

கோகுலாஷ்டமி பூஜையில் கண்ணனுக்கு பிரசாதமாக பழங்களும் படைப்போம். கண்ணனை போன்றே கரு நீல நிறத்துடன் திகழும் நாவல் பழம் மிக எளிய பொருள் எளிதான பொருளையும் ஏற்றி அருள்பவன்.
கண்ணன் ஒரு முறை கோகுலத்தில் வீதியில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி நாவற்பழம் விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு பிடி அரிசிக்கு ஒரு பிடி நாவல்பழம் என்று விற்றுக் கொண்டிருந்த அந்த பாட்டியை நோக்கி தளிர் நடை போட்டு வந்தான் குழந்தை கண்ணன்.
அவன் கைகளிலும் பிடி அரிசி. ஆனால் வரும் வழி முழுவதும் அரிசி சிந்திக் கொண்டே வந்தது மூதாட்டியிடம் வந்த கண்ணன் கையில் இருந்த அரிசியை அவர்களிடம் கொடுக்க புறப்பட்டபோது கையில் ஒன்றுமே இல்லை பாவமாய் பார்த்தான் குழந்தை கண்ணன். மிகவும் வறுமையான நிலையில் நாவல் பழம் விற்று பிழைப்பு நடத்தினாலும் கண்ணன் கேட்டதும் கைநிறைய நாவல் பழங்களை கொடுத்துவிட்டு வீடு திரும்பினாள் பாட்டி.
அந்த மூதாட்டி கைகள் அலம்பிவிட்டு அன்று சேகரித்த அரிசியை எடுக்க கூடையைத் திறந்தாள். என்ன ஆச்சரியம் கூடை முழுவதும் நகை பொற்காசுகள் நிறைந்திருந்தன. கண்ணனின் கருணையை நினைத்து மெய்யுறுக்கி போனாள் பாட்டி.
குட்டீஸ்களா இது மட்டும் இல்லை இன்னொரு சம்பவமும் இருக்கிறது..
கண்ணன் குழந்தையாய் இருந்தபோது நடந்த சம்பவம் இது. அவனது சுட்டித்தனம் பொறுக்காத யசோதை கண்ணனை உரலில் கட்டி போட்டு விட்டாள். உலகத்தை உருட்டி விளையாடும் பகவானுக்கு அந்த உரல் எம்மாத்திரம். உரலை இழுத்துக் கொண்டு தவழ ஆரம்பித்தான் கண்ணன். சிறிது நேரத்தில் உரல் இரு மரங்களுக்கு இடையே சிக்கிக் கொள்ள பலம் கொண்டு இழுத்தான் கண்ணன். அவ்வளவுதான் மரங்கள் இரண்டும் சரிந்தன. அவற்றிலிருந்து குபேரனின் மைந்தர்கள் இருவர் தோன்றி குழந்தை கண்ணனை வணங்கி நின்றனர். நாரதரின் சாபத்தால் மரங்களாகிய நின்றிருந்த அவர்களுக்கு கிருஷ்ணனால் சாப விமோசனம் கிடைத்தது..
பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஒருமுறை கண்ணன் அவர்களைப் பார்க்க கானகத்திற்குச் சென்றார். பலமான உபசரிப்புக்கிடையில் பீமன் கண்ணனுக்காக பழங்கள் பறிப்பதற்கு காட்டிற்கு செல்ல பாஞ்சாலி கிருஷ்ணன் நீராட வெந்நீர் சுட வைத்தாள்.
கண்ணன் பாண்டவர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். வெகுநேரமானது பாஞ்சாலி வெந்நீர் சுட்டு விட்டதா என தண்ணீரை தொட்டுப் பார்க்க தண்ணீர் ஜில்லென்று இருந்தது.
பாஞ்சாலி தர்மரிடம் விஷயத்தை சொல்ல மேற்கொண்டு விறகுகள் கொண்டு வந்து நன்றாக தீமூட்டினர் பாண்டவர்கள். இருந்தும் தண்ணீர் சுடுவதாக இல்லை. கண்ணனோ அனைத்தையும் சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் பாஞ்சாலி அவரிடமே தண்ணீர் சூடாகாமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டாள். பகவான் தண்ணீர் இருந்த பாத்திரத்தை கீழே கவிழ்த்து விடச் சொன்னார்.
அவர்களும் அது போலவே செய்ய உள்ளிருந்து ஒரு தவளை துள்ளி குதித்து ஓடியது. அனைவரும் அதை வியப்புடன் பார்க்க கண்ணன் அவர்களிடம் கூறினான், "பாஞ்சாலி நீ தண்ணீரை சுட வைக்க ஆரம்பித்ததும் அதனுள் இருந்த தவளை என்னை சரணடைந்து விட்டது. என்னை சரணடைந்தவர்களை காப்பாற்றுவது என் கடமை அல்லவா? அதனால் தான் தண்ணீர் சூடாகவில்லை" என்று பதில் உரைத்தார். கண்ணனின் கருணையை உணர்ந்து மெய் சிலிர்த்தனர் பாண்டவர்கள்.
குட்டி கண்ணனுக்கு செப்டம்பர் 4 அன்று ஹாப்பி பர்த்டே வருகிறது.. குட்டீஸ்களா நீங்களும் குட்டி கிருஷ்ணர் வேடமணிந்து ஜாலியா கோகுலாஷ்டமி -க்கு அம்மா நைவேத்தியத்திற்கு செய்யும் சீடை, முறுக்கு, தட்டை, அவல், நாவல் பழம் எல்லாம் சாப்பிட்டு கொண்டாடுங்கள்.