
பல்லிகள் நம் வீடுகளில் சர்வசாதாரணமாக வாழும் ஒரு உயிரினம். ஊர்வன இனத்தைச் சேர்ந்த பல்லி இனத்தில் சுமார் முன்னூறு வகையான பல்லிகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன. பல்லிகள் சுமார் இருநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையான உயிரினமாகும்.
பல்லிகள் பொதுவாக நான்கு கால்களின் மூலமாக நகர்கின்றன. சில வகை பல்லிகள் இரண்டு கால்களைக் கொண்டே நகர்கின்றன. இதன் மூலம் இவற்றால் மிக வேகமாக நகரமுடிகிறது என்பதே காரணமாகும். பல்லிகளின் கால்கள் சுவர், மரம் மற்றும் வழவழப்பான பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் நடப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.
இவற்றின் கால் விரல்களின் முனைகளில் சுவர்களில் பற்றிக் கொள்ள ஓர் அமைப்பு இயற்கையிலேயே அமைந்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் இவை எத்தகைய பரப்பிலும் விழாமல் ஊர்ந்து செல்லுகின்றன.
பல்லிகள் பெரும்பாலும் பூச்சிகளையே தங்கள் உணவாக உட்கொள்ளுகின்றன. இரவு நேரத்திலேயே தங்களுடைய இரையைத் தேடிப் பிடிக்கின்றன. கரப்பான்பூச்சி, விட்டிற்பூச்சிகள், கொசுக்கள் மற்றும் சிறுசிறு பூச்சிகள் போன்றவற்றை இவை உணவாக உட்கொள்ளுகின்றன. ஆஸ்திரேலிய நாட்டில் காணப்படும் த்ரோனி டெவில் பல்லி (Thorny devil lizard) என்றொரு வகை பல்லிகள் ஒரு குறிப்பிட்ட எறும்புகளை மட்டுமே சாப்பிடுகின்றன. இவை ஒரு சமயத்தில் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு எறும்புகளைச் சாப்பிடுகின்றன.
பல்லிகள் தங்களுடைய இரையைப் பிடிக்க தங்களுடைய நாக்கை பெரிதும் நம்பி இருக்கின்றன. தங்களுடைய நாக்கினால் பல்லிகள் இரையைப் பிடித்து பின்னர் அவற்றைக் கவ்வி இரையானது தப்பிக்காதவாறு பத்திரமாகப் பிடித்துக் கொள்ளும். பின்பு மெல்ல மெல்ல தாங்கள் பிடித்த இரையை விழுங்கி முடிக்கும்.
பல்லிகள் பொதுவாக இரண்டு முட்டைகளை இடுகின்றன. இவை இடும் முட்டைகள் சற்று கடினமாகக் காணப்படுகின்றன. இம்முட்டைகள் 50 முதல் 65 நாட்களில் பொரிந்து பல்லிக்குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டைக்குள்ளிருந்து குஞ்சுகள் பொரிந்து வெளியே வந்ததும் அவை தாய் பல்லிகளை நம்பி வாழ்வதில்லை.
பல்லிகளின் உடலானது வறட்சியாகக் காணப்படும். பல்லிகளால் எல்லாவிதமாக தட்பவெப்ப நிலைகளிலும் வசிக்க இயலும். பல்லிகளின் கண்களை ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ஈரத்தன்மை வாய்ந்த மென்மையான படலம் ஒன்று காக்கிறது. பல்லிகள் தங்களுடைய நாக்கின் உதவியால் இந்த மென்படலத்தை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ளும் இயல்புடையவைகளாக உள்ளன.
பல்லிகள் ஏதேனும் ஆபத்தில் மாட்டிக்கொண்டதாக உணர்ந்தால் அவை தங்கள் வாலைத் துண்டித்துக் கொண்டு தப்பித்து விடுகின்றன. பல்லிகளின் வால் துண்டிக்கப்பட்டால் வாலானது மீண்டும் வளர்ந்துவிடும்.
கொம்பு பல்லி என்றொரு இனபல்லிகள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் நேரத்தில் தங்கள் எதிரிகளிடமிருந்து தப்பிக்க கண்களில் அமைந்துள்ள மெல்லிய இரத்தக்குழாய்கள் வழியாக இரத்தத்தை வழிய விடுகின்றன. இதைப் பார்த்து பயப்படும் எதிரிகள் ஓடிவிடுகின்றன. இந்த உத்தியைப் பயன்படுத்தி இவை எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கின்றன.
அர்மடில்லோ பல்லி என்றொரு வகையான பல்லிகள் ஆபத்து ஏற்படும் சமயங்களில் ஒரு பந்து போல தங்கள் உடலை சுருட்டிக்கொள்ளும் தன்மை படைத்தவைகளாக உள்ளன.
பல்லிகள் அடிக்கடி ஒருவித ஓசையை எழுப்பும் வழக்கம் உடையனவாக உள்ளன. இந்தியாவில் காணப்படும் ஒருவகை பல்லி எழுப்பும் ஓசையானது மிகவும் அதிகத் தொலைவிற்குக் கேட்கிறது. இத்தகைய பல்லிகள் எழுப்பும் ஓசையானது சுமார் நூறு மீட்டர் தொலைவிற்குக் கேட்கிறது.
பல்லி இனத்தில் கொமோடோ டிராகன் (Komodo dragon) வகைப் பல்லிகளே அளவில் மிகப்பெரியதாக உள்ளன. இவை அதிகபட்சமாக சுமார் பத்து அடிகள் வரை வளர்கின்றன. இவை சுமார் 125 கிலோகிராம் எடையுடையவை.
பல்லி இனத்தில் பறக்கும் பல்லி என்றொரு இனம் இருக்கிறது. இந்தியாவில் கூட பறக்கும் பல்லிகள் காணப்படுகின்றன. இத்தகைய பறக்கும் பல்லிகள் மரத்திலேயே வாழ்கின்றன. இதன் உடலில் ஒருவித தோல் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இப்பல்லிகள் மேலிருந்து கீழே குதிக்கும்போது இந்த தோலானது விரிந்து ஒரு இறக்கைபோல மாறிவிடுகிறது. இதன் உதவியால் இந்த பல்லிகள் குதிக்கும் போது பறப்பதுபோலத் தோற்றமளிக்கும். பல்லிகள் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை வாழ்கின்றன.