனால் நியூசிலாந்தில் வாழும் சில இனக்கிளிகள் கேட்பாரற்று கிடைக்கும் இறந்த ஆடுகளின் மாமிசங்களை கொத்திக் கூட தின்கிறது. இதனை நினைவில் வைத்துக் கொண்டு உயிருடன் ஓடும் ஆடுகளை சில சமயங்களில் கொத்த தொடங்கி விடுகின்றன.
சில வகை கிளிகளுக்கு குஞ்சுகளை சரிவர பராமரிக்க தெரிவதில்லை. லவ்பேர்ட் கிளிகள் மட்டும் குஞ்சுகளை பேணி பாதுகாக்கின்றன. இந்த கிளிகளின் கூடு கண்டுபிடிக்க முடியாது.
சில வகை கிளிகள் மரங்கொத்தி பறவையின் கூடுகளை போன்று கட்டிக் கொள்கின்றன. ஆந்தைகளைப் போன்று மரப்பொந்துகளையும் பாறைகளின் பள்ளங்களிலும் தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்கின்றன.
வெப்பமான காலங்களில் கிளிகள் அமைதியின்றி திரிகின்றன. குளிர்காலத்தினை பெரிதும் விரும்புகின்றன.
சிங்கப்பூர் ஜப்பான் போன்ற நாடுகளில் கிளிகளை வைத்து சர்க்கஸ் செய்து காட்டுகிறார்கள். கிளிகள் பழகியவர் சொல்கிறபடி எல்லாம் பேசவும் ஆடவும் செய்கின்றன.
கிளி நாம் சொன்னவற்றை திரும்பச் சொல்லும். அதனால் தன் கிளிப்பிள்ளை போல் சொல்கிறாயே என்று கேட்பார்கள்.
கிளிகளை அதன் அழகிற்காகவே பார்த்துக் கொண்டே இருக்கலாம் அழகான பச்சை நிறத்தில் மூக்கில் சிவப்பு கலரோடு பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். கிளிகளை பார்த்தால் மனத்தை பறி கொடுக்காதவர்கள் யார் தான் உள்ளனர்.
குட்டீஸ்களா நீங்களே அழகாக இருந்தால் கிளி போல இருக்கே என்பார்கள் தாத்தா பாட்டி.
நீங்களும் நிறைய கிளிகளை பார்த்திருப்பீர்கள் நாம் வணங்கும் தெய்வங்களின் கைகளில் கூட கிளிகள் இருக்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்ற தெய்வங்களின் கைகளில் கிளிகள் வைத்து அவர்கள் நமக்கு அருள்வதை பார்க்கிறோம். இந்த கிளிகள் எல்லாம் நாம் கேட்கும் வரத்தை உடனே அந்த அம்மனிடம் கேட்டு நமக்கு அருள்புரிய அம்மனிடம் கூறும் என்பார்கள்.
கிளிகளுக்கு நாம் சொல்வதை உடனே திருப்பி சொல்லும் சக்தி இருப்பதால் தான் இவ்வாறு கூறப்படுகிறது.
முன்பு கிளிகளை கூண்டுகளில் வைத்து வளர்க்க அனுமதி இருந்தது. இப்பொழுது கிளிகளைக் கூண்டில் வைத்து வளர்க்க அனுமதி கிடையாது.
அதனால் நம் வீட்டு மரம் செடிகளில் கிளிகள் அமர்ந்திருப்பதை பார்க்கலாம். அடர்ந்த மரங்களுக்கு இடையே கிளிகள் ஜாலியாக பறந்து செல்வதை பார்க்கும் பொழுது மிகவும் அழகாக இருக்கும்.
நாம் கொடுக்கும் பழங்களை கிளிகள் மிகவும் விரும்பி உண்ணும். மாமரத்தில் கட்டாயம் கிளி வந்து அமரும். குட்டீஸ்களா கிளிகளைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைவதற்கு அளவே கிடையாது. நீங்களும் எங்கெல்லாம் கிளிகளை பார்க்கிறீர்களோ அதன் அழகை ரசித்து அதனிடம் ஏதாவது ஒரு சொல்லை கூறி அது திரும்ப கூறும் பொழுது நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவத்தில் பாருங்கள்.
கிளிகளை பார்த்து ஹாயாக உங்கள் பெயரை கூறுங்கள். கிளி திரும்ப பெயரை சொல்லும். மனம் கவரும் கிளிகளை பார்த்து மகிழுங்கள்.