
பரந்து விரிந்து கிடக்கின்ற இந்த உலகத்தில் மக்கள் ஏராளம். அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் எண்ணிலடங்காதவை. இப்படிப்பட்ட வேதிப்பொருட்களைப் பற்றி அறிந்து கொள்ள வேதியியல் உள்ளது. இதற்கு ரசாயனவியல் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் கெமிஸ்ட்ரி Chemistry என்று அழைக்கிறார்கள்.
'வேதிப்பொருட்கள் இல்லாத உலகம் வெறுச்சோடிபோய்விடும்' என்பது பழமொழி. மனித வாழ்க்கையில் இரண்டறக் கலந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன வேதிப்பொருள்கள். இப்படிப்பட்ட வேதியியலில் அடங்கி இருக்கும் வேதிப்பொருட்கள் நமது மனித வாழ்வில் எவ்வளவு முக்கிய பங்கு வைக்கிறது என்பதனைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய் காண்போம்.
நாம் சாப்பிடும் உணவு இரைப்பைக்கு சென்று அங்கு இருக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் சீரணிக்கப்படுகிறது. இது ஒரு சீரணத் திரவம் ஆகும். இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் செறிவு பொதுவாக 0.082M என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அமிலத்தின் செறிவு 0.1 M என்ற அளவிவை விட அதிகமாகும் போது அமிலத்தன்மை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. இது மனித இரைப்பையில் இருக்கும் ஒரு மகத்தான அமிலம் ஆகும். இந்த அமிலம் சீரணிக்கப்படுவதால் மட்டுமே நம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
தேர்தல் சமயத்தில் நமது கையில் ஆள்காட்டி விரலில் மை வைக்கும் பழக்கம் இன்று வரை உள்ளது. அந்த மையானது அழிவதற்கு பத்து நாட்களுக்கு மேல் ஆகும். இப்படி அந்த மை அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால் அதில் இருக்கும் சில்வர் நைட்ரேட் என்ற ஒரு வேதிப்பொருள் மட்டுமே.
இந்த மை விரலில் வைக்கும் போது நீல நிறத்தில் இருக்கும். பிறகு கருப்பு நிறத்தில் மாறிவிடும் இது அழியாமல் சில நாட்களுக்கு இருக்கும். இதன் மூலம் ஒருவர் அவருடைய வாக்கை செலுத்தி விட்டார் என்பதற்கு அடையாளமாக வைக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் மையினை கர்நாடகாவில் உள்ள (Mysore paint and varnish limited) நிறுவனம் தயாரித்துக் கொடுக்கிறார்கள். ஒரு குப்பியில் 10ml மை மட்டுமே இருக்கும். இதனை 700 நபர்களுக்கு பயன்படுத்தலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைடு மழை நீரில் கரைந்து இருப்பதன் காரணத்தால் சாதாரணமாக மழை நீரின் பிஹெச் மதிப்பு 5.6 ஆக உள்ளது. மழை நீரின் பிஹெச் மதிப்பு 5.6க்கு கீழ் குறையும் போது அது அமில மழை என்று அழைக்கப்படுகிறது.
காற்று மண்டலத்தில் உள்ள சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மேகங்களில் உள்ள நீர் திவலைகளால் உறிஞ்சப்பட்டு முறையே கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலமாக மாற்றப்படுவதால் இது அமில மழை என அழைக்கப்படுகிறது. அமில மழை என்பது வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளின் பக்க விளைப் பொருளாகும். நிலக்கரி போன்ற புதை படிம எரிபொருட்களை எரித்தல், அனல் மின் நிலையங்கள் மற்றும் உலைகளில் எண்ணெய்களை எரித்தல் வாகன இயந்திரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை எரித்தல் ஆகியவை சல்பர் டையாக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. அமில மழையானது, கட்டடங்கள் மற்றும் பளிங்கு கட்டமைப்பு பொருட்களின் மீது அதிகமான பாதிப்பை உருவாக்குகிறது.
மனித வாழ்க்கையானது வேதிப்பொருட்களுடனே நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வேதிப்பொருட்களானது நன்மை செய்யும் விதத்திலும், தீமை செய்யும் விதத்திலும் இருக்கிறது. இவை இல்லாமல் வாழவும் முடியாது! சாகவும் முடியாது! என்று தான் சொல்ல வேண்டும். மனித உடலில் இருக்கும் அமிலமாகவும், புற்றுநோய் சிகிச்சைக்கு மருந்தாகவும், தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் மைகளிலும், சாப்பிடும் உணவுப் பொருட்களிலும், மருத்துவத்துறைகளிலும், தொழிற்சாலைகளிலும், கதிரியக்க ஐசோடோப்புகளிலும், எழுது பொருட்களிலும், அமில மழைகளிலும், பழங்களிலும் மற்றும் பல்வேறு வகைகளில் இந்த வேதிப்பொருள்களானது மனிதன் மரணிக்கும் வரை பயன்பாட்டில் இருக்கும். எதையும் அளவோடு பயன்படுத்தினால் வளமோடு வாழலாம்.