
இந்து மதம் மற்றும் இந்தியாவின் கலாசார மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் சுவாமி விவேகானந்தர். அவருடைய இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. 1863ஆம் வருடம் ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். 1985ஆம் ஆண்டு முதல் இவருடைய பிறந்த தினமான ஜனவரி 12, ‘தேசிய இளைஞர் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது.
வங்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட விவேகானந்தர், சிறு வயது முதலே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராக இருந்தார். ஒரு முறை படித்ததை, புத்தகத்தைப் பாறாமல் அப்படியே திருப்பிச் சொல்வாராம். 16வது வயதில் கல்கத்தாவில் மாநிலக் கல்லூரியில் சேர்ந்த அவர், பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவம் பயின்றார். கல்லூரியில் சிறந்த மற்றும் எல்லோராலும் விரும்பப்படும் மாணவனாகத் திகழ்ந்தார். அவர் படித்த கல்லூரி பேராசிரியர் வில்லியம் ஹேஸ்டி கூறினார் “நரேந்திரன் ஒரு மேதை. ஜெர்மன் பல்கலைக் கழகங்களில் கூட நரேந்திரனைப் போன்ற தத்துவங்கள் அறிந்த மாணவனைப் பார்த்ததில்லை. நிச்சயம் இவன் வாழ்க்கையில் சிறந்து விளங்குவான்.”
புகழ் பெற்ற ஆங்கில தத்துவவாதி ஹெர்பர்ட் ஸ்பென்சர் அவர்களின் நாத்திக வாதத்தால் ஈர்க்கப்பட்டார் விவேகானந்தர். மேலை நாட்டுத் தத்துவங்கள், வரலாறு ஆகியவற்றைப் படித்த அவருக்கு பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன.
பல மதங்கள், பலர் இறைவனை வழிபடுகின்றனர். அப்படி இருந்தும் உலகில் ஏன் ஏற்றத் தாழ்வுகள். இது முரண்பாடாக அவருக்குத் தோன்றியது. இதைப் பற்றி பலரிடம் விவாதித்தார். அப்போது பிரபலமாக இருந்த பிரம்மசமாஜத்தில் சேர்ந்தார். ஆனால், அவர் மனதில் இருந்த கேள்விகளுக்கு அவருக்கு விடை கிடைக்கவில்லை. இராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு, 1881ஆம் ஆண்டு அவரை சந்தித்தார். அவரின் போதனைகளை முதலில் அவரால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. உருவ வழிபாடு அல்லது அருவ வழிபாடு ஆகிய இரண்டு வழிகளும் உள்ள உண்மைகளை அவரின் மூலமாக அறிந்த விவேகானந்தர், பக்தி மார்க்கம் மற்றும் ஞான மார்க்கம் ஆகிய இரண்டின் அவசியத்தையும் புரிந்து கொண்டார்.
1886ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின்னர், விவேகானந்தரும், மற்ற சீடர்களும் துறவிகளாயினர். அப்போதுதான் நரேந்திரன் என்ற பெயரை விவேகானந்தர் என்று மாற்றிக் கொண்டார். தன்னுடைய சீடர்களில் விவேகம் மிகக் கொண்டவர் என்பதால், இராமகிருஷ்ணர், இந்த பெயரை சூட்டியதாகவும் சொல்கிறார்கள். அடுத்த நான்கு வருடங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்தார் விவேகானந்தர். இது இந்தியாவின் பல தரப்பட்ட பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவியது.
24 டிசம்பர் 1892ஆம் வருடம் கன்னியாகுமரி சென்றடைந்த விவேகானந்தர் கடலின் நடுவே இருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தியாவின் கடந்த காலம், நிகழ் காலம், மற்றும் எதிர் காலம் குறித்து தியானம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இங்குதான் விவேகானந்தர் ஞானம் பெற்றார் என்றும் கூறப்படுகிறது! அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையில், அவருடைய நினைவாக ‘விவேகானந்தர் பாறை நினைவகம்’ 1970ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இந்தியாவின் பிரதிநிதியாக அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த “உலகிலுள்ள அனைத்து மதங்களின் பாராளுமன்றம்” என்ற நிகழ்ச்சியில் இந்து மதம் பற்றி உரையாற்றினார் விவேகானந்தர். அந்த மாநாட்டில், இந்திய கலாசாரம், மேலை நாட்டுக் கலாசாரத்தை விடச் சிறந்தது என்றார். எனென்றால், இந்திய கலாசாரம் ஆன்மிகத்தை தழுவியது. ஆனால் மேலை நாட்டு கலாசாரம், காணும் பொருளே உண்மை என்னும் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டது. அவருடைய சொற்பொழிவுக்கு சிறந்த வரவேற்பு இருந்தது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகை, விவேகானந்தரின் சொற்பொழிவு மாநாட்டிலேயே சிறந்த சொற்பொழிவு என்று எழுதியது. பல நாட்கள் தங்கி, அமெரிக்கா முழுவதும் இந்து மதத்தைப் பற்றி உரையாற்றினார். இந்துமதம் மற்றும் யோகா ஆகியவற்றை அமெரிக்காவில் பரப்பியவர் விவேகானந்தர்.
இளைஞர்களை ஊக்குவிக்க பல புத்தகங்களை எழுதினார். இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த விவேகானந்தர் கூறினார். “100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன்.” இளைஞர்களுக்கு அவருடைய அறிவுரை, “எழுந்திருங்கள், விழித்திருங்கள், இலக்கை அடையும் வரை அயராது உழைத்திருங்கள்” என்பதே.
இந்தியா முழுவதும் இராமகிருஷ்ண மடங்களை ஸ்தாபனம் செய்தார். இதன் கிளைகள் தற்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. 1902ஆம் வருடம் ஜூலை 4ஆம் தேதி, தன்னுடைய 39வது வயதில் பேலூரில் காலமானார் சுவாமி விவேகானந்தர்.