பள்ளிக்கூடம் என்றாலே பாடங்கள், தேர்வுகள் என சலிப்பான விஷயங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் சில கற்பனைப் பள்ளிகள், நிஜமாகவே அங்கு படித்திருக்க மாட்டோமா என ஏங்க வைக்கும். மேஜிக், சாகசங்கள், புதிர்கள் என கற்பனை உலகிற்குள் நம்மை அழைத்துச் செல்லும் இந்த பள்ளிகள், ஏன் நிஜத்தில் இல்லை என வருத்தப்பட வைக்கும். படித்திருக்க வேண்டும் என ஆசைப்பட வைக்கும் 5 கற்பனைப் பள்ளிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
'ஹாரி பாட்டர்' நாவல்களிலிருந்து வந்த ஹாக்வார்ட்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் பிரபலமான கற்பனைப் பள்ளி. பிளாட்பார்ம் 9¾ இல் நுழைந்து, பெரிய கோட்டை போன்ற மண்டபங்கள் வழியாக நடந்து, பேசும் ஓவியங்கள், நகரும் படிக்கட்டுகளைப் பார்ப்பது ஒரு கனவு போலத் தான் இருக்கும். ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு இந்த கனவுப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். நிஜத்தில் இங்கு சேர முடியாவிட்டாலும், லண்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ டூரில் ஹாக்வார்ட்ஸ் உலகை ஓரளவுக்கு அனுபவிக்கலாம்.
அறிவியல் புனைகதை பிரியர்களுக்கும், விண்வெளி ஆர்வலர்களுக்கும் 'ஸ்டார் ட்ரெக்' தொடரில் வரும் ஸ்டார்ஃப்ளீட் அகாடமி, ஒரு கனவுலகம். இங்கு விண்வெளியின் பல்வேறு இனங்களைச் சேர்ந்த புத்திசாலிகள், விண்வெளி ஆய்வு, தலைமைப் பண்பு, அறிவியல் மற்றும் தார்மீக நெறிகள் குறித்து பயிற்சி பெறுகிறார்கள். அதிநவீன தொழில்நுட்பம், அழகான கட்டிடங்கள் என எல்லாமும் இங்கு இருக்கும். நிஜத்தில் இங்கு சேர முடியாவிட்டாலும், உலகெங்கிலும் நடக்கும் ஸ்டார் ட்ரெக் கண்காட்சிகள் இந்த கனவை நமக்கு அருகில் கொண்டு வருகின்றன.
மர்மம் மற்றும் மேஜிக் நிறைந்த இருண்ட, அமானுஷ்ய பள்ளியை விரும்புபவர்களுக்கு 'வென்ஸ்டே' (Wednesday) தொடரில் வரும் நெவர்மோர் அகாடமி ஏற்ற இடம். இந்த அகாடமி, நம்மில் உள்ள இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, நிஜத்தில் இந்த பள்ளி இல்லை.
ஆனால், நெவர்மோர் அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள 'Apply Now' போர்ட்டலில் விண்ணப்பித்து, உங்களுக்கு ஒரு திகிலான வரவேற்பு கடிதம் கிடைக்கிறதா எனச் சோதித்துப் பார்க்கலாம்.
ரகசிய ஏஜெண்டாக மாறி, ஸ்டைலாகவும், அதிநவீன கேஜெட்களுடனும் உலகைக் காப்பாற்ற வேண்டும் என்று நாம் அனைவரும் ஒருமுறையாவது கனவு கண்டிருப்போம். 'கிங்ஸ்மேன்: தி சீக்ரெட் சர்வீஸ்' படத்தில் வரும் கிங்ஸ்மேன் அகாடமி, இளம் வீரர்களை பிரிட்டிஷ் உளவாளிகளாக மாற்றுகிறது. ஸ்டைலாகவும், ஆபத்தானதாகவும், மிகவும் ரகசியமானதாகவும் இருக்கும் இந்த பள்ளி, உளவு பார்க்கும் ஆசை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். நிஜத்தில் இதுபோன்ற இடங்கள் இருந்தாலும், அவை ரகசியமாகவே இருக்கும். இல்லையா?
ரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களான காட்டேரிகளும் கூட மந்திரப் பள்ளிகளில் படிக்கிறார்கள். 'வேம்பயர் அகாடமி' தொடரை பார்த்த நாம், அங்கு படிக்க ஆசைப்பட்டிருப்போம். தீவிர உடல் பயிற்சி முதல் தீய காட்டேரிகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது வரை, இந்த பள்ளி ஒரு த்ரில் நிறைந்த அனுபவமாக இருக்கும். இங்கு சேர முடியாவிட்டாலும், உலகெங்கிலும் உள்ள பல காட்டேரி கருப்பொருள் அருங்காட்சியகங்கள், இந்த திகில் நிறைந்த உலகத்தை நிஜத்திற்குக் கொண்டு வருகின்றன.
இந்த கற்பனைப் பள்ளிகள் நிஜமாகவே இல்லாவிட்டாலும், அவற்றை கருப்பொருள் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் மூலம் நிஜத்திற்கு அருகில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இந்த கற்பனைப் பள்ளிகளில் எந்தப் பள்ளிக்குச் செல்ல நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்? என கமெண்ட்டில் சொல்லுங்க..