சிறுவர் சிறுகதை: கிருஷ்ண ஜெயந்தி பிறந்த கதை!

சிறுவர்களுக்கான கோகுலாஷ்டமி சிறப்பு கிருஷ்ண ஜெயந்தி பிறந்த கதை!
கிருஷ்ண ஜெயந்தி | Lord Krishna and Vasudevar and thevaki
கிருஷ்ண ஜெயந்தி | Lord Krishna and Vasudevar and thevakiImage credit: Chatgpt
Updated on

கிருஷ்ணர் தேவகியின் எட்டாவது குழந்தையாக, மதுரையில் உள்ள சிறைச்சாலையில் நள்ளிரவு நேரத்தில் அவதரித்தார். இதுவே கிருஷ்ண ஜெயந்தி நள்ளிரவில் கொண்டாடப்படுவதற்கு காரணம்.

மதுரையில் கம்சனின் சிறைச்சாலையில் தேவகியும் வசுதேவரும் துயரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நேரம் அது. தேவகியின் ஏழு குழந்தைகளையும் கம்சன் கொன்றுவிட்டான். எட்டாவது குழந்தை தன்னைக் கொல்லப் பிறக்கும் என்ற அச்சம் கம்சனின் மனதில் நிறைந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில், ஆவணி மாதத்தின் கிருஷ்ணபட்ச அஷ்டமி நள்ளிரவில், உலகமே எதிர்பார்த்திருந்த பரம்பொருளின் அவதாரம் நிகழ்ந்தது.

தேவகியின் கருவிலிருந்து குழந்தை பிறந்த அந்தக் கணத்தில், சிறைச்சாலை முழுவதும் தெய்வீக ஒளி பரவியதாக ஸ்ரீமத் பாகவதம் வர்ணிக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை சாதாரண மானிடக் குழந்தையாக இல்லை. தேவகியும் வசுதேவரும் தங்கள் கண்முன் நான்கு திருக்கரங்களுடன் கூடிய திருமாலின் தெய்வீக வடிவத்தை கண்டனர்.

நான்கு கரங்களிலும் என்னென்ன காணப்பட்டன தெரியுமா? மேல் வலது கையில் சக்கரம் – சுதர்சனம், மேல் இடது கையில், சங்கு – பாஞ்சஜன்யம், கீழ் வலது கையில், கதை – கௌமோதகி, கீழ் இடது கையில், தாமரை.

அந்தக் குழந்தையின் திருமேனி நீலமேகத்தைப் போன்ற அழகுடன் விளங்கியது. அவர் பீதாம்பரம் அணிந்திருந்தார். தலையில் கிரீடம், காதுகளில் குண்டலங்கள், மார்பில் ஸ்ரீவத்சக் குறி, கழுத்தில் கௌஸ்துப மணி ஆகிய திருமாலுக்குரிய அடையாளங்கள் காணப்பட்டதாக புராணம் கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
தெனாலிராமன் விகடகதை: கடன் தீர்ந்தது! 
கிருஷ்ண ஜெயந்தி | Lord Krishna and Vasudevar and thevaki

நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை ஏந்தியிருந்தார். அந்தத் தெய்வீகக் காட்சியைக் கண்ட தேவகியும் வசுதேவரும் ஆச்சரியத்திலும் பக்தியிலும் ஆழ்ந்தனர்.தேவகியும் வசுதேவரும் அவர் பரம்பொருளின் அவதாரம் என்பதை அறிந்தனர்.

அப்போது கிருஷ்ணர் தமது அவதாரத்தின் நோக்கத்தை அவர்களுக்கு உணர்த்தினார். தாம் ஏற்கெனவே பல பிறவிகளில் அவர்களுடன் தொடர்புடையவராக இருந்ததையும், இப்போது உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவர்களின் மகனாக அவதரித்திருப்பதையும் விளக்கியதாக பாகவதம் கூறுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி | Lord Krishna and Vasudevar
கிருஷ்ண ஜெயந்தி | Lord Krishna and VasudevarImage credit: Gemini AI

தேவகிக்கு மகிழ்ச்சியுடன் கலந்த அச்சமும் இருந்தது. “இவ்வளவு தெய்வீகமான வடிவத்தில் நீங்கள் இருந்தால், கம்சன் அறிந்துவிடுவானே” என்று அவள் கவலைப்பட்டாள். தன் குழந்தையை கம்சனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற தாய்மையின் உணர்வு அவளிடம் மேலோங்கியது. வசுதேவரும் அந்த தெய்வீகக் காட்சியைக் கண்டு வணங்கினார்.

பின்னர் தேவகியின் வேண்டுகோளுக்கிணங்க, கிருஷ்ணர் மானுட குழந்தை வடிவத்தை எடுத்தார். பிறகு, வசுதேவர் அவரை ஒரு கூடையில் வைத்து கோகுலத்திற்குக் கொண்டு சென்றார். அப்போது சிறைக்கதவுகள் திறந்தன;

காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் என்று கதை கூறுகிறது. அப்போது கிருஷ்ணர், தம்மை உடனடியாக கோகுலத்திற்குக் கொண்டு சென்று, அங்கு யசோதையின் அருகில் வைக்குமாறு வசுதேவருக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: சுதந்திரமாய் பறக்க விடு!
கிருஷ்ண ஜெயந்தி | Lord Krishna and Vasudevar and thevaki

இதுவே கிருஷ்ண அவதாரத்தின் தனிச்சிறப்பு. அவர் பிறந்த முதல் கணத்திலேயே தாம் பரம்பொருள் என்பதை வெளிப்படுத்தினார்; அடுத்த கணமே ஒரு தாயின் மடியில் தவழும் சிறு குழந்தையாக மாறினார். பரம்பொருளாகவும், பக்தர்களின் அன்பைப் பெறும் குழந்தையாகவும் ஒரே நேரத்தில் விளங்கியதே கிருஷ்ண அவதாரத்தின் அற்புதம்.

வசுதேவர் குழந்தை கிருஷ்ணரைத் தூக்கிக்கொண்டு யமுனையை அடைந்தார். அப்போது யமுனை பெருக்கெடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆதிசேஷன் குடையாக விரிந்து, கிருஷ்ணரையும் வசுதேவரையும் மழையிலிருந்து காத்தான்.

அதே இரவில் நந்தகோபரின் இல்லத்தில் யசோதைக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்தது. வசுதேவர் கிருஷ்ணரை அங்கு வைத்து, அங்கே இருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மதுராவிற்குத் திரும்பினார். அந்தக் குழந்தை பெண் குழந்தையாக இருந்ததால், கம்சன் அதை அழிக்க முயன்றான். ஆனால் அவள் அவனுடைய கைகளிலிருந்து தப்பி, தெய்வீக சக்தியாக வெளிப்பட்டு, “உன்னை அழிக்கப் பிறந்தவன் வேறிடத்தில் வளர்கிறான்” என்று அறிவித்தது. அதன்பிறகு கிருஷ்ணர் யசோதையின் மகனாக கோகுலத்தில் வளர்ந்தார்.

logo
Kalki Online
kalkionline.com