சீன தேசத்து நாட்டுப்புறக் கதை: பேராசையின் விளைவு!

Chinese folk tale for kids
Chinese folk tale for kids
Published on

முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்களும் ஏராளமான செல்வங்களும் இருந்தன. மகன்கள் மூவரும் தன் தந்தைக்கு உதவியாக இருந்து வந்தனர்.

அந்த செல்வந்தரிடம் ஓர் அடிமை இருந்தான். செல்வந்தர் அந்த அடிமை சொல்வதைக் கேட்டுதான் எல்லாச் செயல்களையும் செய்தார். அவன் சொல்வதைப் போலச் செய்தால், தன் செல்வம் பன்மடங்கு பெருகும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. அந்த அடிமையின் பேச்சைக் கேட்டு நடந்ததால்தான் தனக்கு இவ்வளவு செல்வமும் சேர்ந்தன என்று அவர் ஏனோ நம்பினார். இதனால் தன் மகன்களுக்கு மதிப்பளிக்காமல், அடிமையின் சொல்லுக்கே முன்னுரிமை தந்து செயல்பட்டார்.

இதையும் படியுங்கள்:
Managing a Nation’s Money and Planning the Budget
Chinese folk tale for kids

செல்வந்தருக்கு வயதானது; உடல் நலனும் குன்றத் தொடங்கியது. தான் இறப்பதற்கு முன்னால், தன் சொத்துக்களை உயிலாக எழுதி வைக்க விரும்பி அடிமையிடம் ஆலோசனை செய்தார். வஞ்சக எண்ணம் கொண்ட அந்த அடிமை, ஒரு திட்டம் தீட்டி அதன்படியே உயிலை எழுதச் செய்தான். சிறிது காலத்தில் அந்த செல்வந்தர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.

ஊரில் இருந்த பெரிய மனிதர் ஒருவர், செல்வந்தர் எழுதிய உயிலை அனைவரின் முன்னாலும் வாசித்தார்:

“எனக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் நானே உழைத்துச் சம்பாதித்தவை. எனவே, அதை என் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை எனக்கு உள்ளது. என் மகன்கள் மூவரும் எனக்குச் சொந்தமானவற்றில் இருந்து ஏதேனும் ஒரு பொருளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மீதமுள்ள அனைத்தும் என் அடிமையையே சேரும்.”

அடிமை இந்த உயிலை வஞ்சகமாகத் தனக்குச் சாதகமாக எழுதியிருந்ததை அறிந்த மகன்கள் கவலை அடைந்தார்கள். பின்னர் யோசித்தார்கள்.

  • முதல் மகன்: “எனக்கு இந்த விலையுயர்ந்த மாளிகை வேண்டும்,” என்று கேட்க, அது அவனிடம் தரப்பட்டது.

  • இரண்டாவது மகன்: “தந்தையின் கடைகள் எனக்கு வேண்டும்,” என்று கேட்க, உயில்படி அது அவனுக்குத் தரப்பட்டது.

இதையும் படியுங்கள்:
குட்டீஸ்களா! காந்திஜிக்குக் குழந்தைகளின் மீது எவ்வளவு பிரியம் தெரியுமா?
Chinese folk tale for kids

மூன்றாவது மகன் அறிவாற்றல் மிக்கவன்; எதையும் யோசித்துச் செயல்படுபவன். அவன் எதையாவது ஒரு பொருளைக் கேட்பான், அதை அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ள அனைத்துச் செல்வங்களையும் தானே அனுபவித்து, ஒரு முதலாளியாக வாழலாம் என்று அந்த அடிமை கனவு கண்டது.

மூன்றாவது மகன் தனது விருப்பத்தைக் கூறத் தொடங்கினான்:

“என்னுடைய தந்தைக்கு அடிமையாக இருந்த இவன், எனக்கும் வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருந்து பணி செய்ய வேண்டும். இதுவே நான் கேட்கும் ஒரு பொருள்!”

இதைக் கேட்ட அடிமை திடுக்கிட்டது. சட்டப்படி அந்த அடிமை மூன்றாவது மகனுக்குச் சொந்தமானதால், அந்த அடிமையிடம் சேர வேண்டிய அத்தனைச் செல்வங்களும் தானாகவே மூன்றாவது மகனுக்கே வந்து சேர்ந்தன.

நம்பிக்கைத் துரோகம் செய்து, பேராசைப்பட்ட அந்த அடிமை, தன் விதியை எண்ணி நொந்தவாறு மூன்றாவது மகன் இட்ட பணிகளைச் செய்து கடைசி வரை அடிமையாகவே வாழ்ந்து வந்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com