

புள்ளிமான், கஸ்தூரிமான், கலைமான் என மான்களில் பல வகைகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் காணப்படும் சருகுமான்களைப் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. அபூர்வமான சருகுமான்களைப் பற்றி இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ளுவோமா குட்டீஸ் ?
இந்திய புள்ளிச் சருகுமானின் அறிவியல் பெயர் Moschiola indica ஆகும். இவை Tragulidae குடும்பத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும்.
சருகுமான்கள் அளவில் மிகச்சிறியவை. இவை பார்ப்பதற்கு பெரிய எலியைப் போல காணப்படுகிறது. இதனால் இவற்றை ஆங்கிலத்தில் மௌஸ் டீர் (Mouse Deer) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலப் பெயரான மௌஸ் டீர் என்பதனை அப்படியே மொழிப்பெயர்ப்பு செய்து ‘எலிமான்' என்றும் இவற்றை அழைக்கின்றார்கள்.
ஆதிவாசிகள் இவ்வகை மான்களை 'கூரன்பன்றி' என்று அழைக்கிறார்கள். கேளரத்தில் மலையாளத்தில் இதனைக் 'கூரன்' என்று அழைக்கிறார்கள். சருகுமான்கள் குளம்புள்ள ஒரு உயிரினமாகும்.
உலகில் உள்ள குளம்புள்ள உயிரினங்களில் இவை மிகச்சிறிய அபூர்வமான உயிரினமாகும். இவை தென்கிழக்கு ஆசியக் காடுகளில் காணப்படுகின்றன. மேலும் இலங்கை, தென் இந்தியா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீஹார் முதலான காடுகளில் இவை காணப்படுகின்றன. சருகுமான்கள் பொதுவாக தனித்தோ அல்லது இணைகளாகவே வாழ்கின்றன. இவற்றின் முக்கிய உணவு புற்கள் மற்றும் இலைகளாகும்.
சருகுமான்கள் எழுநூறு கிராம்கள் முதல் அதிகபட்சமாக எட்டு கிலோ அளவு எடை உடையவை. பிற மான்களைப் போல இவற்றிற்கு கொம்புகள் கிடையாது. ஆனால் சிறிய வால் மட்டும் காணப்படும்.
பொதுவாக மான்களுக்கு நான்கு அறைகளைப் கொண்ட வயிறு அமைந்திருக்கும். ஆனால் சருகுமான்கள் மூன்று அறைகளைக் கொண்ட வயிறைப் பெற்றுள்ளது அதன் தனித்துவமாகும். இவை அனைத்து மான்களுக்கும் முன்னால் தோன்றிய (Primitive) ஒரு உயிரினமாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக பழுப்பு நிறத்திலும் உடலின் மேற்பகுதியில் மஞ்சள் தூவியது போலவும் கீழ்ப்பகுதியில் வெள்ளையாகவும் காணப்படும். இவை காடுகளில் தரைப்பகுதியில் சருகுகளின் இடையில் படுத்திருக்கும்.
இவற்றை எளிதில் நம்மால் பார்க்க முடியாது. இவற்றின் உடலின் மேற்புற நிறம் பழுப்பாக சருகு நிறத்தை ஒத்திருப்பதால் இவை சருகுகளின் இடையில் மறைந்து வாழ்கின்றன. இந்தியாவில் காணப்படும் மான் இனங்களில் அளவில் மிகச்சிறிய இனம் இந்த சருகுமான். இவைற்றின் உயரம் சுமார் முக்கால் அடி முதல் ஒரு அடி மட்டுமே இருக்கும். ஆண் சருகுமான்களுக்கு கோரைப்பற்கள் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு ஒரு சிறிய தந்தம் போல காணப்படும்.
சருகுமான்களில் மொத்தம் நான்கு இனங்களே உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகளின் பயனாக தற்போது உலகெங்கும் மொத்தம் பத்து இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை மிக வேகமாக மறைந்து கொள்ளும் ஆற்றலுடையவை. பிறருடைய கண்களுக்கு எளிதில் புலப்படாதவை. சருகுமான் ஒரு இரவாடி விலங்கு. இதன் காரணமாக இவை பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இரை தேடும் இயல்புடையவை. பகலில் சருகுமானைக் காண்பது மிகவும் கடினமாகும்.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சருகுமான்கள் உள்ளன. நீங்கள் ஒருமுறை சென்று சருகுமான்களை நேரில் பார்த்து மகிழுங்களேன்.